உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இசையமைப்பாளர் ஜீ. வி பிரகாஷ், ”இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன். பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் பாருங்கள். கேளுங்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் ஆகியோருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் கொடுத்த இந்த வாய்ப்பினை நான் சிறப்பாகப் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘தங்கலான்’ படத்தில் இணைந்திருக்கிறேன்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் மிகப் பெரிய கனவுப் படைப்பு இது. இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானவேல் ராஜா, அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.