சரித்திர புகழ் மிக்க சாகச போர் காவியங்களைத் திரையில் வடிப்பதென்பது ஒரு சாமான்ய செயற்பாடன்று. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில், ஆஃப்ரிக்க தேசமான தகோமாவில் (Dahomey) 1800 களில், அந்தத் தேசத்தைக் காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி (Agojie) என பேர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை ஒரு காவியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர்.
உயரிய உடை அலங்காரங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், அசர வைக்கும் போர் காட்சிகள் என அதிக பொருட்செலவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி வுமன் கிங்’ படத்தைப் பரபரப்பாக உருவாகியுள்ளனர். ஆராய்ச்சியின் அடிப்படையில், இவ்வாண்டில் A+ Cinema Score கௌரவத்தைப் பெற்ற இரு படங்களில் இதுவும் ஒன்று.
இயக்கம் முதல் இதர தொழில்நுட்பக் கலைகள் வரை அதிகபட்சமாகப் பெண்களே பங்குபெறும் ஓர் உன்னதமான தற்காப்பு போர்க் காவியமிது. Viola Davis , Thuso Mbedu மற்றும் Lashana Lynch ( அடுத்த பெண் 007) ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திட Gina Prince -Bythewood படத்தை இயக்கியுள்ளார். Dana Stevens மற்றும் Maria Bello திரைக்கதையை அமைக்க Cathy Schulman படத்தைத் தயாரிக்க Polly Morgan ஒளிப்பதிவைக் கவனிக்க Gersha Phillips உடையலங்காரத்திற்குப் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், பல பெண்கள் படத்தின் முன்ணணியிலும் பின்ணியிலும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அக்டோபர் 14, 2022 அன்று வெளியிடுகிறார்கள்.