கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம்.
மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை.
மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் படம் முடிந்த பின், ரோலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யாவைக் களமிறக்கி அடுத்த பகுதிக்கான லீட்டைக் கொடுத்து எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர். பல்வேறு புள்ளிகளை, அதாவது அவரது பழைய படங்களிலிருந்து ரெஃபரென்ஸ்களை நேர்த்தியாக இணைத்துள்ளார்.
விஷுவல் ட்ரீட்டாக இல்லாமல், கதையோடு இயைந்தும் விக்ரம் ரசிக்க வைக்கிறது. அதனாலேயே படத்தின் நீளமான 174 நிமிடங்கள் பெரிய சுமையாக அழுத்தவில்லை. பாசமிகு தாத்தாவாக நெகிழும் கண்களுடன் கமல்ஹாசன் ரசிக்க வைக்கிறார். காட்சிகளின் தாக்கத்தால் கமலின் ஆக்ஷனைக் கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது என்றாலும், அத்தகைய ஆக்ஷனைத் தாங்கும் அளவு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் ஸ்மார்ட்டாக மூளையைப் பயன்படுத்தும் கமாண்டராகக் கமல்ஹாசனிற்குக் கெளரவத்தைக் கூட்டியிருக்கலாம். உரண்டு புரண்டு பறந்து ரத்தம் சிந்தும் கதாபாத்திரத்தில் ஏற்றி வைத்து, மீண்டும் ஸ்கொயர் 1 ஆன நார்சிஸ ஹீரோயிசத்தில்தான் கமலைப் பிடித்துத் தள்ளியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஏஜென்ட் டீனாவின் கதாபாத்திரம் வெளிப்படும் தருணம் அருமையாக வந்துள்ளது. கிட்டத்தட்ட விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஏற்படும் *ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போல! ஆனாலும், அத்தகைய தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டீனா, அதற்கான எந்த முன் தயாரிப்புகளுமின்றி, ‘உங்க மாமாக்கு ஃபோன் பண்ணு’ எனக் காரியத்தில் ஈடுபடாமல் சுவாதிஷ்டா கிருஷ்ணனிடம் கெஞ்சுவதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அந்த சிறுபிள்ளைத்தனத்தின் தொடர்ச்சியாகவே, கமலின் மருமகள் அவரிடம், ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ எனக் கேட்கும் வசனத்தையும் வைக்க முடிகிறது.
மன்னரின் குடும்பத்தைக் காப்பாற்ற தன் உயிரைப் பலி கொடுக்கும் விசுவாசமிக்க வீரர்கள் போல, 1987 பேட்ச்சைச் சேர்ந்தவர்கள் கமாண்டரின் பேரனைக் காப்பாற்ற உயிரைக் கொடுக்கின்றனர். நல்ல விஷயம்தான். ஆனால், அவ்வளவு துல்லியமாகத் திட்டம் வகுப்பவர்கள், பல வருடங்களாக அரசாங்கத்திடம் மறைந்து வாழும் சமர்த்தர்கள், குழந்தையைப் போர்க்களத்திற்குக் கொண்டு செல்லக்கூடாது என்று அடிப்படை மனிதாபிமானத்தைக் கைகொள்ளாத கொடுமைக்காரர்களாக உள்ளனர். போர்க்களத்திற்கு எதிரிகளை வரவைப்பது கமாண்டர்தான். குழந்தையைக் காபந்து பண்ணிவிட்டு எதிரிகளை இஷ்டப்படி பொறியில் சிக்க வைத்திருக்கலாம். தாத்தா – பேரன் சென்ட்டிமென்ட் தேவை இக்கணம் என வலிந்து திரைக்கதையில் சொதப்பியுள்ளனர்.
குழந்தையைக் கடத்திக் கமலை மிரட்டி, சரக்கு இருக்கும் இடத்திற்கு வரவைக்க நினைக்கிறார் விஜய்சேதுபதி. குழந்தையைக் காப்பாற்றி சரக்கு இருக்கும் இடத்திற்குக் கமலே குழந்தையைக் கொண்டு செல்கிறார். ‘டே, தம்பி பொழச்சுக்கோடா’ என்று குழந்தையிடம் புலம்புகிறார். ‘இவரே பாம் வைப்பாராம், இவரே எடுப்பாராம்’ என அக்குழந்தை வளர்ந்ததும் தன் தாயிடம் தன் தாத்தாவைப் பற்றிச் சொல்ல வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது.
மத்தபடிக்கு, விக்ரம், டமால் டுமீல் அதிரி புதிரி ஹிட்.
[…] சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். விக்ரம் எடுத்த இடத்தில் தான் இப்படத்தை […]