Shadow

The Garfield Movie விமர்சனம்

திங்கட்கிழமையை வெறுக்கும், உணவை மிக மிக விரும்பும், எவரையும் மதிக்காத புசுபுசு புஷ்டி பூனையாகிய கார்ஃபீல்ட், 15 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையைக் காண்கிறது. ஜிம் டேவிஸ் என்பவரால் 1976 இல், காமிக் துண்டாக அறிமுகமான ஆரஞ்சு நிற கார்ஃபீல்ட் பூனை, உலகளவில் பல செய்தித்தாள்களில் பரவலாக இடம்பெற்று, கின்னஸ் சாதனை பெற்றுள்ளது.

கார்ஃபீல்ட் உமிழும் புத்திசாலித்தனமான பகடிகள் தான் அதன் சிறப்பே! இப்படத்தில் அதை அழகாகக் கொண்டு வந்துள்ளனர். சாலையில் தனித்து விடப்பட்டு பரிதாபமாக இருக்கும் பூனையை ஜான் தத்தெடுக்கிறார். ‘ஜான் என்னைத் தத்தெடுக்கலை. நான் தான் ஜானைத் தத்தெடுத்தேன்’ என ஆரம்பிக்கும் கார்ஃபீல்டின் அட்டகாசம் முதற்பாதி முழுவதும் அற்புதமாக விரவியுள்ளது.

விலையுயர்ந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்து, எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு, CatFlix பார்க்கும் பரம சுகவாசியாக ராஜவாழ்க்கை வாழ்கிறது கார்ஃபீல்ட். அந்த ராஜ பூனைக்குச் சேவகம் செய்யவே வந்து சேருகிறது ஜானின் வளர்ப்பு நாயான ஓடி (Odie). கார்ஃபீல்டின் வாழ்க்கை இப்படி அமைதியாகப் போய்க் கொண்டிருக்க, திடீரென கார்ஃபீல்டும் ஓடியும் கடத்தப்படுகின்றனர். வீட்டிலிருந்து, கார்ஃபீல்ட் வெளியேறியதும் படத்தின் கலகலப்பு சற்றே குறைகிறது. காரணம் கார்ஃபீல்டின் பகடி கொஞ்சம் நீர்த்து, தந்தை – மகன் எமோஷ்னல் காட்சிகளாலும், சாகசங்களாலும் நிரம்புகிறது.

மார்க் டிண்டால் இயக்கியுள்ள இப்படம், அமெரிக்காவில் வெளியாகும் முன்பே இந்தியாவில் சோனி பிக்சர்ஸால் வெளியிடப்பட்டுள்ளது. 3டி எஃபெக்ட்ஸ் ஆஹோ ஓஹோவென இல்லாவிட்டாலும், சன்னமாக மிகச் சில காட்சிகளில் கண் முன் வந்து செல்கிறது.

“Garfield and Tom Cruise do their own stunts” எனச் சொல்லிவிட்டு ட்ரோன் சாகசத்தில் ஈடுபடுகிறது கார்ஃபீல்ட். ஜின்க்ஸ் எனும் வில்லிப் பூனை, ஓட்டோ (Otto) எனும் ஆண் காளை, ஈத்தல் (Ethel) எனும் பெண் காளை, கார்ஃபீல்டின் தந்தையாக விக் பூனை, ஜின்க்ஸின் 2 அடியாள் நாய்கள் என எல்லாப் பாத்திரங்களுமே ரசிக்க வைக்கின்றன. லைவ்- ஆக்‌ஷன் அனிமேஷனாக இல்லாமல், பழைய பாணி அனிமேஷனாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே உள்ளது. கார்ஃபீல்டுக்கு கிறிஸ் பிராட்டும், கார்ஃபீல்டின் தந்தை விக்கிற்கு சாமுவேல் எல். ஜாக்சனும் பின்னணி குரல் கொடுத்துப் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளனர். கார்ஃபீல்டின் ரசிகர்களுக்கு லேசாக ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், மற்றவர்களை இத்திரைப்படம் ஏமாற்றாமல் நிச்சயம் ரசிக்க வைக்கும்.