
கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும்.
தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை.
கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, வசனமெழுதி நடித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரை ‘குருவே’ என்றழைத்துக் கொண்டு அவரது வீட்டில் வளர்கிறார் இந்திரஜா. சந்திரசேகர் இந்திரஜாவை எப்பொழுதுமே ‘குண்டம்மா’ என்றே அழைக்கிறார். பெட்டிக்கடையில் ஒருவன் இந்திரஜாவின் உடலைக் கேலி செய்யும் விதமாகப் பேசி, ‘குட்டி யானை’ எனும் விளிக்கும்பொழுது, அவன் மூக்கில் குத்துகிறார்.
நாய், நீதிமன்றக் கூண்டில் ஏறிப் பேசுகிறது. அதாவது நாயின் குரைப்பை, செயற்கை நுண்ணறிவு மூலமாக வார்த்தைகளாக மாற்றி, அதைப் படித்துச் சொல்லுகிறார் சத்யன். ஒரு நாய்க்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இருக்க, அது பயிற்சி பெற்ற போலீஸ் நாய் என ஃப்ளாஷ்-பேக் கதையின் மூலமாகச் சொல்லியுள்ளனர். அக்காட்சிகளில் தன் மோப்ப சக்தியின் மூலமாகப் பல குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
நீதிமன்றத்தில், ‘காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் முகத்தைப் பார்த்தியா?’ என எதிர்கட்சி வக்கீலான பாலாஜி சக்திவேல் நாயிடம் கேள்வி கேட்கிறார். நாய், காரின் வண்ணத்தைப் பார்த்துள்ளது, வண்டி எண்ணைப் பார்த்துள்ளது, ஆனால் அவ்வண்டியை ஓட்டியவரின் முகத்தைப் பார்க்கவில்லை என்பதால் வழக்கு ஸ்தம்பித்துவிடுவது போல் காட்டியுள்ளனர். மனிதர்களை விட 10000 மடங்கு அதிக மோப்ப சக்தியுள்ள நாய்களால், ஒரு வாசத்தைப் பின் தொடர்ந்தே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலும். அதனால் தான் நாய்கள் புலனாய்வில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால், ஜான்சி தனது மோப்ப சக்தியால் அவனை அடையாளம் கண்டுகொண்டேன் என குரைக்காமல் மெளனம் காக்கிறது. நேரில் கண்ட சாட்சியைத் தருவிக்கும்படி நீதிமன்றம் கோருகிறது. நீதிபதியாக Y.G.மகேந்திரன் நடித்துள்ளார்.
வழக்கில் வெல்ல முடியாமல் போய்விடுமோ என தேவாலயத்திற்கு முதல்முறையாகச் சென்று நாயிற்காக மன்றாடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். தேவாலயத்தை விட்டு வெளியேறும் போது, அவரை ஒருவர் இடைமறித்து, ‘மார்னிங் என் ப்ரேயரில் நீங்க வந்தீங்க. நான் கடவுள் அனுப்பிய தூதன்’ என்கிறார். தேவாலயத்திற்குச் செல்லும் முதல் முறையே, எஸ்.ஏ.சந்திரசேகருக்குக் கை மேல் பலன் கிடைக்கிறது. தேவ தூதனின் உதவியோடு, கண் தெரியாத ஜார்ஜ் மரியானைச் சாட்சியாக நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். ஜார்ஜ் மரியானின் கதாபாத்திரம் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண் தெரியாதவரின் சாட்சியை நீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பது படத்தின் மிகச் சுவாரசியமான பகுதி.
“நான் பழிவாங்குவதற்காக இந்த வழக்கைப் போடவில்லை” என நாய் குரைக்கிரது. Revenge of a Dog என்பதே தலைப்போடு வரும் உப தலைப்பு. “குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு” என்கிறது நாய். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்குப் பணமளிக்கும் அரசு, நாய் சொன்னாலாவது திருந்துமா என தன் வாதத்தை நீதி மன்றத்தில் முன் வைக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இயக்குநர் நிதின் வேமுபதி, நாய்க்குட்டியைக் காரேற்றிக் கொல்பவராகவும் நடித்துள்ளார். மனிதனைப் போலவே பிற உயிரினங்களுக்கும் பூமியில் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என்பதைப் படம் மிக அழுத்தமாகச் சொல்லியுள்ளது.