
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் ப்ரொடியூசராகப் பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அர்ச்சனா கல்பாத்தி, ”டிராகன் எங்களுக்கு ஒரு முக்கியமான படம். என்னுடைய ஃபேவரைட்டான படமும் கூட என்று சொல்லலாம். இந்தப் பயணம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதீப் ரங்கநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறோம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் முதல் முறையாகப் பணியாற்றி இருக்கிறோம். நல்லதொரு உள்ளுணர்வுடன் டிராகனைத் தயாரித்திருக்கிறோம். படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். இதைவிடப் படத்தில் நிறைய நல்ல அம்சங்கள் இருக்கின்றன” என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ”தமிழில் இது என்னுடைய இரண்டாவது படம். ‘ஓ மை கடவுளே!’ படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கிறேன். ‘ஓ மை கடவுளே’ படத்தில் சமூகப் பொறுப்புடன் கூடிய விஷயங்கள் இருந்தது போலவே, சமூகப் பொறுப்புடன் ‘டிராகன்’ திரைப்படத்திலும் பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். ஒரு இயக்குநராக ‘டிராகன்’ படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறோம் என்பதில் பத்து சதவீதம் தான் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கிறது. திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்லதொரு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஏனையவற்றை மறைத்திருக்கிறோம்.
நான் சொன்ன கதையை நம்பி ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா மேடம் ஆகியோர் வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழுச் சுதந்திரத்தை வழங்கினார்கள். நான் சொல்ல நினைத்ததைத் திரையில் உருவாக்குவதற்கு ஆதரவளித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் நாயகனான பிரதீப் ரங்கநாதனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்திற்கான அடித்தளத்தைப் பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் பேசி இருக்கிறோம். அதன் பிறகு அது குறித்து நிறைய கனவு கண்டோம். இன்று அதனைத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம். இதற்காக நாங்கள் எங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பிரதீப் ரங்கநாதன் எனும் என்னுடைய நண்பனை இந்தத் திரைப்படத்தில் நான் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ எனும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்த நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதனை தான் நான் இயக்கியிருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். இருவரும் நண்பர்கள் என்ற எல்லையைக் கடந்து தொழில் ரீதியாக நேர்த்தியாக உழைத்திருக்கிறோம்” என்றார்.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், “லவ் டுடே படத்திற்குப் பிறகு என்ன மாதிரியான கதைகளைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஏனெனில் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுபோன்ற தருணத்தில் தான் எனக்கு ‘டிராகன்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் என்னைக் கதையின் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டே இருப்பேன்.
‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்து, அவருடைய இரண்டாவது படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்குப் பிறகு தான் என்னுடைய 10 ஆண்டுகால நண்பரின் இயக்கத்தில் நடிக்கிறேன் எனச் சொல்லலாம். நாங்கள் இருவரும் நட்பையும் தொழிலையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து தான் பழகுகிறோம். அதனால் நட்பு என்றால் நட்பு, வேலை என்றால் வேலை, இதில் எந்தக் குறுக்கீடும் இருக்காது. இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது” என்றார்.