Shadow

ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’

Rambo--last-blood

1972 ஆம் ஆண்டு ஜான் மோரெல் என்பவர் எழுதிய நாவலான ஃபர்ஸ்ட் பிளட் (First Blood)-ஐத் தழுவி 1982 ஆம் ஆண்டு, அதே பெயரில் ஃபர்ஸ்ட் பிளட் படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்கு கொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் ஜான் ரேம்போ என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு.

வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் மூன்று படங்கள் வெளியாகின. அவை முறையே, ரேம்போ: ஃபர்ஸ்ட் பிளட் 2 (1985), ரேம்போ 3 (1988), ரேம்போ (2008)Rambo (2008 ) ஆகும். இவ்வனைத்துப் படங்களுமே வசூலில் சாதனை புரிந்தன என்கிற போதிலும் இரண்டாவது தொடர் படம் மட்டுமே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துப் பெரிய சாதனையை உருவாக்கியது. இதுவரை வெளிவந்த 4 தொடர் படங்களின் மொத்த வசூல் 727 மில்லியன் அமெரிக்க டாலர்கள்!

இவைத் தவிர, தொலைக்காட்சித் தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்கள், நாவல்கள், வீடியோ கேம்ஸ் என பல ரூபங்களிலும் ரேம்போ உலா வந்தார் என்பது சரித்திரம். எல்லாப் படங்களிலுமே சில்வெஸ்டர் ஸ்டலோன் தான் ஜான் ரேம்போவாக தோன்றி நடித்து அசத்தியிருந்தார். ஐந்தாம் பாகமான, ‘ரேம்போ: லாஸ்ட் ப்ளட்’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டலோன் முன்னாள் ராணுவ அதிகாரியாக தோன்றி நடித்துள்ளார். செப்டம்பர் 20 ஆம் தேதி, இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகிறது.

வயது எழுபதைத் தாண்டிய போதிலும் உடல் வலிமையில் ஆகட்டும், சண்டை திறனில் ஆகட்டும், விரைவு நகர்வுகளில் ஆகட்டும், சற்று கூடத் தளர்ச்சியோ தயக்கமோ இன்றி முதல் ரேம்போ படத்தில் இருந்த அதே தெம்புடனும் சுறுசுறுப்புடனும் இப்படத்திலும் நடித்துள்ளார்.

மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு களவாணி கும்பல், ஜான் ரேம்போவின் நண்பரின் மகளைக் கடத்திச் சென்று விடுகின்றனர். கேப்ரியல் என்கிற அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மெக்சிவோவிற்குப் பயணிக்கிறார் ரேம்போ. எத்தகையை ஆபத்தை எதிர்கொள்வதாக இருந்தாலும், எடுத்துக்கொண்ட பணியை வெற்றிகரமாக முடிக்காமல் விடுவதில்லை என்கிற உறுதியுடனும் வைராகியத்துடனும் புயலெனப் புறப்படுகிறார் ரேம்போ. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட உணர்வுபூர்வமான இப்படத்தை ஆட்ரியன் க்ரன்பெர்க் இயக்கியுள்ளார்.