Shadow

ஜாம்பி விமர்சனம்

zombie-movie-review

விஷமேற்றப்படும் கோழியைச் சமைத்துச் சாப்பிட்டதால் சிலர் ஜாம்பி ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகியும், ஐவரைக் கொண்ட நண்பர்கள் குழுவும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

பறவைக் கோணத்தில், ஒற்றையடி பாதை கொண்ட நிலப்பரப்பில் ஒரு வாகணம் செல்வதைக் காட்டுகின்றனர். இப்படியாகப் படத்தின் தொடம்கம் செமயாக உள்ளது. அவ்வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் கோழி, உணவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தயாராகிறது என மிக ப்ரொஃபஷ்னல் படமாகத் தொடங்குகிறது.

பின் திரையில் கொட்டை எழுத்தில் கேரக்டர் பெயரைப் போட்டு கதாபாத்திரங்களைத் தொன்மையான முறையில் அறிமுகம் செய்கின்றனர். அங்கிருந்து டாஸ்மாக். டாஸ்மாக்கில் இருந்து மரக்காணத்தில் ஒரு லாட்ஜ். மட்டையாகி அக்கதாபாத்திரங்கள் விழித்தால் சுற்றிலும் வாயில் ரத்தம் வடிய சுற்றிக் கொண்டிருக்கும் ஜாம்பிகள். ஆனால், இந்தக் கட்டத்திற்குள் வருவதற்குள் ஒருவழியாக்கி விடுகின்றனர். மொக்கை போடுவது கூட ஓகே, ஆனால் அதையே அசூயை ஏற்படும் வண்ணம் போடுகின்றனர்.

இரண்டாம் பாதியில், க்ளைமேக்ஸின் நெருக்கத்தில், ஜாம்பியை ஏமாற்ற நண்பர்கள் பெண் உடையை அணிகின்றனர். பின் ஜாம்பியை ஏமாற்ற, எப்படி நடக்கவேண்டுமென ஒவ்வொரு கதாபாத்திரமும் டெமோ காட்டுகின்றனர். அதைப் பார்த்துக் கொலைக்காண்டு ஆவதைத் தடுக்க முடியவில்லை.

படம் கொஞ்சம் ஸ்ஃபூப் மூவியும் கூட! விக்ரம் வேதா, பேட்ட, கோலமாவு கோகிலா என உரண்டைக்கு இழுத்திருந்தாலும், க்ளைமேக்ஸ் ஃபைட்டில் அவெஞ்சர்ஸ் இறுதிச் சண்டையைப் போல் உருவாக்கியுள்ளது நல்ல கற்பனை. ஆங்காங்கே வெகு சில காட்சிகளை ரசிக்க முடிந்தாலும், முழுப் படமாக ஒரு அவெர்ஷன் ஏற்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

யோகி பாபு வரும் காட்சிகள் கொஞ்சம் ஆசுவாசம் அளிக்கிறது. தனது அடியாட்களிடம் சிக்கிக் கொண்டு அவர் லேசாய் கிச்சுகிச்சு மூட்டியவண்ணம் உள்ளனர். ‘எனக்குக் கல்யாண வயசுதான்’ என்ற பாடலின் பின்னணியில், பாவாடை சட்டை அணிந்து யோகி பாபு நடந்து வரும்போது தியேட்டர் சிரிப்பொலியில் மூழ்குகிறது. கவர்ச்சிகாக யாஷிகா ஆனந்த்; நகைச்சுவைக்காக யூ-ட்யூப் புகழ் கோபி – சுதாகர், கோலமாவு கோகிலா அன்புதாசன், பிஜிலி ரமேஷ், T.M.கார்த்திக் ஆகியோரைப் பிரதான நடிகர்களாக்கியுள்ளார் இயக்குநர். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், அசூயை தரும் காட்சிகளைத் தவிர்த்து, முழு நீள ஸ்பூஃப் காமெடிப் படமாக இயக்குநர் புவன் நல்லானால் உருவாக்கியிருக்க முடியும்.