
எதிரிகளான பறவைகளும் பன்றிகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, பறவைத் தீவையும், பன்றித் தீவையும் அழிக்க நினைக்கும் கழுகுத் தீவின் ஜெட்டாவிடமிருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி முதற்பாகத்தையும் விட அதிக கலகலப்புக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் துரோப் வேன் ஆர்மன்.
படம் கதையிலும், கலகலப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் குண இயல்பையும் கணக்கில் கொண்டுள்ளதுதான் முதற்பாகத்தை விடவும் ஈர்க்கக் காரணம். ‘பறவைத் தீவைக் காக்கும் சூப்பர் ஹீரோ’வாக தான் என்றுமே புகழப்பட வேண்டும் என நினைக்கிறது ரெட்; பகையை மறந்து அமைதி ஒப்பந்தத்திற்குத் தூது விடுகிறது பன்றித் தீவின் லியானார்டோ; தன் பயந்த சுபாவத்தை மறைத்து ‘மைட்டி ஈகிள்’ என்ற பெயர் மட்டுமே போதுமெனத் தனிமையில் வாழ்கிறது ஈத்தன் கழுகு; கல்யாணத்தன்று பயந்து ஓடிவிடும் பயங்கொள்ளி ஈத்தனின் மேலுள்ள கோபம் ஆண்கள் மேல் பரவுவதால் இயல்பு மாறி கொடும் குணக்காரியாக மாறுகிற்ல் ஜெட்டா கழுகு.
இந்தக் கதையைக் கொண்டாட இரண்டு அற்புதமான விஷயங்கள் செய்துள்ளார் இயக்குநர். ஒன்று, மூன்று பறவைக் குஞ்சுகள் கடலில் அடித்துச் செல்லப்படும் மூன்று முட்டைகளைக் காப்பாற்ற மேற்கொள்ளும் சாகசம். கிளைக்கதை எனினும், க்யூட்டான அப்பறவைக் குஞ்சுகளின் முயற்சிகள் மிகவும் அழகாக உள்ளன. கடல், திமிங்கலம், மேகம், விண்வெளி, பைத்தான் பாம்பு என அவர்களது சாகசப் பயணம் மிகவும் க்யூட் + அமர்க்களம். அதை விட அட்டகாசம், படம் முடிந்த பிறகு வரும் ப்ரீ-க்ரெடிட் சீனில் வரும் காட்சி. தவற விடாமல், அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டுக் கிளம்பவும்.
இரண்டாவது காரணம், ரெட்டின் மனமாற்றம். யாரையும் கூட்டுச் சேர்க்காமல் தனியாகச் சாதித்து, ஹீரோவாய் பறவைகள் மனதில் என்றென்றும் குடியிருக்க நினைக்கும் ரெட், தன் தவறுகளை உணர்ந்து சில்வர் எனும் பெண் பறவையைத் தலைமையேற்கப் பரிந்துரைக்கிறது. பறவைத் தீவையும், பன்றித் தீவையும் மீட்டதற்குக் குழுவின் கூட்டு முயற்சியே காரணமெனத் தயக்கத்துடன் ஒத்துக் கொள்கிறது. உண்மையைப் பேசும் ரெட்டைப் பறவைகளுக்கு முன்பை விடவும் அதிகமாகப் பிடிக்கிறது.
பறவைகள் மற்றும் பன்றிகளுடனுனான கொண்டாட்டத்தைத் தவற விடாதீர்கள். குழந்தைகள் மிகவும் மகிழ்வார்கள்.