சாஹோ படத்தில் வரும் மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களைப் பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மதன் கார்க்கி, “பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், புது வரிகளுக்கு எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்த இயக்குநர் சுஜீத் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் ‘மழையும் தீயும்’ என்ற பாடல்.
இதில் மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகக் கதாநாயகனைத் தீயாகவும், கதாநாயகியைத் தண்ணீராகவும் சித்தரித்திருக்கிறேன். பிங்க் நிறத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் புதிய பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘பூவிற்குள் ஒளிந்திருக்கும்’ பாடல் போன்று உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ரசிக்கும்படி இருக்கும்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இயக்குநர் சுஜீத் பேசுகையில், “என்னை நம்பி இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்ததற்கு வம்சி மற்றும் பிரோமோத் அண்ணாவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நடிகர் பிரபாஸ் அண்ணாவுடன் பணியாற்றியது சிறுவர்களுடன் அமர்ந்து முதல் முறையாக 3D படம் பார்ப்பது போலிருந்தது. இப்படத்தில் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியைப் போல் பழகினோம். நான் பெரும்பாலான நேரங்களில் அவரது வீட்டிலேயே தங்கிவிட்டேன். நானும் அவரது வீட்டிலேயே தங்கி விடுகிறேன் என்று என் அம்மா என்னை பலமுறை கேலி செய்திருக்கிறார். சாஹோ படத்தில் இடம் பெற்ற பாடலின் தமிழ் அர்த்தம் எனக்குச் சரியாகத் தெரியாது. அது தெரிந்த பின்பு, கதையின் முழு அர்த்தமும் பாடல் வரிகளில் நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்தேன். இப்படியொரு பாடல் வரிகளைத் தந்ததற்கு மதன் கார்க்கி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்னேஷ் சிவன் எனது சகோதரர் போல, அவர் எழுதிய பாடல் வரிகள் ஆச்சரியமாக இருந்தன. அவர் இப்படத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஷங்கர் மகாதேவன் அவர்கள் மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கிறார் அவருக்கும் நன்றி” என்று கூறினார்.
நடிகர் பிரபாஸ் பேசுகையில், “உண்மையெது பொய்யெது பாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறோம். இப்படத்தின் முக்கியக் கருத்தை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. அதனால் இப்படத்தின் முழுப் பாடலையும் நீங்கள் படத்தில் பார்க்கலாம் ஏனென்றால் அது கதையைப் பாதிக்கும் என்று கருதுகிறோம். இந்தப் பாடல் மூன்றுவித களமுடன் இதுவரை யாரும் பார்த்திராரத லோகேஷன்களில் காட்சிப்படுத்திருக்கிறோம். இந்தப் பாடல் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். பாகுபலி படத்திலிருந்தே எனது நெருங்கிய நண்பராக இருந்த மதன் கார்க்கியும், ஷங்கர்-எஹ்சன்-லாயும் எனக்கு சிறப்பான பாடல்களைத் தந்துள்ளனர். இப்படம் பாகுபலி போன்று அனைவரையும் கவரும்படி நிச்சயம் இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் இந்த வருடம் ஆகஸ்ட் 30ஆம் தேதி “சாஹோ” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஸ்ரொப், நெய்ல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணீலா கிஷோர், பிரகாஷ் பெலாவாடி, எவெலின் ஷர்மா, சுப்ரீத் லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டின்னு ஆனந்த் மாறும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கென்னி பாட்ஸ், பெங் ழங், திலிப் சுப்புராயன், ஸ்டன்ட் சில்வா, பாப் பிரவுன் மற்றும் ராம்-லக்ஷ்மன் இப்படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிடிங் செய்துள்ளார். சாபு சீரில் தயாரிப்பு மேற்பார்வை பார்த்துள்ளார். RC கமலக்கண்ணன் விஷுவல் எபக்ட்ஸ் செய்துள்ளார். வைபாவி மெர்ச்சன்ட் மற்றும் ராஜு சுந்தரம் நடன இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்குப் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சுஜீத் அவர்கள். பிரம்மாண்டமான பொருட்செலவில் “சாஹோ” படத்தை UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்ஷி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.