Shadow

ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்

Smurfs the lost village review

அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது எனத் தவறான கற்பிதம் உள்ளது. ஆனால், ‘ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ்’, முற்றிலுமே குழந்தைகளுக்கான ஒரு படம். ஏனென்றால் ஸ்மர்ஃப்ஸ் 1 & 2 போல், இது லைவ் ஆக்ஷனுடன் கலந்த அனிமேஷன் படமன்று. முதல் இரண்டு பாகங்களுக்குச் சம்பந்தமில்லாத தனி படம் என்பதோடு, வண்ணஜாலம் நிகழ்த்தும் முழு அனிமேஷன் படம்.

ஒரு தொலைந்த கிராமத்தைச் சாகசப் பயணமொன்றில் கண்டுபிடிக்கிறார்கள் ஸ்மர்ஃபெட்டும் அவளது மூன்று நண்பர்களும். கதையாக, ஒரு வரியில் சொல்லும் பொழுது இருக்கும் சுவாரசியம் கூட திரைக்கதையில் இல்லை. அதனால் என்ன? 90 நிமிடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக வைத்திருப்பதோடு, அவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது படம். ‘பெட் டைம் மூவி (Bed time movie)’ என்று கூட இப்படத்தை வகைப்படுத்தலாம். 

ஆண்களால் நிறைந்த ஸ்மர்ஃப்ஸ் உலகில், களி மண்ணில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்மர்ஃபெட்டுக்கு, தனது அடையாளம் குறித்த விசனம் உள்ளது. அவள் காட்டில் கண்டுபிடிக்கும் தொப்பி ஒன்று, ஸ்மர்ஃப்ஸ்களின் தொலைந்து போன கிராமம் ஒன்றைப் பற்றி மந்திரவாதி கார்கெமல் அறிந்து கொள்ள உதவுகிறது. கார்கெமலிடம் இருந்து, தடை செய்யப்பட்ட காட்டில் வாழும் ஸ்மர்ஃப்ஸ்களைக் காப்பாற்ற நினைக்கிறாள் ஸ்மர்ஃபெட்.

Smurf BlossomSmurfetteஅந்தக் காட்டில் வாழும் ஸ்மர்ஃப்ஸ், அனைவருமே பெண்கள். ‘ஆண் (Male)’ என்ற சொல்லையே கேட்டிராதவர்கள் அவர்கள். ‘இவர் என் பாப்பா (Papa)’ என அவர்களிடம் அறிமுகம் செய்கிறாள் ஸ்மர்ஃபெட்டி. அவர்கள் அதன் அர்த்தம் புரியாமல், அவரை ‘Papa thing’ என அழைப்பது நல்ல வேடிக்கை. அனைவரும் கார்கெமலிடம் பிடிபடுகிறார்கள். ‘நீ ஒரு போலி ஸ்மர்ஃப்’ என கார்கெமல் ஸ்மர்ஃபெட்டை மட்டும் விட்டுவிடுகிறான்.

ஸ்மர்ஃபெட் எப்படி கார்கெமலிடம் இருந்து அனைவரையும் காப்பாற்றுகிறாள் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

படம் ஒரு ‘தேவதை கதை (Fairy Tale)’ போல் பயணிக்கிறது. அதற்குக் காரணம், திரைக்கதையாசிரியர்களான ஸ்டேசி ஹார்மன், பமீலா ரிபன் இருவருமே பெண்கள் என்பது காரணமாக இருக்கலாம். இது ஸ்மர்ஃபெட்டை மையப்படுத்திய கதை. அவளது நற்குணத்தையும், தியாக உணர்வையும்தான் முழுப்படமும் பிரதிபலிக்கிறது.

Azrael cat

படத்தில் மூன்று விஷயங்கள் கண்டிப்பாகப் பெரியவர்களையும் கவரும். ஒன்று, ப்ரெய்னி ஸ்மர்ஃபிற்குத் துணையாக வரும் ஸ்நாப்பி வண்டு. அந்த வண்டு புகைப்படம் எடுக்கவும்; எடுத்த புகைப்படத்தை ஸ்கேன் செய்தது போல் வரையவும் திறன் பெற்றது. இரண்டாவது, கார்கெமல் வளர்க்கும் அஸ்ரேல் பூனை. மூன்றாவது, இருட்டில் ஒளிரும் முயல்கள்.

குழந்தைகள், காலத்தின் கட்டாயத்தால் பெரியவர்களின் உலகில் வாழத் தொடங்கிவிட்டனர். ஒன்றரை மணி நேரம் அவர்களைக் குழந்தைகளாக வைத்திருக்க நல்லதொரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது இப்படம்.