Shadow

குலசாமி விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பிரபலங்களுக்கு ஆசை நாயகியாக மாற்ற முனைந்த பேராசியரியைப் பற்றிய வழக்கு. அந்த வழக்கை கதையின் முக்கிய மையச்சரடாகக் கொண்டு விமலுக்கு ஒரு தங்கச்சி எமோஷ்னலைப் புகுத்தி, ஓர் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் ஷரவண சக்தி.

மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலருக்குப் பாலியல் ரீதியிலான அழுத்தம் வருகிறது. மேலும் பெண்களைக் கொடூரமாகக் கற்பழிக்கும் நபர்கள், மிகக் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். விமல் மேற்படியுள்ள சம்பவங்களில் எப்படி லிங்க் ஆகிறார் என்பதாக விரிகிறது குலசாமியின் திரைக்கதை.

விமல் அழுகை, சோகம், கோபம் என அவருக்கே உரித்தான அரிதாரங்களை களைத்துப் போட்டு இப்படியான சோக அவதாரத்தில் ஆடியிருக்கிறார். விளைவு? தேக்கமான அவரது ஸ்கிரீன் ப்ரசெனஸ் படத்திற்குள் நம்மை இணங்க விடமாட்டேன் என்கிறது. நாயகி தான்யா ஹோப் கேரக்டர் எழுதப்பட்ட விதமும், அவரது சோகம் ததும்பிய முகமும் படத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. போஸ் வெங்கட், முத்துப்பாண்டி, வினோதினி ஆகியோர் கவனிக்க வைத்தாலும் மற்ற நடிகர்கள் அநியாயத்திற்குச் சொதப்பியுள்ளார்கள். குறிப்பாக வில்லன் டீம் செய்திருப்பது ரசிக வதம்.

பின்னணி இசையில் இசையமைப்பாளர் மொத்தமாகச் சொதப்பியுள்ளார். ‘ஏதோ கதை சொன்னாங்க, ஏதோ மியூசிக்னு ஒன்றைக் கொடுப்போம்’ என்ற மனநிலையில் வேலை பார்த்தாரோ என்னவோ? ஒளிப்பதிவிலும் நேட்டிவிட்டியோ புதுமையோ எதுவுமில்லை. எடிட்டிங் ஏரியா டோட்டல் லாஸ். படத்தில் க்ளோசப் ஷாட்களில் கூட லிப்-சிங்க் பிரச்சனை. ஒரு நல்ல திரைக்கதையாகச் சொல்லப்பட்டிருந்தால், படத்திலுள்ள பெருங்குறைகள் கூடக் கண்ணுக்குத் தெரியாது. திரைக்கதை ஆக்கமும், காட்சி அமைப்புகளும் மிகவும் பழைய நெடியில் இருப்பதால் டெக்னிக்கலாக உள்ள சிறுசிறு குறைகள் கூடப் பெரிதாகத் தெரிகிறது.

நல்ல கருத்தைச் சொல்வது என்ற முடிவு மட்டும் ஒரு நல்ல சினிமாவிற்குப் போதாது. அந்தக் கருத்து நேர்த்தியான திரைமொழியோடு சொல்லப்பட வேண்டும். அதை மொத்தமாகத் தவறவிட்டு, குலசாமியைப் பலமற்றவராக்கி விட்டது படக்குழு.

– ஜெகன் கவிராஜ்