கிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால் போதும், ‘அக்காவ், என் மாமன் செய்யற வேலையைப் பார்த்தியா?’ என ஒரு பாட்டம் மூக்கைச் சிந்தி அழுது வைக்கும். அதற்கப்புறம் சகஜமாகி காப்பி தண்ணி குடித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தான் கிளம்பும். அடுத்த தெருவிற்குப் போனால், ‘அயித்த என் மாமியா என்ன பண்றா தெரியுமா?’ என மறுபடியும் அழுவதற்குத் தயாராகிவிடும். நிறைய சினிமாவில் கூட அந்த மாதிரி கேரக்டர் வரும். அந்த கேரக்டரோட டவுசர் போட்ட அப்டேட்டட் மாடர்ன் வெர்ஷன் தான் சாக்ஷி. நேத்து முதல் ஷாட்டே சாக்ஷி அழுது கொண்டிருப்பது தான். கேமராவைப் பார்த்து, ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என அழுது கொண்டிருந்தார்.
எப்பேர்ப்பட்ட அறிவாளியும் காதல் உணர்வு வரும் போது எப்படி அடி முட்டாளாக மாறிடுவாங்க என்பதற்கு, சாக்ஷி ஒரு சிறந்த உதாரணம். அண்ணா யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய பெண் அவர். நன்றாகப் படிப்பவர் எல்லாம் அறிவாளியா எனக் கேட்டால், கண்டிப்பா இல்லை. ஆனால் கோல்டு மெடல் வாங்குவதற்குப் படிப்பைத் தாண்டிய இன்டலிஜென்ட்ஸ் கொஞ்சமாவது வேண்டும். ஆனால் சாக்ஷியின் சொந்த வாழ்க்கைக்கு அந்த இன்டலிஜென்ட்ஸ் கொஞ்சம் கூட உபயோகப்படவில்லை.
ஓக்கே! கவினோடு பழகினார். நட்பில் ஆரம்பித்தது, பேசிப் பேசி ஒரு கட்டத்தில் இது நட்பையும் தாண்டியது என அவருக்குப் புரிகிறது. அந்தப் பக்கம் கவின், இது தெரிவ்த உடனே ஃபுல் ஸ்டாப் வைக்கிறார். ஆனால் அதை ஏத்துக் கொள்கிற ஸ்டேஜை சாக்ஷி தாண்டிவிட்டார். காரணம் அவங்க நட்பைத் தாண்டின விஷயங்களும் பேசியிருக்காங்க.
நட்பு மட்டும் போதும் எனச் சொன்ன கவின் லோஸ்லியா பக்கம் போகாமல், அவர் கூட நெருக்கமாகாமல் இருந்திருந்தால், சாக்ஷிக்கு பிரச்சினையே இல்லை. ஆனால் கவின் இன்னொரு பெண்ணிடம் பேசுவதை சாக்ஷியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ எனும் மோடில் இருக்கின்ற சாக்ஷி, அதனாலேயே பல முறை புறக்கணிக்கப்பட்டும், தானே கீழே இறங்கி வந்து கவினிடம் இருக்கற உறவைத் தொடர்கிறார். லோஸ்லியாவிடமும் பேசி, தனக்கும் கவினுக்குமான உறவு நட்பைத் தாண்டியதெனப் புரிய வைக்கிறார்.
‘ஆல் இஸ் வெல்’ எனப் போய்க் கொண்டிருக்கும் போது தான், கவினிடம் மறுபடியும் பிரச்சினை வருகிறது. மறுபடியும் சமாதானம் ஆனதுக்குப் பிறகும், கவின் பேரை நாமினேட் செய்தது, இன்னொரு பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழி போடுமென சாக்ஷி எதிர்பார்க்கவில்லை. இந்த வாரம் நடந்தது ஓப்பன் நாமினேஷன். ஆக, கவின் பேரைச் சொல்லிவிட்டு, அப்புறம் பேசி சமாதானம் ஆகிக்கலாம் என நினைத்து கவின் பேரைச் சொல்லிருக்கலாம். ஏனெனில் இப்போதைக்கு சாக்ஷியோட சம்பந்தப்பட்ட எதிரிகள் யாருமே இல்லை. காரணம் இல்லாமல் ஒரு பேரைச் சொல்லி புது எதிரியைச் சம்பாதிக்க வேணாம் என நினைத்திருக்கலாம். ஆனால் நாமினேஷனுக்குப் பின், கவின் பேசாமல் போனது சாக்ஷி எதிர்பார்க்காத ட்விஸ்ட். ஒரே நேரத்தில் கவின், லோஸ்லியா இருவருமே தன்னைப் புறக்கணித்ததை சாக்ஷியால் தாங்க முடியவில்லை. வீட்டில் அத்தனை பேர் இருந்தும், எல்லோரும் ஆறுதல் சொல்லியும், அறிவுரை சொல்லியும், இவங்க இரண்டு பேரைத் தவிர யாரையும் யோசிக்க முடியவில்லை.
சரி எத்தனையோ தடவை கழுவி ஊத்தியும், பின்னாடியே போய்ப் போய், கக்கூஸ்க்குக் கூட விடாது கருப்பு போல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்த கவின், தன் பேரை நாமினேஷனுக்குச் சொன்ன உடனே எதற்கு இவ்வளவு கடுப்பாகவேண்டும்? ஒரே காரணம், சாக்ஷியின் பொசசிவ் எண்ணம் கவினுக்குப் பிடிக்கவில்லை. சும்மா கல் வீசிப் பார்த்திருக்கிறார். இரண்டு பெண்ணும் விழுந்துவிட்டார்கள். ‘நாம நட்பா இருக்கலாம்’ என சாக்ஷியிடம் சொன்னதுக்குப் பிறகும், கவின் செய்வதை கண்டுக்காமல் சாக்ஷி இருந்திருந்தால், கவினுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எப்பவும் போல இரட்டை மாட்டு வண்டியில் சவாரி செய்துவிட்டு ஜாலியாக இருந்திருப்பார். ஆனால் சாக்ஷி கொஞ்சம் முரண்டு பிடிக்கறார். ஆனால் அதே சமயம், லோஸ்லியாவிடம் இந்தப் பிரச்சினை இல்லை. கவினும் சாக்ஷியும் க்ளோஸ் எனத் தெரிந்த பின்னும், கவினிடம் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுகிறார். கவின் அப்பப்போ சாக்ஷியிடம் பேசிட்டு வருவதைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்பதில்லை. இதை தான் சாக்ஷியிடமும் எதிர்பார்க்கிறார் கவின். லோஸ்லியாவைப் பொறுத்தவரைக்கும், ‘தன் கண்ணசைவுக்கு ஒருத்தன் அடிமையா கிடைச்சிருக்கான்’ என்ற கர்வம் மட்டும் தான். அதைத் தாண்டி அந்த உறவில் எதுவுமே இல்லை என்று தான் தோணுது. ஆனால் சாக்ஷி கூட பேசாமல் ஒதுங்கிப் போவதற்கான காரணம் தான் விளங்கவில்லை.
சாக்ஷி, கவின், லோஸ்லியா இந்த முக்கோண நட்பு/காதல் பிரச்சினை தான் நேற்று வெடிச்சது.
‘போடு ஆட்டம் போடு’ டாஸ்க்கில் அபி தன் பங்குக்கு ஒரு பெர்ஃபாமன்ஸ் கொடுத்தார். என்ன தான் ஓரளவுக்கு நாட்டியம் தெரியும் என்றாலும், எந்த வித ப்ராக்டிஸும் இல்லாமல் ஒரு பென்ச் மார்க் பாடலுக்கு ஆடுவ்து ரொம்பக் கஷ்டமான விஷயம். ஓரளவுக்கு ஒப்பேத்தி விட்டார் அபி. முகின் நன்றாகவே ஆடினார். எல்லோருக்குமே சாண்டி தான் டான்ஸ் மாஸ்டர். தர்ஷனுக்கு பாதிபாட்டு தான் கிடைத்தா இல்லை கட் பண்ணிட்டாங்களா எனத் தெரியவில்லை.
ஃபோர்ஸ் பற்றவில்லை என நினைத்த பிக் பாஸ் மொட்டக் கடுதாசி என ஒரு டாஸ்க் கொண்டு வந்தார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கேட்க நினைக்கும் கேள்வியைக் கடுதாசியாக எழுதி கொடுக்கவேண்டும். கவின், சாக்ஷி, லோஸ்லியா, சேரன், சரவணன், இவங்களுக்குத்தான் நிறைய கேள்விகள்.
‘விருதுகள் வாங்கின, புகழ்பெற்ற இயக்குநரான நீங்க பிக்பாஸுக்கு வந்தது ஏன்?’ சேரனுக்கு சரவணன் எழுதின கேள்வி.
‘பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கியே இருக்கீங்களே! ஏன்?’ இது சரவணனுக்குச் சேரன் எழுதின கேள்வி.
சரவணன் அவரைப் புறக்கணிப்பது ஒரு முள்ளாக உறுத்திக் கொண்டே இருக்கு சேரனுக்கு. காரணமும் தெரியாமல் குழப்பத்தில் இருக்கார் சேரன்.
இப்போதைக்கு இந்த வீட்டில், சேரன் இல்லையென்றால் சரவணன் தான் சீனியர் பதவிக்கு வர முடியும். வயதில் சரவணன் சீனியர் என்றாலும், சேரன் இருக்கும் வரை தனக்கு முக்கியத்துவம் கிடைக்காதுஎன நினைக்கின்றாரோ எனத் தோன்ற வைக்கின்றன சரவணனின் நடவடிக்கைகள். அதனாலேயே சாண்டி, கவின் யங் டீம் கூட தன் கம்ஃபர்ட் சோனை விட்டு வெளியே வந்து கூட்டணியில் சேர்ந்திருக்கலாம்.
முகினுக்கும் அபியைப் பற்றின கேள்வி தான் வந்தது. மது தான் எழுதினாங்க என நினைக்கிறேன்.
கவினுக்கும், சாக்ஷிக்கும் நடுவில் இருந்த விரிசல் இன்னும் அதிகமாகிவிட்டது. நேற்று ஒருத்தர் மேல் ஒருத்தர் மாற்றி மாற்றி கம்ப்ளெயின்ட் பண்ணிக் கொண்டனர். இந்த ரிலேஷன்ஷிப்பைச் சீரியசாக எடுத்துக் கொள்கிற சாக்ஷியை விட, தன்னை மாதிரியே டைம் பாஸுக்குப் பழகுகின்ற லோஸ்லியா போதும் என நினைக்கறார் போல. ஆக, சாக்ஷியைக் கழட்டிவிட நினைத்துக் கொண்டிருந்தவருக்கு, நாமினேஷன் காரணம் லட்டு மாதிரி கிடைத்தது. ‘இதான்டா சான்ஸ்’ என சாக்ஷியிடம் இருந்து முழுதாக விலகுகிறார். இது என்னோட யூகம் மட்டுமே! மாற்றுக்கருத்தினை வரவேற்கிறேன்.
‘நீங்க முன்ன மாதிரி இல்ல, யார் கூடவும் பேச மாட்டேங்கிறிங்க’ என லியாவுக்குக் கேள்வி வந்தது. ‘இங்க ரெண்டு பேர் கூடிப் பேசினாலே, மூனாவதா ஒருத்தரைப் பத்தித்தான் பேசறிங்க. அது எனக்குப் பிடிக்கல. நான் எதுவா இருந்தாலும் நேராவே பேசிருவேன்’எனச் சொன்ன வரைக்கும் சரி. அதக்கப்புறம் பேசினது எல்லாமே அவஷ்யமே இல்லை.
அந்தப் பக்கம் கவின், இந்தப் பக்கம் சாக்ஷி, நடுவில் அபி, அப்புறம் முகின் ஒரே நேரத்தில் இத்தனை பேரும் அழுது கொண்டிருந்தனர். யப்பா சாமி, முடிலடா!
சரவணன் தனக்குப் போட்ட எல்லா பாலையும் சிக்ஸ் அடித்துவிட்டு, ‘அவ்வளவு தானேப்பா, இன்னும் ஏதாவது இருக்கா?’ எனக் கேட்டுவிட்டுப் போய்விட்டார். இன்றும் இந்த டாஸ்க் தொடருமா எனத் தெரியவில்லை.