சை ரா நரசிம்ம ரெட்டி படத்திற்கான பட்ஜெட் 275 கோடி. பருச்சுரி சகோதரர்கள் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் சொன்ன இக்கதை, சீரஞ்சிவியின் மனதில் ஓடிக் கொண்டே இருந்ததாம். ஆனால், படமாக எடுக்கும் தைரியம் பாகுபலி பார்த்ததும் தான் உருவானதெனக் கூறினார் சிரஞ்சீவி. பாகுபலியின் வெற்றிக்கு அதன் பிரம்மாண்டம் மட்டும் காரணமன்று, K.V.ராஜேந்திர பிரசாதின் சுவாரசியமான திரைக்கதை முக்கிய காரணம்.
ஸ்பாய்லர் என்றால் அலர்ஜி என்பவர்களுக்கு இந்தப் படம் பெரும் பதற்றத்தை உண்டு பண்ணிவிடும். ஏனெனில், நிழலுக்கு மட்டுமே திரையரங்கு பக்கம் ஒதுங்கியவர்களுக்குக் கூட, படத்தில் அடுத்து என்ன காட்சி என்று தெரிந்துவிடுகிறது. அந்தளவுக்கு உள்ளது திரைக்கதையின் லட்சணம். விஷுவல்ஸில் மட்டுமே அதீத கவனம் செலுத்தியுள்ளனர். ஆபத்பாந்தவனான ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மட்டுமே படத்தில் ஆசுவாசத்தை அளிக்கிறது.
படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களுமே பக்திமான்கள். வீரா ரெட்டி எனும் ஜெகபதி பாபுவிற்குத் தன் மகன் இறந்துவிட்டான் எனத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அதற்காக வருத்தமோ, அவனது இறுதிச் சடங்கை முறைப்படி செய்யவேண்டும் என்ற பதற்றமோ எழுவில்லை அவருக்கு. திடீரென ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ஜெகபதி பாபுவை அழைத்து, ‘சை ரா நரசிம்ம ரெட்டி ஆடாவிட்டாலும் அவரது தசை ஆடும்’ எனச் சொன்னதும், படத்தின் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் நடக்கிறது. இப்படியாக முழுப் பூசனிக்காய் மீது இரண்டே இரண்டு சோற்றுப் பருக்கையை வைத்து விட்டு, கெத்தாய் அசால்ட் செய்துள்ளார் சுரேந்தர் ரெட்டி. ஏதோ ஆரம்ப காட்சிகளில், பூசனிக்காயை மறைக்க முயன்றால் கூட ஓகே! க்ளைமேக்ஸில் கூடவா பார்வையாளர்களை இப்படி ஏமாற்றுவார்கள்?
கதையோ கதாபாத்திரங்களோ சுத்தமாக ஒட்டவே இல்லை. முக்கியமாக விஜய் சேதுபதி. இரண்டாம் பாதியில் வரும் அவர் சிரஞ்சீவியை ‘அண்ணா’ என்றதும் திரையரங்கில் அப்படியொரு சிரிப்பொலி. அதன் பின், ‘விஜயமோ! வீர மரணமோ!’ என்றெல்லாம் சீரியசாக முயற்சி செய்கிறார். ஆனாலும், யோகி பாபு திரையில் தோன்றினால் மக்கள் எப்படி ரசிப்பார்களோ அதைப் போலவே விஜய் சேதுபதியையும் ரசிக்கின்றனர். ரைட்டூ!
அரவிந்த் சுவாமியின் குரல் அதி கம்பீரமாய் தனி ஆவர்த்தனம் செய்ய, சிரஞ்சீவியோ அந்தக் குரலின் கம்பீரத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல் நடித்துள்ளார். அவரது கோட்டை அவ்வளவு பெரியதாக உள்ளது. அந்தக் கோட்டையை நிர்வகிக்க மட்டுமே நிச்சயமாய் நூறு வேலைக்காரர்களுக்கு மேல் தேவைப்படுவார்கள். ஆனால் அவரது மனைவி சித்தம்மாவின் பிரசவத்திற்கு உதவி புரியவும் கூட ஒரு தாதியும் இல்லை அந்தக் கோட்டையில். சிரஞ்சீவியின் அம்மா மட்டுமே உடன் இருக்கிறார். சரி, பெண் வேலையாட்கள் தான் இல்லை என்று பார்த்தால், ஆண் வேலையாட்களும் இல்லை. முன்னூறு ஆங்கிலேய வீரர்கள் கோட்டையைத் தாக்க வருகிறார்கள். கோட்டையைப் பாதுகாக்கவும், எதிர் தாக்குதல் நடத்தவும், கோட்டைக்கு வெளியே எங்கோ கிராமத்திலிருந்து 40 விவசாயிகளைத் துணைக்கு அழைத்து வருகிறார். பாளையக்காரரான சை ரா நரசிம்ம ரெட்டியின் ஆளுகைக்குக் கீழ் 66 ஊர்கள் உள்ளன. குறைந்தபட்சம் 10 பேர் கொண்ட வீரர்களைப் பாதுகாப்புக்கோ, வேறு ஆத்திர அவசரத்துக்கோ வைத்துக் கொள்ளாத கஞ்சப்பிசினாரி நாயகனாய் உள்ளார். ஆனால், யாகம் வளர்க்க வேண்டுமென்றால் மட்டும் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளலாய் வஞ்சனையில்லாமல் செலவு செய்கிறார்.
அவுகு ராஜுவாய் வரும் சுதீப் கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார். நாயகனைப் போல் பாளையக்காரரான அவருக்கு சிறு படை உள்ளது. அவரது பார்வை, உடல்மொழி காட்டும் கம்பீரம் என அவர் வரும் காட்சிகள் அனைத்துமே அட்டகாசம். அதே போல், இறுதிப் போரில் பாய்ந்து பாய்ந்து போரிடும் பூர்வக்குடிப் பெண் ஒருவரும் ஈர்க்கிறார். நயன்தாராக்கு கேமியோ ரோல் போன்றதொரு பாத்திரம்தான். தமன்னாவிற்கு நல்லதொரு பாத்திரம் அமைந்தாலும், எமோஷ்னலாக கனெக்ட் ஆகவில்லை. அவர் புரியும் நெருப்பு நடனம் மயிர்கூச்செரிப்பைத் தந்திருக்கவேண்டும். ஆனால், காட்சிகள் கோர்வையற்று துண்டு துண்டாய் இருப்பதால், தேமோவெனப் படம் பார்க்கின்றனர் பார்வையாளர்கள்.
குரு கோச்சாய் வெங்கண்ணாவாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. ஆனால் கதைக்குள் (!?) அவரைக் கொண்டு வரத்தான் கோட்டை விட்டுள்ளனர். ரேநாட்டில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்டி, ரேநாட்டின் மன்னனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வது தான் சை ரா நரசிம்ம ரெட்டியின் நோக்கம். ஆனால், எப்பொழுதெல்லாம் வேண்டுமோ அப்பொழுதெல்லாம், பாரத தாய் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம் என வசனத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். கூடவே, இது மக்களால் உருவான மக்களுக்கான ஓர் இயக்கம் எனக் குடும்பத்தைத் துறந்து காட்டிற்குப் போகிறார் நரசிம்மா. திடீரென சை ரா நரசிம்ம ரெட்டி குடும்பத்தோடு ஒரு கோட்டையில் இருக்கிறார். இப்படியாக ஒரு காட்சிக்கும் அதற்கடுத்து வரும் காட்சிக்குமான தொடர்பை உருவாக்க சுரேந்தர் ரெட்டி அக்கறை செலுத்தாததால் படம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் விலகியே நிற்கிறது.