Shadow

சோலோ இசை – ஒரு பார்வை

Solo music review

வாயை மூடி பேசவும்‘, ‘ஓ காதல் கண்மணி‘ ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் நேரடி மூன்றாவது தமிழ்த் திரைப்படம் “சோலோ”. தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அக்டோபர் 5 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார்.

சோலோ – ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இதில் துல்கர், ருத்ரா (பூமி), சிவா (நெருப்பு), சேகர் (நீர்), திரிலோக் (காற்று) என நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு 11 இசையமைப்பாளர்களை பிஜாய் நம்பியார் நாடியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. தமிழில் அவர் இயக்கத்தில் வெளியான டேவிட் படத்திலும் இத்தகைய முறையையே கையாண்டார்.

துல்கரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப “சிவாவின் உலகம்”, “சேகரின் உலகம்”, “ருத்ராவின் உலகம்” என்று பிரிக்கப்பட்டு பாடல்கள் வெளியிட்டு உள்ளனர்.

World of Rudra:

Prashant Pillai1. ரோஷோமோன் – ஒரு fast paced பாடல், செம டெம்போ. பிரஷாந்த் பிள்ளை இசையமைத்து, அஸ்வின் கோபகுமார், அருண் காமத், நிரஞ் சுரேஷ் ஆகியோர் இணைந்து நன்றாகவும் எனர்ஜெட்டிக்காகவும் பாடியுள்ளனர். பாடலைக் கேட்கும் பொழுது நீங்களும் உங்களை மறந்து ‘ரோஷோமோன் ரோஷோமோன்’ எனப் பாடி உற்சாகமடைவீர்கள்.

2. சஜன மோரே கர் ஆயே – “ஃபில்டர் காஃபி” என்னும் ஒரு பேண்டின் இசையில் ஒரு ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் ஃப்யூஷன். ஜான்வி ஸ்ரீமன்கர் சஜன்-க்கு என்ன இனிமையான குரல்!! இவர் பல்லவியைத் தொடங்க அனுபல்லவியை ஸ்வரூபா ஆனந்த் தொடர்கிறார். ஒரு மேஜிக்கல் சாங். கண்ணை மூடிக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டியது தான். இப்பாடல் கேட்கும் பொழுது, எப்படிப் படமாக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் கற்பனையையும் கிளிறி விடுகிறது.

3. சீதா கல்யாணம் – சூரஜ் குரூப் இசையமைத்திருக்கும் இப்பாடலை அவரோடு இணைந்து ரேணுகா அருண் பாடியுள்ளார். ‘அட தியாகராஜ கீர்த்தனை தான!’ என்று என்னி நீங்கள் முடிப்பதற்குள் இப்பாடலை வேறு ஒரு பரிமாணத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் சூரஜ். சில ஆங்கில வரிகளோடு தொடங்கி எங்கோ நம்மைக் கடத்திச் செல்கிறார். சூரஜ் மற்றும் ரேணுகா இருவரும் ஒரு ரொமான்டிக் மனநிலையை நம்முள் கொண்டு சேர்த்துள்ளனர்.


World of Shiva:

4. ஆள் ஆயாள் – அழகான ஒரு மலையாள கிளாசிக்கல் பாடல். சூரஜ் சந்தோஷ் மற்றும் வருண் சுனில் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளனர். இவர்கள் இருவரும் மசாலா கஃபே என்னும் ஒரு பேண்டைச் சார்ந்தவர்கள். ரிப்பீட் மோடில் சுழல வைக்கும் பாடலிது.

5. ஐகிரி நந்தினி – கோவிந்த்தும் மீராவும் பாடியுள்ள இப்பாடல், துல்கரின் கோபம், பழிவாங்கும் குணம் கொண்ட சிவா கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தும் பாடல் போலுள்ளது.

6. ஷிவ் தாண்டவ் – பாடகர் சாயலே தல்வால்க்கர் இப்பாடலைப் பாடியுள்ளார். ஹிந்திப் பாடல் வரிகள் தான் என்ற போதும் அந்தக் குரல் ஒன்றே போதும்! அனைத்தையும் மறந்து நம்மை ரசிக்க செய்கிறது.

World of Shekar:

7. சிங்கக்குட்டி – ‘என்னடா ஒரு கிளாசிக்கல் பாடல்களா இருக்கே?’ என்ன ஃபீல் பண்ணுவோர்க்குச் சின்ன பொண்ணு குரலில் ஒரு குத்துப்பாட்டு. குத்து மற்றும் ராப் என்று கலந்து செம்மையாக கொடுத்துள்ளனர் கோவிந்த் மேனனும் சித்தார்த் மேனனும். இந்தப் பாடல், “ஏ சிங்கம் போல நடந்து வரான்” என்ற பாடலை நினைவு கூர வைக்கிறது. இது காலேஜ் பசங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கும்.

8. தூவானம் – விஜய் யேசுதாஸ் குரலில் இந்த இனிமையான மெலடி பாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இப்பாடலுக்கு அபினவ் பன்சால் இசையமைத்துள்ளார்.

Sooraj Santhosh - Saylee Talwalkar

9. தேவதை போல் ஒருத்தி – அகம் என்னும் ஒரு பேண்ட் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளது. ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் இப்பாடலைப் பாடியுள்ளார். ஒரு ரொமான்டிக் நம்பர். பழைய பாடல்களை நினைவுப்படுத்துவது போல இருப்பினும், நல்ல பீட் கொண்ட பாடல். ஹரிஷின் குரல் ஒரு நல்ல மூடை (மூட்) நம்முள் கொண்டு வருகிறது.

10. உயிராகி – அகம் குழுமத்தின் இசையில் இன்னொரு அழகான பாடல். இப்பாடலுக்கு மனு மஞ்சித் வரிகள் எழுதியுள்ளார். சாஷா திருப்பதி பாடியுள்ளார். தேவதை போல் ஒருத்தியின் ஃபீமேல் வெர்ஷன் இப்பாடல்.

சோலோ ஒரு மியூசிக்கல் ட்ரீட் என்றே கூற வேண்டும். கிளாசிக்கல், ஹிந்துஸ்தானி ஃப்யூஷன், குத்து, ராப், மெலடி என அனைத்து ரகங்களிலும் பாடல்களை வாங்கியுள்ளார் பிஜாய் நம்பியார்.

சோலோ இசை: 4/5

– இரகுராமன்