Shadow

சிறுவன் சாமுவேல் விமர்சனம்

‘முதல் கன்னியாகுமரி படம்’ என்ற விளம்பரத்துடன், மே 12 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. குழந்தைகளின் அக உலகைப் பிரதிபலிக்கும் முதல் தமிழ்ப்படம் என்று கூட இப்படத்தை அடையாளப்படுத்தலாம்.  

சிறுவன் சாமுவேல், ஒரு கிரிக்கெட் பேட் வாங்க ஆசைப்படுகிறான். அப்பா சவட்டி (மொத்தி) எடுக்க, சாமுவேல் மனம் நொறுங்குகிறது. ஐநூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட பந்தடிக்கும் மட்டை (Cricket bat) கிடைக்குமெனக் கேள்விப்படுகிறான். சாமம், தானம், பேதம் என்ற முதல் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றி, கார்டுகளைச் சேகரிக்க முயல்கிறான் சிறுவன் சாம். அவனது ஆசை பலித்து, அவனால் புது கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

பதினெட்டு நாளில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்திற்கு, லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் செய்துள்ளனர். வடக்கு கன்னியாகுமரியின் வட்டார வழக்கை ‘டப் (Dub)’ செய்வது கடினம் என்பதால் நேரடி வசனப்பதிவிற்குச் சென்றுள்ளனர். சப்-டைட்டில் இல்லாமல், புரிவதற்கு சற்றே சிரமம் எனுமளவுக்கு, மலையாள நெடி தூக்கலாக உள்ள தமிழாக உள்ளது.

சுந்தர ராமசாமியின் ‘ஸ்டாம்ப் ஆல்பம்’ எனும் சிறுகதைதான், இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷன். இலக்கியங்களில், எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து வட்டார வழக்கைப் பயன்படுத்தி வருவதைப் பார்த்துக் கவரப்பட்டு, தனது படத்திலும் அம்முயற்சியை எடுக்கத் துணிந்துள்ளார் இயக்குநர் சாது. நூறு சதவிகிதம் வசனங்கள் புரியாவிட்டாலும், படத்தின் கதாமாந்தர்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளனர். நிலப்பரப்பைக் கதையின் களமாகக் காட்சிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வட்டார மொழியிலும் எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாததால், மிகுந்த நம்பிக்கையுடன் ‘முதல் கன்னியாகுமரி படம்’ என தனது படத்தை முன்வைக்கிறார் இயக்குநர் சாது. 

சிறுவன் சாமுவேலாக நடித்த அஜிதன் தவசிமுத்துவும், ராஜேஷாக நடித்த K.G.விஷ்ணுவும் படத்தின் ஷோ ஸ்டீலர்ஸாக உள்ளனர். அஜிதனின் மருட்சியான பார்வையும், ராஜேஷின் கண்களில் தெரியும் குறும்புத்தனமும் படத்திற்குப் பேரழகைச் சேர்க்கிறது. தொடர்ந்து பெரியவர்களால் மட்டுப்படுத்தப்படும் சாம் குறைவாகப் பேசுபவராகவும், அனைவருடனும் நேசாபாவத்துடன் பழகும் ராஜேஷ் வெளிப்படையாகப் பேசுபவராகவும் உள்ளனர். அவர்களுக்கிடையேயான நட்புத்தான் படத்தின் ஆதாரம். அதற்குத் தங்கள் நடிப்பின் மூலமாக உயிரளித்துள்ளனர் பொடியர்கள் இருவரும்.

பொடியன், குட்டே (குட்டி/சிறுமி), பசுமை, மலை, மழை, ட்யூஷன் அக்கா, ஈரம், வாழைத் தோட்டம் என வண்ணமயமான ஃப்ரேம்களால் நிரம்பியுள்ளன படம். தொண்ணூறுகளின் இறுதியாண்டுகளில் நடப்பது போல் பீரியட் ஃபிலிமாக எடுக்கப்பட்டுள்ளது இப்படம். மலையாளப் படத்தின் டப்பிங் என இப்படத்தைப் பற்றி வதந்தி பரவினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒளிப்பதிவாளர் V. சிவானந்த் காந்தி கிடைத்த வாய்ப்பினை நிறைவாகப் பயன்படுத்தி மாயம் செய்கிறார். 95 நிமிடங்களுக்குள் அது நிகழுமாறு தொகுத்துள்ளார் எடிட்டர் S.A. அஜித் ஸ்டீஃபன். சிறுவன் சாமுவேல் தன் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, க்ளைமேக்ஸில் ஓடி வரும் காட்சி உலகசினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்றாக இருக்கும். இசையமைப்பாளர்கள் J. ஸ்டான்லி ஜான், மனோ எனும் சாம் எட்வின் மனோகர் ஆகியோர் பின்னணி இசையின் மூலமாகக் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளனர். 

எதனாலும் திருப்தியடையாமல் விரக்தியில் உழலும் ஓர் உலகம்; ஒரு திண்பண்டம், Big Fun பபுள் கம்முடன் வரும் ஒரு கிரிக்கெட் கார்ட், இரவு உணவாகக் கிடைக்கும் பரோட்டாவும் இறைச்சியும் என சின்னச் சின்ன விஷயங்களில் பேருவகை கொள்ளும் மற்றுமோர் உலகம். குழந்தைகளின் மனதைப் பதியும் முயற்சி என இயக்குநர் சாது சொன்னாலும், பெரியவர்களின் மனமும் படம் நெடுகே வெளிச்சமிட்டுக் காட்டப்படுகிறது. ‘அவன் கண்ணைப் பார்த்தாலே தெரியலையா கள்ளன் என்று? ஒன்றரை பவுன் மோதிரத்தை அவன்தான் எடுத்திருப்பான்’ என எந்த முகாந்திரமும் இன்றி ராஜேஷ் எனும் சிறுவன் மீது, ஒரு பெண்மணி பழி போடுகிறார். எவனோ, ஏதோ சொன்னதற்காகப் பெற்ற மகனை விளாச கையில் கழியை எடுக்கிறார் ஓர் அப்பா. ‘சின்ன பொடியனுவோ கிளாஸை கட் அடிச்சுட்டு கிரிக்கெட் வெள்ளாட வந்தாச்சா?’ என பழித்துக் காட்டிக் கொண்டே குச்சியை ஓங்குகிறார் பி.டி. மாஸ்டர். பெரியவர்கள் உலகில் சிறுவர்களாக இருப்பது எத்தனை கொடுமையான விஷயம்?

உலகப்படங்கள் மீதான நமது ஈர்ப்பிற்கு என்ன காரணம்? ஏதோ ஒரு சிறு பொறியில், எல்லைகளை மறந்து அந்த மனிதர்களோடும், அந்த வாழ்வியலோடும் கனெக்ட் ஆகிவிடுகிறோம். அந்த ரசவாதத்தை இப்படம் பார்வையாளர்கள் மீது நிகழ்த்துகிறது. The more regional the story, the more Universal it is என்பதே உலக சினிமாவுக்கான இலக்கணம். அதைப் பரிபூரணமாகப் பூர்த்தி செய்துள்ளது படம்.

(தமிழ்நாடெங்கும் 20 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் இப்படத்தை, வாய்ப்புள்ள சினிமா ஆர்வலர்கள் தவற விடாமல் கண்டு ரசியுங்கள்.)