Shadow

“விக்ரமெனும் ஆசிரியரைப் பரிசோதித்தேன்” – பா.ரஞ்சித் | தங்கலான்

உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்கநர் ரஞ்சித், “நான் எழுதிய பல கதைகளை ஒதுக்கிவிட்டு, ‘அட்டகத்தி’ படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். என்னுடைய வாழ்வில் இருந்து நிறைய சம்பவங்களை எடுத்து அதனை சினிமாவாக உருவாக்கினேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நீண்ட ஒரு கடிதத்தை எழுதி வழங்கினோம். அதில் எங்களுடைய நம்பிக்கையைச் சொல்லி இருந்தேன்.

அட்டகத்தி படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அந்த வாழ்வியலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டவுடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உருவானது. இந்த நம்பிக்கையின் காரணமாக அடுத்ததாக ‘மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்கினேன். அந்தப் படத்தின் உருவாக்கத்தின் போதும் எனக்கு பயம் இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கும் போது தயாரிப்பாளர்களிடம் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படம். அவர்களுடைய கோணத்தில் இருந்தால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தி இருந்தேன்.‌ தயாரிப்பாளர்களும், கார்த்தியும் இதனைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியை அளித்தது. மெட்ராஸ் படம் வெற்றி பெற்றதாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அந்தப் படம் பிடித்ததாலும் எனக்கு ‘கபாலி’ படத்தின் வாய்ப்பினை வழங்கினார். எனக்கு அவருடன் பணியாற்றும்போது உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. அவருக்கு என்னுடைய அரசியல் மிகவும் பிடிக்கும். அந்தப் படம் வெற்றி பெற்றதால் தான் மீண்டும் எனக்கு ‘காலா’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

அதன் பிறகு ‘சர்பட்டா பரம்பரை’ ‘நட்சத்திரம் நகர்கிறது’ இவையெல்லாம் என்னுடைய தேடல்கள் தான். ‘வரலாற்றில் நான் யார்?’ என்பதனைத் தேடும் படைப்புகளாகத்தான் இவை இருந்தன.

இந்தத் தருணத்தில் தான் விக்ரம் என்னை அழைத்தார். சேர்ந்து பணியாற்றலாம் என விருப்பம் தெரிவித்தார். விக்ரமை பல வடிவங்களில் எனக்கு பிடிக்கும். அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்குப் பிடிக்கும். ஏனைய வணிக ரீதியான நட்சத்திரங்களைப் போல் நான் விக்ரமைப் பார்த்ததில்லை. ஏனெனில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காகத் தன்னை வருத்திக் கொள்பவர். ‘ஐ’ படத்தில் ஒரு சிறிய பகுதிக்காகத் தன்னை மாற்றிக்கொண்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது. அதில் அவருடைய கலை மீதான தீவிர நேசிப்பு எனக்குத் தெரிந்தது. இதுபோன்றது ஒரு மகா கலைஞருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டேன்.‌

முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும்போது எனக்குள் பயம் இருந்தது. இயக்குநராக ஒரு கதையை எழுதி விட்டேன். இந்தக் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் விக்ரமுக்கு என சில தேவைகள் உண்டு. இதையெல்லாம் அவரைச் சந்திக்கும் போதே விவரித்தேன். அவரும் முழுமையாகப் புரிந்து கொண்டு அற்புதமான ஒத்துழைப்பை வழங்கினார்.

அவரிடம் கதையைக் கூட என்னால் ஒழுங்காகச் சொல்ல முடியவில்லை, ஆனால் நான் சொல்ல நினைத்ததை அவர் முழுவதாகப் புரிந்து கொண்டார். அவர் என் ஆத்மாவிற்குள் நுழைந்து அதனைப் புரிந்து கொண்டார் என நான் நினைக்கிறேன். நான் நினைத்ததைச் சொல்வதற்கு சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரியாது. அதில் நான் பலவீனமானவன் தான். ஏனெனில் நான் என்னுடைய உலகத்திலிருந்து இயங்குபவன்.

அவர் ஒப்புக்கொண்டவுடன் அந்தத் தருணத்தில் இருந்து தான் எனக்குள் மிகப்பெரிய சவால் உருவானது. கலைக்காகத் தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் ஒரு கலைஞன்.‌ அவரைக் கையாள்வது மிகவும் கடினமானது என எனக்குத் தெரியும். அவரை அந்தக் கதாபாத்திரமாக உருமாற வைப்பதில் சவால் இருந்தது.‌ அதே தருணத்தில் மக்களிடத்தில் எளிதாகச் சென்று சேரும் வகையில் ஜனரஞ்சகமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தக் கதை எழுதி முடித்த பிறகு, பல இடங்களுக்கு என்னைப் பயணிக்க வைத்தது. பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். எழுத்தாளர்கள் தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன் ஆகியோரிடத்தில் பெரும் விவாதமே எழுந்தது. இந்தக் கதைக்குள் பல சிக்கலான விஷயங்கள் இருக்கிறது.

இந்தப் படத்தில் புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம். ஃபேண்டஸி மேஜிக் வேர்ல்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். புதிய ஜானரில் நான் இயக்கும் திரைப்படம் இது. இந்தப் புதிய உலகத்திற்குள் நான் நுழையும் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தான். இது எனக்கு புது நம்பிக்கையை அளித்தது.‌

விக்ரம் அந்த உலகத்திற்குள் என்னை எளிதாகப் பணியாற்ற வைத்தார். படப்பிடிப்பின் முதல் நாள் முதல் காட்சியின் போது நான் நினைத்த மாதிரி தங்கலானாக விக்ரம் வந்து நின்றார். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் அவர் காடையன் கதாபாத்திரத்தில் தோன்றும் போது என்னை ஆச்சரியப்படுத்தினார். இதற்காக நடைபெற்ற ஒத்திகையின் போதும் அவர் கலந்து கொண்டார். அவரிடமிருந்து நான் கலையை எப்படி நேசிப்பது என்ற விசயத்தை கற்றுக் கொண்டேன். ஒரு மாணவரைப் பரிசோதிக்கலாம் ஆனால் ஒரு ஆசிரியரை எப்படிப் பரிசோதிப்பது? ஒரு ஆசிரியரைப் பரிசோதிப்பது போல் இருந்தது.