Shadow

விக்ராந்த் ரோணா விமர்சனம்

கும்மிருட்டில் நடக்கும் அமானுஷ்யமான மிஸ்ட்ரி த்ரில்லர் படம்.

கமரோட்டு எனும் ஊரில் காவல்துறை அதிகாரி இறந்து விட, புது அதிகாரியாக விக்ராந்த் ரோணா வருகிறார். அடுத்தடுத்து 16 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதன் மர்மத்தைத் துப்பு துலக்குகிறார் விக்ராந்த். படத்தின் முடிவில், முடிச்சுகள் அவிழும் வரையிலுமே ஒரு குழப்பமும், சின்ன அமானுஷ்யமும் நிலுவுகிறது.

முப்பரிமாண (3டி) படமாக எடுக்கப்பட்டிருப்பதால், பகல் காட்சிகளும் கூட இருள் படர்ந்ததாகவே தெரிகிறது. படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை அது அளித்தாலும், முழுப் படத்தையும் இருட்டிலேயே பார்க்கும் உணர்வு சலிப்பை ஏற்படுத்துகிறது (9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவருக்கு கோளாறான 3டி கண்ணாடி கிடைத்தால் அவரது நிலைமை இன்னும் மோசம்).

சுருட்டு பிடித்துக் கொண்டே இருக்கும் கிச்சா சுதீப், அலட்சியமான கம்பீரத்துடன் விசாரணையைத் தொடங்குகிறார். ஆனால், மரணங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. கடைசியில் க்ளைமேக்ஸின் பொழுது மட்டுமே, எல்லா முடிச்சுகளும் அவிழப்பட்டு ஒரு த்ரில்லருக்கான சுவாரசியத்தைத் தருகிறது. படம் நெடுகே இருட்டு, டப்பிங் படம் பார்க்கும் உணர்வு, மனதில் பதியாத பெயர்கள் (கமரோட்டு, மூஸ் குன்னி, நிட்டோனி, பின்ட்டோ) ஆகியவை படத்தின் தடைக்கற்களாக உறுத்துகின்றன.

நாயகன் விக்ராந்த் ரோணாவாக கிச்சா சுதீப் நடித்துள்ளார். படத்தில் தெரிந்த முகம் அவர் மட்டுமே. அவருக்கான டப்பிங்கில் ஒரு கம்பீரம் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. பான் இந்தியா படமென முடிவு செய்யப்பட்ட பின், ஒரு துள்ளலான குத்துப்பாட்டு இல்லாவிட்டால் எப்படி? ரக்கம்மா எனும் பாடலுக்காக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை, நிறைய ஆட்கள் நிறைந்த பிரம்மாண்ட செட்டில் ஆட வைத்துள்ளனர். கதையின் முக்கிய பாத்திரமான காட்டையே செட் போட்டுள்ளனர். ஆனால், பச்சைப்பசேல் என்ற இயற்கைச் சூழலை ரசிக்க முடியாதபடிக்கு மீண்டும் இருட்டே திரையை ஆக்கிரமிக்கிறது.