மரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், அனிருத்தின் குரலில் “கனா” படத்தில் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார்.
“அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்தப் பாடல் பதிவின் முழு அமர்விலும் நாங்கள் மிகப் பாசிடிவாக உணர்ந்தோம். அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது” என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கனா’ படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புறப் பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. “நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்தோம். வழக்கமாகப் பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதைப் பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறோம்” என்கிறார் திபு.
மேலும், அனிருத் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். இந்த அழகான நாட்டுப்புறப் பாடல் வரிகளைப் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்கப் படமாக்கப்படுகிறது. தர்ஷன் ஐஸ்வர்யாவைக் காதலிக்கிறார், அவர் தனது காதலி ஐஸ்வர்யாவை நேசிப்பதை சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
புதிதாகத் துவங்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தக் கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் கனா படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது.
‘சிவகார்த்திகேயன்’ சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கையின் மூன்று முக்கிய தூண்களான இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி.இமான் ஆகியோர் இந்தப் படத்தின் இசையை வெளியிடுவார்கள் என அறிவித்திருந்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு கௌரவ விருந்தாளியாக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவரே இசையை வெளியிடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அருண்ராஜா காமராஜின் கனா ஒரு உண்மைக்கதை அல்ல. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராகச் சாதிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் கனவைச் சொல்லும் ஒரு கற்பனையான படம்.