அந்தகன் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பார்வையற்றவன் என்று பொருள். ‘அந்தாதுன்’ எனும் ஹிந்திப் படத்திற்கு உரிமை வாங்கு, பிரஷாந்தை கதையின் நாயகனாக நடிக்க வைத்து இயக்கியுள்ளார் தியாகராஜன்.
‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் தியாகராஜன், ”இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம். உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்புத் தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம்.
சமுத்திரக்கனி, அந்த காலகட்டத்திய என்னை நினைவுப்படுத்துபவர். தோற்றம் ஆகட்டும், உடல் மொழியாகட்டும், உடற்கட்டு ஆகட்டும், ஸ்டைல் ஆகட்டும், நடை ஆகட்டும். ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால், நடிப்பில் சிங்கம் தான். இந்தப் படத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் அதிலும் சிம்ரனை மிரட்டி இருக்கிறார். வனிதா விஜயகுமாரை மிரட்டி இருக்கிறார்.
அந்தக் குறிப்பிட்ட காட்சியில் எமோஷன் வேண்டும் என்பதற்காகத்தான் வனிதாவை அழைத்து, ‘உனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டு’ எனச் சொன்னேன். அந்தத் தருணத்தில் சொல்லத் தகாத வார்த்தைகளை எல்லாம் பேசினார். சென்சாரில் கட்டாகுமே எனக் கேட்டார்கள், ‘பரவாயில்லை காட்சி இயல்பாக போகட்டும்’ என்றேன். இந்தப் படத்தில் வனிதா விஜயகுமாருக்கு, அற்புதமான நடிகை என்ற அங்கீகாரம் கிடைக்கும்.
பிரியா ஆனந்த், அழகான தமிழ்ப் பெண். இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்வது என்பது குழப்பமாக இருந்தது. அப்போது என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பிரியா ஆனந்த் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன். தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
சிம்ரன், பிரசாந்துடன் இதற்கு முன் ஆறு படங்கள் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் உரிமையை வாங்கிய பிறகு ஏன் இந்தப் படத்தில் சிம்ரனை நடிக்க வைக்கக் கூடாது என யோசித்தேன். இது தொடர்பாக நான் அவரிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசிய போது, ‘நான் இந்திப் படத்தை பார்த்து விட்டேன். அதனால் நான் நடிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் சற்று லெளடாக நடித்திருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில், ‘ஏன் இப்படி நடிக்க வேண்டும்? சட்டிலாக (subtle) நடிக்கலாம் என்றிருந்தேன்’ என்றார். ‘இந்தக் கதாபாத்திரம் அப்படி நடித்தால்தான் நன்றாக இருக்கும்’ என்று நான் சொன்னேன். அதை ஏற்றுக் கொண்டு அவர் ஆக்ரோஷமாக நடித்தார். அவருடைய பேச்சு, வன்முறை எல்லாம் ஒரு ஆணை போல் இருக்கும். படம் வெளியான பிறகு சிம்ரனுக்கு விருது கிடைக்கும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் விட சிம்ரனுக்குச் சிறப்பான பெயரும் புகழும் கிடைக்கும்.
பிரஷாந்த், பியானோ வாசிக்கும் கலைஞர். இந்தத் திரைப்படத்தை வாங்குவதற்கு முக்கிய காரணமே கதையின் நாயகன் பியானோ இசைக்கலைஞர் என்பதால் தான். நான் இந்தத் திரைப்படத்தின் உரிமையை வாங்கி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்கள் யார் என்பதனை நிதானமாக யோசித்துத் தேர்வு செய்யத் தொடங்கினேன். அதன் பிறகு படத்தின் பணிகளைத் தொடங்கினோம். இடையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இரண்டு ஆண்டுகள் சென்றன. அதன் பிறகு எதிர்பாராத சில சிக்கல்கள் ஏற்பட்டது. அதன் பிறகு படத்தை நிறைவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து ஒரு பாடலை உருவாக்கத் திட்டமிட்டோம். பிரபுதேவா அதற்கான காட்சிகளை உருவாக்க சாண்டி மாஸ்டர் நடனத்தை அமைத்தார். அந்தப் பாடலை அனிருத், விஜய் சேதுபதி பாடினர். விஜய் வெளியிட்டார். இப்பாடல் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்தப் பாடலில் பிரசாந்தின் நடனத்தைப் பலரும் நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.
இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காகப் பயணித்த போது பிரஷாந்தின் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதனால் பிரஷாந்த் மனவருத்தம் அடைந்தார். உடனே இது தொடர்பாகத் தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணிக்கும் போது தலைகவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தக் கூடாது எனச் சிந்தித்தார். அத்துடன் நில்லாமல் பிரஷாந்தின் பிறந்த நாளின் போது தமிழகம் முழுவதும் 5000 தலை கவசத்தினை அவரது ரசிகர்களுக்கு வழங்கினார்.
கே.எஸ். ரவிக்குமார் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சட்டிலான வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். பிறகு மற்றொரு சஸ்பென்ஸ் வரும். இதையெல்லாம் கடந்து என்ன நடக்கிறது, என்ன ஆச்சு, இது உண்மையா, பொய்யா என பல கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழும்.
நானே அந்த இந்திப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அதே போன்றதொரு உணர்வு தமிழ்த் திரைப்படத்தை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு வரும். அதனால் இந்தத் திரைப்படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள்.
பெசன்ட் ரவி, பிரஷாந்த் நடிக்கும் படத்தில் அவர் இருக்க வேண்டும் என விரும்புவேன். இந்த திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஊர்வசி, என்னுடன் ‘கொம்பேறி மூக்கன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நான் தயாரித்து பிரஷாந்த் நடித்த ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். சொன்னவுடன் வந்து நடித்துக் கொடுத்தார். அவரும், யோகி பாபுவும், கே.எஸ். ரவிகுமாரும், பிரஷாந்த்தும் இணைந்து தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். சுவாரசியமானதாகவும் இருக்கும்.
மறைந்த நடிகர் மனோபாலா, ஜெயம் கோபி, விஜேந்தர், பூவையார், லீலா சாம்சன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
‘அந்தகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே ஆரோக்கியமான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நானூறு திரையரங்குகளில் ‘அந்தகன்’ திரைப்படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளோம். இதற்கும் கூடுதலாக வெளியிடுவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமுடன் இருக்கிறார்கள்” என்றார்.