
ஸ்பிலிட் என்றால் ஆளுமைப் பிளவு எனப் பொருள் கொள்ளலாம்.
கெவின் என்பவருக்குள் மொத்தம் 23 ஆளுமைகள் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவரான டென்னிஸ், மூன்று இளம்பெண்களைக் கடத்தி விடுகிறார். அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதுதான் படத்தின் கதை.
முகத்தில் அறையும் ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் இல்லையெனினும், படம் பார்வையாளர்களை ஒரு சங்கடமான மனநிலையிலேயே வைக்கிறது. மைக் ஜியாலாகிஸின் (Mike Gioulakis) ஒளிப்பதிவு மனதோடு விளையாடுகிறது. பெண்கள் அடைக்கப்பட்ட மூடிய அறை, கம்மியான வெளிச்சம், பிரதான கதாபாத்திரமான ஜேம்ஸ் மேக்-அவாயின் (James McAvoy) உடை நிறம், வெஸ்ட்டைலன் தார்ட்சன்னின் பின்னணி இசையென, படம் கலவையாக ஒரு பதற்றமான ஆர்வத்தை உண்டு செய்கிறது.
சுவாரசியமான கதையாக இல்லாவிட்டாலும், ப்ளாஷ்-பேக் யுக்திகளால் திரைக்கதையைச் சுவாரசியப்படுத்தியுள்ளார் மனோஜ் நைட் ஷ்யாமளன். கேஸியின் சிறு பிராயத்து அத்தியாயங்களும் மனதில் ஒரு கிலியை உண்டாக்குகின்றது. குறிப்பாக சிறு வயது கேஸியாக நடித்திருக்கும் இஸி காஃபியின் (Izzie Coffey) கண்கள் எதையோ சொல்ல முற்பட்டவண்ணமுள்ளது. நெருங்கிய உறவினர்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் என்று கேள்வியுறும் பொழுதே மனம் பதறத் தொடங்கிவிடும். அதை மனோஜ் நைட் ஷ்யாமளன் தொட்டும் தொடாமலும் லேசாகக் கையாண்டாலும், பார்வையாளர்கள் பதற்றத்தில் இருந்து தப்பிக்க இயலாது.
கேஸியாக நடித்திருக்கும் அன்யா டெய்லர் அட்டகாசமான கதாபாத்திரத் தேர்வு. சிறுவனான ஹெட்விக் எனும் ஆளுமையிடம் பேசி, கேஸி ஜன்னல் இருக்கும் அறைக்குச் சென்று ‘பல்ப்’ வாங்குமிடம் பரிதாபமாக உள்ளது. படம் ஜேம்ஸ் மேக்-அவாயை நம்பி எடுக்கப்பட்டுள்ளது. இளம் வயது சேவியராக எக்ஸ் மேன் படங்களில் நமக்கு முன்பே பரீச்சயமானவர் தானென்றாலும், இப்படத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். பேரியாக, டென்னிஸாக, பேட்ரீசியாவாக, ஹெட்விக்காக, பீஸ்ட்டாக என ஒருவரே பல்வேறு ஆளுமைகளாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். அசுத்தங்களைக் கலைய முற்படும் பீஸ்ட்டான ஜேம்ஸ், கேஸியின் உடலிலுள்ள வடுக்களைக் கண்டு மனம் மாறுமிடத்தில் அற்புதமாக நடித்துள்ளார்.
கதை, மனித மனத்தின் புதிரான போக்குகளைச் சுற்றிச் சுற்றியே செல்கிறது. கண் பார்வையில்லாத ஒரு பெண்மணி, ஒரு ஆளுமையில் இருந்து இன்னொரு ஆளுமைக்குச் செல்லும் பொழுது கண் பார்வை கிடைத்துவிடுகிறது என்ற ஒரு தியரியை முன் வைக்கிறார். அதே போல், கெவினின் உடலிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த ‘பீஸ்ட்’, கெவினுக்குள் உறைந்து கிடக்கும் பல்வேறு ஆளுமைகளின் நம்பிக்கைகளை வரித்துக் கொண்டு எழுகிறது. மனித மனத்தின் புதிரான சக்தியை நம்புபவர் பமனோஜ் நைட் ஷ்யாமளன். ஆகவே தான் இது ‘அன்பிரேக்கபிள்’ படத்தின் இரண்டாம் பாகமென நம்பப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல், ப்ரூஸ் வில்லிஸும் கடைசி ஃப்ரேமில் தலை காட்டுகிறார்.
பல்வேறு விமர்சனங்களில் இருந்து மீண்டு, தன்னை அழுத்தமாக மனோஜ் நைட் ஷ்யாமளன் நிரூபித்திருக்கும் படமிது.