Shadow

LGM விமர்சனம்

தங்களுக்குள் காதல் ஒத்துவருமா என்று தெரிந்து கொள்ள 2 வருட அக்ரிமென்ட், கல்யாணம் செய்து மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்வது ஒத்து வருமா என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு ட்ரிப். இது தான் LGM இன் கதை.

இந்தியக் கிரிக்கெட்டின் இன்றைய அடையாளமாகவும், சென்னையின் தவிர்க்கமுடியாத அடையாளமாகவும் மாறி இருக்கும் தல தோனியின் தோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தோனியின் மனைவி ஷாக்ஷி தோனி தயாரித்திருக்கும் திரைப்படம் LGM என்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைத் திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது என்பதே உண்மை.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கெளதம், மீராவிற்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் செட் ஆகுமா என்பதைத் தெரிந்து கொள்ள நவீனகால யுக்தியான 2 வருடம் பழகிப் பார்க்கும் கான்செப்டை கையில் எடுக்கிறார்கள். ஒரு வழியாக இருவருக்கும் ஒத்துப் போகும் என்று பரஸ்பரம் புரிந்து கொண்டு, இரு வீட்டாரின் சம்மதமும் கிடைக்கப் பெற்று, கல்யாணப் பேச்சு வார்த்தை தொடங்கும் போது புதிய சிக்கல் முளைக்கிறது. அது திருமணத்திற்குப் பின்னர் மாமியாருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் என்னும் சிக்கல்.

இளம் யுவதிகள் திருமணத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் தயாரானதுமே எதிர்கொள்ளும் சமகாலச் சிக்கல் தான் இது என்கின்ற விதத்தில் கதையின் கரு அதிகமாக கவனம் ஈர்க்கிறது. அந்தக் கதைக்கருவை இன்றைய காலத்திற்கு ஏற்றபடி சிறப்பான திரைக்கதையாக மாற்றியிருப்பதிலும் படக்குழுவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

படத்தின் முதல் பாதியில் இரண்டு வருட ஒப்பந்தத்தின் முடிவில், தன் காதலை ஏற்றுக் கொள்ளுவாளா இல்லையா என்று ஹரிஷ் கல்யாண் தவிக்கும் தவிப்பும், அது சக்சஸாக அமையும் சமையத்தில் அதைக் கொண்டாட ஹரிஷின் நண்பர்கள் ஒப்பனை அறையில் கையில் கேக்குடன் காத்துக் கொண்டிருக்கும் தருணமும் ரசனை. தன் காதலை தன் தாயிடம் சொல்வதற்கு ஹரிஷ் கல்யாண் கையாளும் செயல்முறைகளும், அதற்கு அவர் தாய் நதியாவிடம் இருந்து வரும் எதிர்வினைகளும் சிரிப்பை வரவழைக்கின்றன. குடும்பத்தோடு ட்ரிப் செல்வதற்கு தன் தாயையும், குடும்ப உறவுகளையும் தயார்படுத்தும் முன்நடவடிக்கைகளும், இந்த எல்லாச் சூழல்களிலும் உடன் பயணிக்கும் ஹரிஷ் கல்யாணின் நண்பர்கள் அடிக்கும் லூட்டிகளும் அட்ராசிட்டிகளும், ட்ரிப் போகும் வண்டியை ஓட்டும் டிரைவராக வரும் யோகி பாபுவின் அலப்பறைகளும் முதல் பாதியைக் கலகலப்பாக்குகின்றன.

இரண்டாம் பாதியில் ட்ரிப்பில் இருந்து ஹரிஷ் கல்யாணும் ஏனைய கூட்டமும் கழற்றிவிடப்படும் போது, தொடர்ச்சியாக கதை எப்படி பயணிக்கப் போகிறது என்கின்ற ஆவல் எழுந்தது. இரண்டாம் பாதியில் நாம் எதிர்பாராத கோணத்தில் கதை பயணிக்கிறது. இவானாவும் நதியாவும் ஒருவர் மற்றவரின் அபிமானத்தைப் பெற வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லாமல் அவர்களின் இயல்போடு இருப்பதும், பேசிப் பழகத் தான் ட்ரிப் என்று கூறிவிட்டு ஷாப்பிங் செய்வதும், சாப்பிடுவதும், பப்புக்கு செல்வதும், ஒருவர் மாற்றி ஒருவர் குற்றம் கூறி குறைபட்டுக் கொள்வதும், ஒருவருக்கொருவர் ஒத்துப் போகாது என்று தெரிந்திருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டிற்குள் அவர்கள் வாழத் தயாராவதும், இயல்புத்தன்மை மாறாத மிக யதார்த்தமான முடிவாகப் படத்திற்கு அமைந்திருப்பது சிறப்பு.

இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் தங்கள் மாமியார்களை எதிர்கொள்வதில் இருக்கும் ஒவ்வாமைகள் மற்றும் தலைமுறை இடைவெளியினால் மாமியார் – மருமகள் இவர்களுக்குள் இருக்கும் சிக்கல் எனப் பேசுவதற்கு மிகப் பெரிய பேசுபொருள் கிடைத்திருந்தும், அதை க்ரிஞ்சியாகப் பேசாமல், பிடிக்காது தான் ஆனாலும் விட்டுக் கொடுத்துதான் வாழ வேண்டும், அது வாழ்க்கையின் கட்டாயம் அல்ல, வாழ்க்கையின் தேவை என்பதை இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் உணர்த்துகிறது படத்தின் க்ளைமாக்ஸ்.

கலகலப்பான ஜனரஞ்சகமான குடும்பத்தோடு பார்க்கும் படமாக LGM-ஐக் கொடுக்க வேண்டும் என்கின்ற முனைப்பு காட்சியமைப்புகளில் நன்றாகவே தெரிகிறது. அந்த முயற்சிக்கு முழு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

ஹரிஷ் கல்யாணுக்குப் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார். பனிப்போர், இவானாவிற்கும் அம்மாவாக வரும் நதியாவிற்கும் தான் என்பதால் அவர்கள் இருவருக்கும் தான் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பதற்கான வாய்ப்பு. அதை இருவரும் மிகச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். யோகி பாபு முடிந்தவரைக்கும் தன் டைமிங் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். ஆர்ஜே விஜய் வரும் காட்சிகளில் எல்லாம் கலகலப்பு மூட்டுகிறார். விக்கல்ஸ் ரீல்ஸ் பிரபலங்கள் பாட்டில்கள் நிரம்பிய பேக்கோடு டிரிப்பிற்கு வரும் இடம் அதகளம். இவர்கள் தவிர்த்து விடிவி கணேஷ், இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் பெயரளவில் படத்தில் இருக்கிறார்கள்.

படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்தும் இருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி. பாடல்களை விட பின்னணி இசை தரம். குறையாகப் பார்த்தால் தேவையற்ற கதாபாத்திரங்களைத் தவிர்த்து நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். இன்றைய இளம்பெண்களின் சமகால உளவியல் பிரச்சனையைப் பேசும் திரைப்படமாகவும் குடும்பத்தோடு பார்த்து குதூகலிக்கும் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது LGM திரைப்படம். தல தோனிக்கு இந்த முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்.

– இன்பராஜா ராஜலிங்கம்