Shadow

தொரட்டி விமர்சனம்

thoratti-movie-review

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம்.

‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும்.

கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது.

மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஷமன் மித்ரு. பெற்றோர் பேச்சோ, மனைவி பேச்சோ கேட்காமல், குடிக்காரக் கள்ளர்களோடுநட்பைப் பேணுகிறார் நாயகன். அதற்காக நாயகன் கொடுக்கும் விலை மிகப் பெரியது. அலட்டலில்லாத நடிப்பில் கதையின் போக்கிற்கு நியாயம் செய்துள்ளார். எளிமையான கதைக்களத்தைத் தன் ஒளிப்பதிவால் மிகச் சிறந்த பதிவாக மனதில் ஊடுருவ விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர். ஆடுகள் மேயும் புழுதி நிலம், மலைக் முகடு, நாயகனின் குடிசை, அதை ஒட்டிய ஆட்டுக் கொட்டகை என அவரது ஒளிப்பதிவு மனதிற்கு மிக நெருக்கமாய் அமைந்திருந்தது.

வேத் சங்கரின் இசையுடன், சினேகனின் பாடல் வரிகள் இணைந்து மிகப் பெரிய ரசவாதத்தைச் செய்கின்றன. எல்லாப் பாட்டுகளும் அட்டகாசம் என்றாலும், குறிப்பாக, விஜய் பிரகாஷும், கல்யாணி நாயரும் பாடிய ‘செளக்காரம் போட்டு’ என்ற பாடல் மிக ரம்மியமான மெலடி. ‘ஆள் இல்லா காட்டுக்குள்’ என்ற பாடலில் தொனிக்கும் சோகம் நெஞ்சைக் கவ்வுகின்றன. ‘ஏலே ஏலே’, ‘உசுர உருக்கி’ ஆகிய பாடலும் மனதை நெருடுகின்றன. சினேகனின் பெஸ்ட் ஆல்பங்களில் ஒன்றாக இப்படமிருக்கும்.

நாயகனின் பெற்றோர் நல்லய்யாவாகவும், பேச்சியாகவும் நடித்துள்ள அழகு, வெண்ணிலா கபடி குழு ஜானகி ஆகியோரின் நடிப்பும் படத்தின் யதார்த்தத்திற்கு உதவியுள்ளது. படம் வாழ்வியலில் இருந்து விலகி செந்தட்டி, ஈப்புலி, சோத்துமுட்டி எனும் திருடர்களை நோக்கிச் செல்வதால், படம் வாழ்வியலைத் தரிசித்த முழுத் திருப்தியைத் தரவில்லை.

படத்தின் உயிர் நாடி என்றால், செம்பொண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சத்யகலா தான். ‘வாவ்’ என அதிசயிக்கும்படி செம்புலப் பெயர் நீர் போல் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். பெண் பார்க்கக் குடித்து விட்டு வரும் நாயகனின் போதையைத் தெளிவித்துத் தீர்மானமாகத் தன் முடிவைச் சொல்வதும், ‘இன்னிக்குத்தான் இங்க’ எனச் சொல்லி மாமனாரையும் மாமியாரையும் எம்.ஜி.ஆர். படம் பார்க்க அனுப்புவதும், நாயகனை வழிக்குக் கொண்டு வருவதெனக் கலக்கியுள்ளார். படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க ஒரு காரணமாக உள்ளது இவரது நடிப்பு. இந்தக் கதாபாத்திரம் இத்தகைய ஈர்ப்புடன் அமைய, இயக்குநர் பி.மாரிமுத்துவின் கதாபாத்திர வார்ப்பே காரணம். மண்ணிலிருந்து கதாபாத்திரங்களை எடுக்கும் போது அவர்கள் எவ்வளவு அழகானவர்களாக மாறிவிடுகிறார்கள்?