கலிஃபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரின் பூர்வீகம் கர்நாடகம் ஆகும். 14 வயதான இவருக்கு, முக்கியமாக இவரின் குரலுக்கு கலிஃபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம்.
ஹிதாவின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார். அதை ஏற்றுக் கொண்டு, இவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் மகேந்திர சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரெளண்டில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகம் இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியைக் காணக் கூடி இருந்தனர். ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு மயங்கினர். மேலும் இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாகப் பாடிய 4 பாடல்களுக்கு குழந்தைகள் ஆட்டம் போடத் தொடங்கிவிட்டனர்.
இவரின் நிகழ்ச்சி முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று கிட்டதட்ட 10 நிமிடம் கைதட்டிக் கொண்டிருந்தது பாப் இசை கலைஞர் ஹிதாவைப் பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் பாட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.