உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் பா. ரஞ்சித், “படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்று சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் அவருடைய விலா எலும்பு முறிந்தது. அந்தக் காட்சி நிறைவடைந்ததும் உடனடியாக என்னுடைய உதவியாளரை அழைத்து, ‘அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா?’ என்று கேள் எனச் சொல்வேன். அவர்கள் விக்ரமிடம் கேட்டுவிட்டு, ‘வலி இருக்கிறது ஆனால் பொறுத்துக் கொள்கிறேன்’ என பதில் அளிப்பார்கள். அதனால் மீண்டும் அதே காட்சியைப் படமாக்கினேன். இந்த விஷயத்தில் அவரிடம் நான் சற்று கடினமாக நடந்து கொண்டேன். அதற்காக இந்தத் தருணத்தில் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் நோக்கம் என்னவென்றால் அவரை எப்படியாவது திரையில் தங்கலானாகக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். இதனை விக்ரமும் புரிந்து கொண்டு இன்றுவரை எனக்கு சகல விதங்களிலும் ஆதரவாக இருக்கிறார். இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார். என் மீதும் இந்தப் படத்தின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வெற்றி பெற வேண்டும். என்னுடைய விருப்பமும் அதுதான். இது சாத்தியமாகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
விக்ரமைத் தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கு இணையாக ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என நினைத்தபோது என் மனதில் தோன்றியவர் பசுபதி தான். அவரும் ஒரு திறமையான கலைஞர். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பும் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
பார்வதி, மாளவிகா இருவரும் முக்கியமான கதாபாத்திரங்கள். இந்தத் திரைப்படத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறது. பார்வதியை ‘பூ’ படத்திலிருந்து பின் தொடர்கிறேன். அவருடைய திறமைக்கேற்ப கதை இருந்தால் தான் அவரை அழைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தேன். இந்தப் படத்தில் அது சாத்தியமானது.
இந்தத் திரைப்படத்தை கருணையற்ற மனிதனாக இருந்தால் மட்டும் தான் உருவாக்க முடியும் என நான் நினைத்தேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் திறமையாக அர்ப்பணிப்புடன் நடித்தார்கள். நான் ஏனைய படங்களை இயக்கும்போது படப்பிடிப்புத் தளத்தில் மகிழ்ச்சியாக தான் பணியாற்றுவேன். ஆனால் இந்தப் படத்தில் என்னை நானே வருத்திக் கொண்டு பணியாற்றினேன். இப்போது வரை மன உளைச்சலுடன், ஒருவித தவிப்புடன் தான் இருக்கிறேன். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்ற பிறகு தான் மகிழ்ச்சி அடைவேன்.
மாளவிகாவின் கதாபாத்திரத்தை எழுதி விட்டேனே தவிர இதனைத் திரையில் கொண்டு வருவதற்கு நிறைய சிரமப்பட்டேன். இதனை உணர்ந்த மாளவிகாவும் கடுமையாக முயற்சி செய்து நடித்திருக்கிறார்.
டேனியலுக்கும் எனக்கும் மொழிப் பிரச்சனை. அதன் பிறகு கலாச்சாரப் பிரச்சனை. ஆனால் எல்லாவற்றையும் கடந்து டேனியல் அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜிவியுடன் இணைந்து பணியாற்றும் போது, நட்புடன் பணியாற்றுவது போல் இருந்தது. எல்லாவற்றையும் விட என்னுடைய உணர்வைப் புரிந்து கொண்டு, என்னுடைய தேடலைப் புரிந்து கொண்டு, பொருத்தமான இசையை வழங்கி பெரும் பக்க பலமாக இருந்தார்.
இந்தப் படம் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நான் எப்போதும் படத்தை பொழுதுபோக்காக மட்டும் உருவாக்குவதில்லை. அதனுடன் சமூகத்திற்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும் என்றும் நினைப்பேன். பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து இந்தச் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விஷயத்தை வழங்கிட முடியும் என்பது தான் என்னுடைய பார்வை.
இந்த சமூகம் என்னை உருவாக்கியிருக்கிறது. இந்த சமூகத்தில் இருந்து நான் நிறைய பெற்றிருக்கிறேன். அதில் இன்பங்களும் உண்டு. துன்பங்களும் உண்டு. நிறைய படிப்பினையும் இருக்கிறது. இதில் நான் பல விஷயங்களை உட்கிரகித்திருக்கிறேன். அதனை நான் கலை வடிவமாக மாற்றி சினிமாவாக உங்கள் முன் படைத்திருக்கிறேன். இந்த சினிமா உங்களுக்குள் இருக்கும் அந்த உணர்வைத் தொடும் என நம்புகிறேன். இதன் மூலம் இந்த சினிமா சில விவாதங்களை ஏற்படுத்தும். சில கேள்விகளை எழுப்பும். அந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதன் மூலமாக வரலாற்றில் நாம் மறந்த, மறைத்த பல விஷயங்களுக்கான பதிலைப் பெற முடியும் என நம்புகிறேன். இதுதான் என்னுடைய வலிமை என நம்புகிறேன். இதுதான் என்னுடைய அரசியல். இந்த அரசியல் இல்லையென்றால் நான் இல்லை. இதற்காக அண்ணல் பாபா சாகிப் அம்பேத்கருக்கு நான் மிகப்பெரிய நன்றியைச்சொல்கிறேன். அவர்தான், ‘நீ உன் சமூகத்திற்காக, உன் மக்களுக்காகப் பேசியாக வேண்டும்’ என்ற உத்வேகத்தை வழங்கியவர். அவருடைய குரலாக, அவருடைய மாணவராக, அவருடைய சீடராகத் தொடர்ந்து நான் இயங்குவேன்” என்றார்.