‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
அவ்விழாவில் பேசிய கதையின் நாயகன் பிரஷாந்த் பேசுகையில், ” ‘அந்தகன்’ அருமையான படைப்பு. இந்தத் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது.
இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு இயக்குநர் கனி சாருடன் பேசினார். அவரும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு வருகை தந்தார். அவர் ஒரு நேர்த்தியான தொழில்முறை நடிகர்.
இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன், ‘எனக்கு மூன்று வார கால அவகாசம் கொடுங்கள். நான் தற்போது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதனை நிறைவு செய்துவிட்டு, உங்கள் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அவர் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இப்படி ஒரு தீவிர பற்றுள்ள நடிகரா என நான் அவரை வியந்து பார்த்தேன்.
நான் ஒவ்வொரு நேர்காணலிலும் தவறாது குறிப்பிடும் விஷயம், ‘ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வேன், கற்றுக் கொண்டே இருக்கிறேன்’ எனக் குறிப்பிடுவேன். அந்த வகையில் சமுத்திரக்கனி ஐயாவிடமிருந்து நடிப்பின் மீதான தொழில்முறையிலான பெரு விருப்பத்தைக் கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக நான், சிம்ரன், பிரியா, பெசன்ட் ரவி ஆகியோர் இணைந்து பயணித்தோம். அப்போது என் ஃபோனில் ஒரு குரல் ஒலித்தது. ‘எங்கே இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டார். ‘நாங்கள் இந்த ஊரில் இருக்கிறோம்’ எனச் சொன்னேன். ‘நீங்கள் மட்டும் ஏன் தனியாகப் பயணிக்கிறீர்கள்? நானும் உங்களுடன் இணைகிறேன்’ எனச் சொன்னார் அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் சமுத்திரக்கனி. அவருக்கு இந்தத் தருணத்தில் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த ஆதரவிற்காகவும், எங்கள் மீது அன்பு செலுத்துவதற்காகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும் சிம்ரனும் இதுவரை ஆறு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் எனக்குக் கிடைத்த அற்புதமான சக நடிகை. எனக்கு உற்ற நண்பி. அற்புதமான நடனக் கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். இதுதான் இந்தப் படத்தில் சிறப்பம்சம் எனக் குறிப்பிடலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் நடிகர்கள் திறமையாக நடித்திருப்பார்கள். இதை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கும் போது நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.
பிரியா ஆனந்த், திறமையான சக நடிகை. படப்பிடிப்புத் தளத்தில் அனைவரையும் உற்சாகமாக வைத்திருப்பார். படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியை பரவச் செய்வார்.
வனிதா விஜயகுமார், என் உடன் பிறந்த சகோதரி போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார். இந்தப் படத்தை எப்படி எல்லாம் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதில் நிறைய ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்ததை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.
நடிகர்களைக் கடந்து ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், கலை இயக்குநர் செந்தில் ராகவன், இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள். ஆனால் அவர்களது செயல் பேசும்.
யோகி பாபு, மோகன் வைத்யா, ஊர்வசி என பலருடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது.
அருமையான மனிதரை இந்த படத்தில் சந்தித்தேன். அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். முழுப் படத்தையும் அவர்தான் உயர்த்தி பிடித்திருக்கிறார். அவர்தான் கார்த்திக். அவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன். அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் அவர் வருகை தந்தாலே உற்சாகம் பீறிடும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. இந்த நண்பர்கள் தினத்தின் எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என்னுடைய தந்தையார் தியாகராஜன். மிகச் சிறந்த மனிதர். தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜனுக்கும், எனது தங்கை பிரீத்தி தியாகராஜனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று ‘அந்தகன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும்” என்றார்.
இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அந்தகன் படம் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.