Shadow

சான்றிதழ் விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் கருவறை கிராமத்திற்கு சிறந்த கிராமத்திற்கான மத்திய அரசின் விருது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட, ஊர்மக்கள் அந்த விருதை ஜனாதிபதியே இங்கு வந்து தங்களுக்கு வழங்கவேண்டும், இல்லையென்றால் விருதைப் புறக்கணிப்போம் என்று கூறுகின்றனர். அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த மந்திரி காரணமே இல்லாமல், ‘என்னையே எதிர்க்கிறீர்களா? இருங்க உங்களைப் பழிவாங்குகிறேன்’ என்று வெளியேறி எந்த ஆணியையும் புடுங்காமல் இருக்க, காரணமேயில்லாமல் அவரின் கரை வேஷ்டி பிடுங்கப்பட, காரணமேயில்லாமல் கண்டக் கண்ட கதாபாத்திரங்கள் எல்லாம் கதைக்குள் வர, காரணமேயில்லாமல் ஜனாதிபதி கொடுக்கவேண்டிய விருதை கவர்னர் கிராமத்திற்கே வந்து கொடுத்துவிட்டுப் போவதோடு முதல்பாதி முடிவடைய, காரணமேயில்லாமல் இரண்டாம் பாதி முழுக்க தறுதலை கிராமம் எப்படி கருவறை கிராமமாக மாறியது என்பதை விளக்கு விளக்கு என்று விளக்க, காரணமேயில்லாமல் இத்தனை காரியங்கள் நடக்கிறதே என்று பார்வையாளர்களுக்கு உச்சந்தலையில் உஷ்ணம் ஏற, இவ்வளவு உணர்வலைகளை உள்ளடக்கியதாய் உருவாகி இருக்கிறது இந்த சான்றிதழ் திரைப்படம்.

ஒரு கிராமம், முன்மாதிரி சிறந்த கிராமமாக உருவாகி மத்திய அரசின் விருதைச் சான்றிதழோடு பெற வேண்டும் என்றால் 11 விதிகள் அவசியம் என்கிறார் சான்றிதழ் படத்தின் இயக்குநர் ஜே.வி.ஆர். அவையாவன,

ஒன்று, உள்ளிருப்பவர்கள் வெளியே போக முடியாதபடி, வெளியில் இருப்பவர்கள் உள்ளே வர முடியாதபடி இரண்டு இரும்புக் கதவுகளை கிராமத்தின் முன் வாசல் மற்றும் பின்வாசலில் அமைத்துக் காவலுக்கு ஆள் நிறுத்தவும். இரண்டு, ஊரெங்கும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். மூன்று, பள்ளி செல்லும் குழந்தைகள் தங்கள் புத்தகப்பைகளை நடந்தே சுமந்து வர வேண்டும். இது வாழ்க்கையின் பாரத்தைச் சுமப்பதற்கான வலிமையை அவர்களிடம் உருவாக்கும். நான்கு,6 மணிக்கு மேல் யாருமே டிவி சீரியல் பார்க்கக்கூடாது. ஐந்து, டாஸ்மாக் என்னும் பெயரை பாஸ்மார்க் என்று மாற்றி ஒரு நாளைக்கு ஒரு கட்டிங் மட்டுமே ஆண்களுக்குக் கொடுக்க வேண்டும். அதை மீறிக் கேட்பவர்களுக்கு காசை வாங்கிக் கொண்டு சரக்கு என்ற பெயரில் கூல்டிரிங்க்ஸ் ஊத்திக் கொடுக்க வேண்டும். ஆறு, பொது இடத்தில் மலம் கழிக்கக்கூடாது. ஏழு, தவறு செய்பவர்களைக் கண்காணிக்க ட்ரோன் பறக்கவிட வேண்டும். எட்டு, அதையும் மீறி தவறு செய்பவர்களைத் தண்டிக்க தனி அறை ஒன்று கட்ட வேண்டும். அங்கு ஆண் பெண்களை பாகுபாடு இன்றி ஒன்றாக அடைத்து வைக்க வேண்டும். ஒன்பது, யாருக்கும் சாதி சான்றிதழ் இருக்கக் கூடாது. பத்து, யாருக்கும் கள்ளக் காதல் இருக்கவே கூடாது. பத்து, நம் வரவு செலவுகளை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தக் கணக்கு வழக்குகளில் எல்லாரும் பங்கெடுக்க வேண்டும். பதினொன்று, உடற்பயிற்சி கூடங்கள் அமைத்து உடற்பயிற்சி மற்றும் உள்ளத்திற்கான யோகப் பயிற்சி செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். அவ்வளவே! இந்த 11 விதிகளைக் கடைப்பிடித்தால் மத்திய அரசின் விருது நிச்சயம்.

மக்கள் இந்தக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் காற்றில் பறக்கவிடுவார்கள். அவர்களை வழிக்கு கொண்டு வரவும் படத்தில் வழி சொல்லி இருக்கிறார்கள். மேற்சொன்ன நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு முன்பாக, அந்த கிராமம் பெயரில் மட்டுமல்ல கிராம மக்களின் செயலிலுமே தறுதலை கிராமமாக இருந்தது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் தறுதலை கிராமம் குடியும் குடித்தனமுமாக இருந்தது. அதாவது அந்தக் கிராமத்தின் கணவன்மார்கள் எப்பொழுதும் குடி குடி என்று இருக்க, அந்தக் கிராமத்தின் மனைவிமார்கள் வேறு வேறு ஆண்களோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பெண்கள் காதலித்துக் கொண்டும், செல்ஃபோனில் பேசிக் கொண்டும் இருக்க, சிறுவர்கள் அனைவரின் கைகளிலும் ஃபோன் மட்டுமே இருந்தது. பள்ளிகளில் சாதி பார்த்து குழந்தைகளை பெஞ்சில் உட்கார வைக்காமல் தரையில் உட்கார வைத்தனர். இவர்களை மாற்றி பாரம்பரியத்தைக் காப்பாற்ற வெள்ளைச்சாமி என்பவர் ஒற்றை ஆளாகப் போராடிக் கொண்டிருந்தார். பள்ளியில் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரின் குஞ்சை அறுத்து வீசி எறிந்தார். டாஸ்மாக்கைப் பூட்டு போட்டு பூட்டினார். கடன்பட்ட மக்களின் துயர் துடைக்க தன் சொத்தை விற்று உதவ முன் வந்தார். ஊரெங்கும் தன் சொந்த செலவில் சிசிடிவி அமைத்தார். புல்லட்டில் வந்து, போவோர் வருவோருக்கெல்லாம் புத்திமதி சொன்னார். ஆனாலும் மக்களிடம் மாற்றம் வரவே இல்லை.

குடித்துவிட்டுத் திரியும் கணவன்மார்களால் தான் மனைவிகள் தடம் புரண்டு போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி தன் மனைவியே தடம் புரண்டு போனதை கண்டு உடைந்து போனார். தன் மனைவியின் கள்ளக்காதலனை கொல்லப் போன இடத்தில் மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொண்டு தன்னைக் கொல்ல வர, அவர்கள் இருவரையும் கொன்ற வெள்ளைச்சாமி, இந்த மக்கள் திருந்தாதது கண்டு, மனம் மாறாதது கண்டு மனம் வெதும்பினார். மக்கள் முன் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்தார். இதைக் கண்டு பதறிப் போன மக்கள் அடுத்த நொடியே மாறி அற்புதமான கருவறை கிராமத்தை கட்டமைத்தனர். விருதையும் வென்றனர். வெள்ளைச்சாமியாக ‘மதுரை சம்பவம்’ ஹரிகுமார் நடித்துள்ளார்.

அந்த வெள்ளைச்சாமி (பூவே உனக்காக), பாட்டு பாடி ஊரையே அச்சுறுத்துபவர், இந்த வெள்ளைச்சாமியோ ஊரையே திருத்திவிடுகிறார். ஆகவே மக்களே, வெள்ளைச்சாமியின் தியாகத்தை மெச்சி, தறுதலையாகத் திரியாமல் இருக்கும் இடத்தைக் கருவறையாக மாற்றினால், சான்றிதழ் உறுதி என்றறிக!

– இன்பராஜா ராஜலிங்கம்