Shadow

அழகிய கண்ணே விமர்சனம்

ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை எழுதிக் கொடுத்து கரெக்ட் செய்து காதலிக்க தொடங்கியவுடன் சரி இது காதல் கதைதான் என்று தீர்மானித்திற்குத் தள்ளியது படம்.

இடையில், அறிமுக நாயகன் லியோ சிவகுமார் இயக்குநர்களுக்கு கடிதமாக எழுதித் தள்ளி இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகப் போகிறேன் என்று சென்னை கிளம்புகிறான். லியோ சிவகுமார், திண்டுக்கல் லியோனியின் மகனாவார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். அங்குப் போனதும் உதவி இயக்குநர்கள் படும் பாடுகளைப் பற்றி படம் பேசத் துவங்கியது. சரி, இது இயக்குநராகத் துடிக்கும் இளைஞர்களைப் பற்றிய கதையாக போல என்ற தோற்றத்தை அளித்தது.

பிறகு காதல் ஜோடி பெண் வீட்டார் எதிர்ப்பை (நாயகியின் துணிமணிகளைத் தூக்கி முகத்தில் எறிவது தான் அந்த எதிர்ப்பு) மீறி, காதல் திருமணம் செய்து கொண்டு வாழத் துவங்கியதும் அவர்களுக்கு இடையே ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளைப் படம் பேசியதும், மனம் கண்டிப்பாக இது காதல் படம் என்று உறுதி கூறியது.

பின்னர் நாயகிக்கு குழந்தை பிறந்ததும், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் இருவரும் திண்டாடும் போது, ஒரு வேளை இது வேலைக்குச் செல்லும் குடும்பப் பெண்மணிகள் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றிய படமோ என்று குழப்பம் தோன்றியது.

பின்னர் நாயகன் விஜய் சேதுபதியைச் சந்தித்து படத்தின் கதையையே தன்னுடைய கதையாகச் சொல்லி, அதை சேதுவும், ‘ஆஹா! ஓஹோ!’ என்று புகழ்ந்து, ‘நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன். தயாரிப்பாளரும் நானே கொடுக்கிறேன்’ என்று சொல்கிறார். இது என்ன ஜானர் திரைப்படம் என்ற ஆராய்ச்சி, இனி தேவையற்றது என்ற தெளிவு பிறந்தது.

அடுத்த காட்சியில், நெற்றியில் நீண்ட பட்டையை அணிந்து கொண்டிருக்கும் நாயகியின் குடிகார மாமன், தன் அல்லக்கைகளைக் கூட்டிக் கொண்டு போய் நாயகனை எரித்துக் கொல்லுகிறான். கரிக்கட்டையாக எரிந்து கிடக்கும் பொம்மையின் மார்ப்பில் சாய்ந்து கொண்டு அழும் நாயகியும் இறந்து போகிறாள். குழந்தை அநாதையாக ரோட்டில் நிற்கிறது. ஆக, இது ஓர் ஆணவக் கொலை தொடர்பான சமூகப் படம் என்றறிக!

அந்த முடிவை ஒப்புக் கொள்ள வைக்கும் ஓர் அழகான காட்சியும் படத்தில் உள்ளது. இந்தக் காட்சி மட்டுமே உள்ளது. அக்காட்சியானது, அய்யர் வீட்டுப் பெண்ணான நாயகி தன் காதல் கணவனுக்காக மூக்கில் துணியைக் கட்டிக் கொண்டு மீன் வறுக்கிறாள். நாயகனோ நாயகியின் காதலைப் புரிந்து கொள்ளாமல், ‘இனி உனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வேண்டாம். இனி நம் வீட்டில் அசைவமே சமைக்க வேண்டாம்’ என்று தியாகி ஆக, நெகிழ்ந்து போகும் நாயகி நாயகனைக் கட்டிக் கொள்கிறாள். வாவ், சிம்ப்ளி வாவ்!

‘அழகிய கண்ணே’ என்ற படம் 1982இல் வெளிவந்து. அக்காலத்தைய படங்களிலேயே கூடக் காணக் கிடக்காத தொன்மையான காட்சிகளால் இப்படத்தை அலங்கரித்துள்ளார் இயக்குநர் R. விஜயகுமார்.

– இன்பராஜா ராஜலிங்கம்