Shadow

உடன்பால் விமர்சனம்

ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம்.

பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், சகோதர – சகோதரி பந்தம், குயுக்தி, கடன் சிக்கல் என மனித மனங்களை ஆக்கிரமிக்கும் உணர்வுகளைக் கலகலப்பாகத் தொட்டுச் செல்கிறது படம்.

இந்தப் படத்தின் கதையை, விநாயகத்தின் குடும்பக்கதை என இரண்டு வார்த்தையில் சொல்லலாம். விநாயகமாக சார்லி நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு அசால்ட்டாய் ஸ்கோர் செய்யக்கூடிய பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார். பேரன் மீது பாசத்தைக் கொட்டும் தாத்தாவாகவும், வெடித்துக் கோபமுறும் மகனிடம் பொறுமையாகப் பேசும் தந்தையாகவும் மனதில் பதிகிறார்.

வழக்கம் போல், கலகலப்பிற்கு உதவும் பாத்திரத்தில் அசத்தியுள்ளார் விவேக் பிரசன்னா. சீரியசான நேரத்திலும் மிக்ச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் முரளி எனும் பாத்திரத்திற்கு அநாயாசமாகப் பொருந்திப் போகிறார். கதையின் ஓட்டத்திலேயே ஒரு டார்க் ஹ்யூமர் இருந்தாலும், தனது நடிப்பால் தானேற்கும் பாத்திற்குக் கூடுதல் மெருகேற்றுவதில் வல்லவரான விவேக் பிரசன்னா, இப்படத்திலும் நகைச்சுவையில் அதைச் செய்து காட்டியுள்ளார்.

பரமனின் மனைவி ப்ரேமாவாக அபர்ணதி நடித்துள்ளார். கணவனின் தங்கை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டதற்காக, கணவனிடம் அந்தக் கோபத்தைக் காட்டுவது, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வதென டிப்பிக்கல் மனைவியாகக் கச்சிதமாக நடித்துள்ளார். தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள் என கற்பித்துக் கொண்டும் கோபப்படும் விசாலம் கதாபாத்திரத்தில், நக்கலைட்ஸ் தனம் நடித்துள்ளார். வேகமாக வளரும் இந்தியாவை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றான அல்சீமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவராக வருகிறார் விசாலம். மறதியை நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியிருந்தாலும், அவர்களைத் தொடர்ந்து கவனிக்கும் பொறுப்பின் சுமையை உணர்ந்து, 20 லட்சத்தில் பங்கு பிரிக்கும்போது அதை ஒரு காரணியாகக் கவனத்தில் கொள்வது நோயின் தீவிரத்தை உணர்த்தும் நிதர்சனம்.

விநாயகத்தின் இளைய மகன் பார்த்தியாக விஜய் டிவியின் தீனா நடித்துள்ளார். கைதி படத்தின் தொடர்ச்சியாக, விநாயகம் பிரியாணி எனும் கடையை நடத்துபவராக வருகிறார். இரண்டாம் பாதியில்தான் தோன்றுகிறார். ஆனால் அவரை விடவும் அவரது பிரியாணி அண்டா, படத்தின் ஓட்டத்தில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளது.

விநாயகத்தின் மூத்த மகன் பரமனாக லிங்கா நடித்துள்ளார். அவரை அழுத்தும் கடன் சுமையை மிக லாகவமாகத் தன் உடற்மொழியில் கொண்டு வந்துள்ளார். அன்பான தந்தையாக, பொறுப்பான கணவனாக, தங்கை கண்மணியுடனான அவருக்குள்ள பந்தம் என மிக எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். லிங்காவின் கேரியரில், இது அவருக்கு மிக முக்கியமான படமாக அமையும்.

விநாயகத்தின் மகள் கண்மணியாக காயத்ரி நடித்துள்ளார். பணத்திற்காகத் திட்டம் போட்டுவிட்டு, பார்த்தியைப் பார்த்ததும், அவர் அடிக்கும் அந்தர்பல்டிதான் அவரது கதாபத்திரத்தின் அல்டிமேட் குணாம்சம். கழுவும் நீரில் நழுவும் மீனாக, நேரத்திற்கு ஏற்றாற்போல் மாறும் கதாபாத்திரத்தில் காயத்ரி ரசிக்கவைக்கிறார்.

நகைச்சுவையாகச் செல்லும் படம், மிகக் கனமாக முடிகிறது. கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்களை வெற்றியாளர்கள் என்கின்றோம். ஆனால் எளியவர்கள் அப்படித் தங்கள் சிக்கலில் இருந்து மீள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதை மட்டும் எள்ளலுடன் பார்க்கும் பொதுச் சமூகத்தின் பிரதிபலிப்பே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமையப் போகிறது. இயக்குநர் கார்த்திக் சீனிவாசனும், தார்மீக அடிப்படையில், பரமனைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து விடுகிறார். தாத்தாவைப் பார்த்த தனது மகனின் மகிழ்ச்சிக்கு முன் எதுவும் பெரியதில்லை என நினைக்கும் பரமனிற்குக் கார்த்திக் சீனிவாசன் அளித்துள்ள தண்டனை மிகப் பெரியது.