Search

தி ஆஃப்ரிக்கன் டாக்டர் விமர்சனம்

the-african-doctor-review

ஆதரிக்க யாருமில்லாத அநாதையான காங்கோ நாட்டைச் சேர்ந்த கருப்பரான சியோலோ ஜன்டோகோ, தனது கடினமான உழைப்பால், ஃபிரான்ஸில் மருத்துவப் படிப்பை முடிக்கிறார். காங்கோவின் சர்வாதிகாரியான மொபட்டூவிற்கு பெர்ஸ்னல் மருத்துவராகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஊழலில் திளைக்கும் ரத்த வரலாறு கொண்ட ஜனாதிபதியிடம் பணி புரிய விரும்பாமல், ஃபிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெறுவதற்காக, மார்லி-கோமான்ட் எனும் கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியச் சம்மதம் தெரிவிக்கிறார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குடியேறப் போகிறோம் எனத் தவறுதலாக நினைத்துவிடும் சியோலோவின் குடும்பத்திற்கு, சதா குளிர்ந்து கொண்டே இருக்கும் புதிய சூழல் பிடிக்காமல் போகிறது.

கருப்பர்களையே கண்டிராத அந்தக் கிராமத்து மக்கள், சியோலோவை மருத்துவராக ஏற்றுக் கொள்ளாமல், அவரை மந்திரவாதியாகப் பாவித்து ஒதுக்குகின்றனர். உடல்நலம் சுகமில்லை என ஒரு பண்ணையிலிருந்து ஃபோன் வர, சியோலோ மருத்துவம் பார்க்க அங்கு தனது காரில் செல்கிறார். ஒரு கருப்பர் தன் நிலத்தில் கால் வைப்பதா என்று அதன் உரிமையாளர் துப்பாக்கியால் சுடுகிறார். இப்படி, தன்னிடம் மருத்துவம் பார்க்கத் தயங்கும் கிராமத்து மக்கள், நகர வாழ்க்கையின் மீது மோகம் கொண்ட மனைவி, சாசர் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மகள் பள்ளியணியில் புறக்கணிக்கப்படுவது, புது நண்பர்கள் கிடைக்காமல் ‘கருப்பர்’ எனக் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும் மகன் என சியோலோவால் சமாளிக்க முடியாதபடிக்குப் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போகின்றன. அந்தக் கிராமத்து மக்களை நட்பாக்கும் முயற்சியில் தோற்கும் சியோலோ, ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் பண்ணையில் விவசாய வேலைக்குச் செல்கிறார்.

கோபித்துப் பிரிந்து செல்லும் மனைவி எப்படிச் சமாதானமானார், அந்தக் கிராமத்து மக்களின் நட்பை மருத்துவர் சியோலோ பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 1975 இல் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், உண்மையாக நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஃப்ரெஞ்சுக் கிராமப்புறங்களைப் பற்றி ராப் பாடல் புனைந்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் காமினியின் தந்தை தான் மருத்துவர் சியோலோ. படத்தின் இயக்குநர் ஜூலியன் ரம்பால்டியுடன் இணைந்து, இப்படத்தின் திரைக்கதையிலும் உதவியுள்ளார் காமினி.

சக மனிதர்கள் காட்டும் அலட்சியத்தையும் புறக்கணிப்பையும் பற்றிப் படம் பேசினாலும், அந்த டார்க் டோன் இல்லாமல் சற்றே நகைச்சுவையாகப் படம் நகர்கிறது. “அவர் சுடும் பொழுது, நீங்க முயல் மாதிரி பயந்து போய் ஓடி வந்தீங்களா?” என மகன் சிரித்துக் கொண்டே கேட்கிறான். ‘ஆமாம், வேறென்ன பண்ண?’ என்று சியோலோவும் சிரிக்கிறார். அந்தக் காட்சி, கலகலப்பாகக் கடந்து விட்டாலும், இன ரீதியான புறக்கணிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும் மக்களின் வேதனையை நீறு பூத்த நெருப்பாய் மனதில் படியச் செய்கிறது.

‘ஏன் நீங்க சொந்த நாட்டிற்குச் சென்று மருத்துவச் சேவை செய்யலாமே?’ என்று அவரை அந்தக் கிராமத்தை விட்டுத் துரத்த ஒருவன் கேள்வி கேட்கிறான்.

ஜனாதிபதியின் பெர்ஸ்னல் மருத்துவர் என்றால் சகல வசதிகளும் கிடைத்திருக்குமே என மனைவியும் ஆதங்கப்படுகிறார். ஆனால், சியோலோவிற்கு காங்கோவின் அரசியல் நிலவரம் உவப்பானதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, தன் பிள்ளைகளின் கல்விக்கும் எதிர்காலத்திற்கும் ஃபிரான்ஸ் நல்ல அடித்தளம் அமைக்கும் எனத் திடமாக நம்பினார். ‘தி ஆஃப்ரிக்கன் டாக்டர்’ என்பது ஒரு மிகச் சிறந்த தந்தையைப் பற்றிய படமென்றும் கூறலாம்.

“இங்க பாருங்க கண்ணுங்களா, படிப்பு தான் எல்லாமே! குறிப்பா, நீங்க கருப்பர்களாக இருக்கும் பொழுது” என முதல்நாள் ஃப்ரான்ஸில் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளிடம் சொல்கிறார் சியோலோ.

“ஏன் கருப்பர்களுக்கு மட்டும் அப்படி?” எனக் கேட்கிறான் குட்டி காமினி.

the-african-doctor

சியோலோ எந்தப் பதிலும் சொல்வதில்லை. படம் இத்தகைய கேள்விகளை எழுப்பி, அதைச் சிக்கலாக்காமல் மிருதுவாகக் கடந்து விடுகிறது படம். அந்தக் கிராமத்து மக்களும் எளியவர்கள் தான் என்றாலும், தங்களுக்குப் பரீச்சயமில்லாத நாட்டிலிருந்து, அதுவரை பார்த்திராத நிறத்தில் இருக்கும் மருத்துவரையும், அவரது குடும்பத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர். மனைவியின் ஆர்ப்பாட்டமான உறவினர்கள் பிரசெல்ஸில் இருந்து வந்தாலே, சியோலோ பதட்டமாகி விடுகிறார். இவர்களின் ஆர்ப்பாட்டம், மேலும் தங்களை அந்நியர்களாக்கிவிடுமோ என்ற கவலை சியோலோவிற்கு.

சியோலோ எப்படித் தன் சிநேகமான அணுகுமுறையாலும், பொறுமையாலும் அந்தக் கிராமத்து மக்களைக் கவர்ந்தாரோ, அப்படி சியோலோவாக நடித்திருக்கும் மார்க் ஜிங்கா தன் நடிப்பால் பார்வையாளர்களைக் கவருகிறார். அவரது மனைவியாக நடித்துள்ள ஃப்ரெஞ்சு நடிகை ஐசா மைகாவும், அந்தப் பாத்திரத்திற்கு மிக அற்புதமான தேர்வு. மிகவும் நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ், படத்தை ஒரு மிகச் சிறந்த ஃபீல் குட் படமாக உணர வைக்கிறது.