Shadow

மாய வலி நீக்கிய தமிழன்

மாய வலி என்றால்?

அதற்கு முன் பார் போற்றும் தமிழரான S.ராமச்சந்திரனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ரிச்சார்ட் டாகின்ஸால், ‘நியூரோசைன்ஸின் மார்கோபோலோ’ எனப் புகழப்பட்ட ராமச்சந்திரனுக்கு, 2007இல் இந்திய அரசு “பத்ம பூஷன்” விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது. நரம்பியல் மற்றும் உளவியல் துறையில் இவர் எழுதிய புத்தகங்களின் மூலம் பலருக்கு ஆதர்சமாக விளங்கி வருகிறார். சான் டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

நியூரோகிருஷ் ஒருங்கிணைத்த செமினாரில் கலந்து கொண்ட மருத்துவர் ராமச்சந்திரன், நாள்பட்ட வியாதிகளுக்கு ட்ரைமெட் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்திப் புகழ்ந்தார்.

Vilayanur S.Ramachandran

ஒருவரின் கை துண்டிக்கப்பட்டிருந்தாலும், மூளை அதை உணராது அந்தக் கையை அசைக்கும்படி சிக்னல் தந்து கொண்டேயிருக்கும். ஆனால், கண்கள் தரும் பிம்பமோ இல்லாத கையை எப்படி அசைக்க முடியுமென்ற எதிர் சிக்னல். இந்த இரண்டு எதிரெதிர் சிக்னல்களும் மூளைக்குள் மோதி, சிக்னல் அழுத்தமாக மாறி துண்டிக்கப்பட்ட கையின் மீதமுள்ள பகுதியில் வலியை ஏற்படுத்தும் அல்லது முழுக் கையும் துண்டிக்கப்பட்டிருக்கும் பொழுது அவ்வலி உடலில் பரவத் தொடங்கிவிடும். அந்த வலியின் பெயர்தான் ‘மாய வலி’. துண்டிக்கப்பட்ட அங்கம் இன்னும் உடலோடு தான் இருக்கிறது என மூளை நம்பும்பொழுது உடலில் ‘மாய அங்கம்’ உருவாகிறது என 1871 இல் பெயர் சூட்டினார் அமெரிக்க நரம்பியல் நிபுனரான மிட்சேல். கையை அசைத்தால் அந்த வலி சரியாகிவிடும். கண்களுக்குப் புலப்படாத கையை எப்படி அசைக்க முடியுமென்ற குழப்பத்தின் காரணமாக மாய வலியில் அவதிப்படுவர்.

Mirror Boxஇவ்வலியை அகற்ற ‘மிரர் பாக்ஸ்’ எனும் உளவியல் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினார் ராமசந்திரன். நன்றாக இருக்கும் கையை, கண்ணாடியில் பார்த்தவாறு அசைத்தால் துண்டிக்கப்பட்ட கையும் தனிச்சையாகாசையத் தொடங்கும். அப்படி அசையத் தொடங்குவதால், மாய வலி நீங்கும் என்கிறார் ராமச்சந்திரன்.

அதே போல், அவர் முன் வைக்கும் இன்னொரு விஷயம் மூளையுள்ள ‘எம்ப்பத்தி நியூரான்ஸ் (Empathy Neurons)’-இன் செயற்பாடுகள் குறித்து. ஒருவர் உங்கள் கண் முன் கையை அழுத்தித் தேய்த்துக் கழுவவதைப் பார்த்தால், உங்களுக்கும் கை கழுவ வேண்டுமென்ற எண்ணம் தோன்றுவதை உதாரணமாகச் சொல்கிறார். இந்த முறையைப் பயன்படுத்திக் கூட, மாய வலியைப் போக்கலாம் என்கிறார். ஒருவருக்கு இரண்டு கைகளுமே ஏதேனும் விபத்தில் துண்டிக்கப்பட்டிருப்பின், அவருக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் அவர்களது அங்கத்தினை அசைத்தால், அதைக் காணுறும் நபர் அதனால் கவரப்பட்டு கையை அசைக்கத் தூண்டப்படுவார் என்கிறார்.

Mirror Visual Feedback

சினஸ்தீஷியா (Synesthesia) என்பது மூளைக்குச் செல்லும் ஓர் உணர்வு பாதையோடு மற்றொன்று பாதையும் ஒன்றாகியுள்ள நிலை. உதாரணத்திற்கு, அதிகம் காணப்படும் சினஸ்தீஷ்யாக்களில் ஒன்று, எண்களை அடையாளம் காணும் மூளைப் பகுதியும், வண்ணங்களை அடையாளம் காணும் மூளைப் பகுதியும் மிஸ்-வயர் (miswire) ஆகித் தொடர்பில் இருக்கும். அதன் காரணமாக, எண்களைப் பற்றி நினைத்தாலே வண்ண எண்களாகத் தான் தோன்றுமாம். சிலருக்கு இசையை அறியும் பகுதியோடு, வண்ணங்களைக் காணும் பகுதி மிஸ்-வயர் ஆகியிருக்குமாம். அவர்களுக்கு ஓர் இசைத்துணுக்கைக் கேட்கும்பொழுதெல்லாம் மனக்கண்களில் வண்ணம் தோன்றுமாம். இத்தகைய சினஸ்தீஷியட்ஸ் பெரும்பாலும் கலைஞர்களாக இருப்பார்களாம்.

Synesthesia“இங்கிருப்பவர்களில் யாருக்கு நம்பர்ஸ் கலராகத் தெரியும்?”

ஒருவர் கை தூக்கினார்.

“நீங்க ஆர்டிஸ்ட்டா?”

‘இல்லை’ எனத் தலையாட்டினார்.

“இப்ப இல்லை. ஆனா விரைவில் ஆர்டிஸ்ட் ஆகிடுவீங்க” என்றார்.

செமினாருக்கு வந்திருந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச் செல்வி, “நாங்க 60 பேரிடம் கருப்பு வெள்ளை நிறத்தில் 1 முதல் 10 வரை எண்களைக் காட்டினோம். அவர்களில் 45 பேருக்கு, 4 எனும் எண் மட்டும் நீல நிறத்தில் தெரிந்ததாகக் கூறினார்கள். ஏன் பெரும்பான்மையானவர்களுக்கு 4 நீல நிறத்தில் தெரிஞ்சது?” எனக் கேட்டார்.

Kiki and Bouba Effect“இது பற்றி விரிவாக ஆய்வு செய்யணும். பொதுவான ஒரு பதில் இருக்கு. அனைவருக்குமே சினஸ்தீஷியா உள்ளது” என்றார். (அதை நிரூபிக்க ராமச்சந்திரன் Kiki and Bouba effect எனும் முறையைப் பயன்படுத்துவார். வடிவங்களையும் (Shapes) ஒலியையும் (Sounds) மூளை எப்படிப் பொருத்திப் பார்த்துக் கொள்கிறது என இலகுவாகப் புரியும்).

ராமசந்திரனின் ஆய்வுகளைப் படித்து, அதனால் தூண்டப்பட்டு பிஹெச்.டி. செய்யும் மாணவி ஒருவர், மிகவும் அசத்தலான கேள்வி ஒன்றினைக் கேட்டு ராமசந்திரனை அசரடித்தார். “மனிதர்களிடமுள்ள Empathy neurons பற்றிச் சொன்னீங்க. அப்படி இருந்தும் பயங்கரவாதிகளால் எப்படி சக மனிதர்களைக் கொல்ல முடிகிறது?” என்பதுதான் அக்கேள்வி (யாரேனும் எவரையேனும் அடிப்பதைப் பார்க்க நேர்ந்தால், ஒரு கணம் அந்த அடி உங்களுக்கு விழுந்ததாகவே உணர வைக்கும் எம்பத்தி நியூரான்ஸ்).

“சைக்கோகளுக்கு எம்பத்தி நியூரன்ஸ் மிகவும் குறைவாகவோ அல்லது சுத்தமாகவே இருக்காது” என்றார் மருத்துவர் ராமச்சந்திரன்.

– தினேஷ் ராம்