Shadow

பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி

bigg-boss-3-day-75

பாய்ஸ் அணி உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கவின், மீசை, தாடி எல்லாம் ட்ரிம் பண்ணி சின்ன பையன் மாதிரி இருந்ததை அவரே கிண்டல் பண்ணிக் கொண்டார். சாண்டி ஸ்கூல் டாஸ்கிக் பேசின மாதிரி பேசினார். இந்த வீட்டில் சாரி கூடாது, சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கவின் சொல்ல, ‘மொத்தத்துல மனுசனாவே இருக்கக்கூடாது’ என சாண்டி முடித்தது அல்டிமேட்.

ஷெரின் இப்பவும் அழுது கொண்டே இருக்க, தர்ஷன் சமாதானபடுத்த பேசினார். ‘யாரோ சொல்றதை நீ ஏன் சீரிஸா எடுத்துக்கிற?’ எனக் கேட்ட போது, ‘அது யாரோ இல்ல, என் ப்ரெண்ட். நீ பேசினா எப்படி ஹர்ட் ஆவேனோ, அப்படித்தான் வனிதாவும்’ எனச் சொன்னபோது, ‘இவ்வளவு அழுகையிலேயும் எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்’ என ஆச்சரியமாக இருந்தது. ஒரு நண்பர் நம்மைத் தப்பாக பேசிட்டார் எனத் தெரிந்தால், ‘அவன்லாம் ஒரு மனுசனா?’ என அந்த நொடியிலேயே தூக்கிப் போடும் உலகத்தில், இம்புட்டு நல்ல மனசு ஷெரினுக்கு ஆகாது. கடைசியில் பேசிச் சிரிக்க வைத்துவிட்டார்.

நாள் 75

‘சொப்பன சுந்தரி நான் தானே!’ பாடலுடன் தொடங்கியது நாள். காலையில டிபன் முடித்த ஷெரினிடம், உண்மையை விளம்பிக் கொண்டிருந்தார் மோகன். ‘இந்த வீட்டுல யாரும் மனசுல இருந்து பேசலை. எல்லாரும் நடிக்கறாங்க, யாரையும் நம்பாத’ எனச் சொல்ல, அங்கிருந்த முகின் டென்சனாகிவிட்டார் (அலோ மிஸ்டர் மோகன், அம்பி ரொம்ப கோபக்காரனாக்கும், அப்பப்போ சேரை எல்லாம் எடுத்து அடிப்பார். உங்களது வீக் பாடி தாங்காது, பார்த்துக்கோங்கோ!)

வெளியே போய் பார்த்துவிட்டு வந்ததுக்கு அப்புறமும், முகினைக் கூப்பிட்டு, ‘நீ அன்னிக்கு ஏன் எனக்கு சப்போர்ட் செய்யலை?’ எனக் கேட்கிறார். ஒன்று அவர்கள் மேல் கோபம் இருந்தால், வந்த இத்தனை நாளில் அவங்க நாலு பேரையும் உட்கார வைத்து கேள்வி கேட்டிருக்க வேண்டும். மோகன் வருத்தப்பட்டதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இது நடந்திருந்தால் கண்டிப்பாக, அவங்க மன்னிப்பு கேட்டிருப்பார்கள். மோகனும் பெரிய மனிதராய் அழகாக மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால் என்னவோ பெரிதாகப் பழிவாங்குகின்ற மாதிரி, எப்படிப் போனாரோ அப்படியே வந்திருக்கிறார். என்னத்த பார்த்துட்டு வந்தாரோ!?

பாய்ஸ் டீம் வெளியே உட்கார்ந்து ஜாலி பண்ணிக் கொண்டிருக்க, ‘அதெப்படி இவனுக மட்டும் ஜாலியா இருக்கலாம்?’ என யோசித்த வனிதா, ‘லன்ச் டைம் ஆச்சு. வெசல் வாஷிங்ல இருக்கறவங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?’ எனக் கேட்க, பதறி அடித்துப் பின்னாடியே வந்தார் கவின்.

கவின் – ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்ச உடனே ஒரு மணி நேரம் எல்லா வேலையும் முடிச்சுட்டு தான் போனோம். அப்பவே இந்தப் பாத்திரத்தையும் போட்ருக்கலாம் இல்ல?

வனிதா – இப்ப தானே லன்ச் பண்ணினோம். நீங்க வந்து ஏதாவது வேலை இருக்கான்னு கேக்கணும் இல்ல? அதானே உங்க வேலை!

கவின் – ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்ச உடனே ஒரு மணி நேரம் எல்லா வேலையும் முடிச்சுட்டு தான் போனோம். அப்பவே இந்த பாத்திரத்தையும் போட்ருக்கலாம் இல்ல.

வனிதா – இப்ப தானே லன்ச் பண்ணினோம். நீங்க வந்து ஏதாவது வேலை இருக்கான்னு கேக்கணும் இல்ல? அதானே உங்க வேலை!

இன்னும் இரண்டு தடவை மேல எழுதியுள்ளதைப் படிக்கவும்.

வனிதாவையே டயர்ட் ஆக்கிவிட்டார் கவின். கடைசியில் கன்ஃப்யூஸ் ஆன வனிதா, டமாலென குக்கிங் டீம் மேல பாய்ந்துவிட்டார். ‘உங்களுக்கு ஒரு ஆள் கொடுத்தேன். அவங்க எங்க இருக்காங்கான்னு நீங்களே பாருங்க!’ எனச் சொல்ல, வர்தா புயல் திசை மாறி வந்த மாதிரி பதட்டம் ஆகிவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் ஷெரின் அங்க வர, ‘எல்லா வேலையும் முடிஞ்சதுக்கு அப்புறம் வரியா?’ என வனிதா கேட்டதுமே டென்ஷன் ஆனார் ஷெரின். எதிரில் பேசும் ஆள் கோபமாக இருந்தால், வனிதா இன்னும் குதூகலம் ஆகிவிடுகிறார். இன்னும் அவங்க கோபத்தைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தால், இவர் மேல தப்பே இல்லை என்று ஆகிவிடும். லன்ச்க்கு என்னவெனக் கேட்க ஷெரின் வந்த போதே, ‘லன்ச் ரெடி’ என வனிதா சொல்ல, ‘ஓக்கே’ என வெளியே போய்விட்டார். இப்ப மறுபடியும், ‘லன்ச் செய்ய நீ வரல?’ என ஒரு புகார். மறுபடியும் ஒரு போர் வர இருந்த சமயத்தில், சேரன் சூடான பாத்திரத்தில் கை வைக்க, எல்லோரும் அவரைக் கவனிக்க போய்விட்டனர்.

‘நான் வந்து கேட்ட போது லன்ச் ரெடின்னு நீ சொன்னையா இல்லையா?’ என ஷெரின் கேட்ட கேள்விக்குக் கடைசி வரைக்கும் நேரடியாகப் பதில் சொல்லாத வனிதா, ‘ஷெரின் வேலை செய்யலை’ எனச் சொல்றதை மட்டும் விடாமல் செய்தார். “நான் வந்து கேட்டேன் சார், லன்ச் ரெடின்னு சொன்னாங்க சார்” என சேரனிடம் சின்ன குழந்தை மாதிரி திருப்பித் திருப்பிச் சொன்னார். அதுவும் க்யூட்டாகத்தான் இருந்தது.

சாக்‌ஷி தான் ஒரு ஆகச் சிறந்த ஆஃப் பாயில் என இன்றும் ப்ரூவ் பண்ணினார். ஷெரினைத் தனது முதல் டார்கெட்டாக ஃபிக்ஸ் பண்ணி அடிக்க என்ன காரணம் என நேத்து சாக்‌ஷி கூடப் பேசும் போது தான் உணர முடிந்தது. சேரனுக்குக் காயம்பட்ட உடனே, பேஸ்ட் அப்ளை பண்ண வனிதா போன போது, ஷெரினும் பின்னாடியே வந்தாராம். ‘நீ ஒரு கார்டியன் ஏஞ்சல்ன்னா, வேலை செய்யணும்னு இல்லை, டாஸ்கும் செய்யணும்னு இல்லை’ என சாக்‌ஷியிஅம் புளி போட்டு விளக்கிக் கொண்டிருந்தார். இந்த வார நாமினேஷனில், ‘ஷெரின் இந்த வீட்டோட கார்டியன் ஏஞ்சல், தேவதை’ என கவின் புகழ்ந்தது வனிதாவின் மண்டையில் ஏறி உட்கார்ந்துவிட்டது போல. ‘3 வேளையும் வடித்துக் கொட்டுறேன், என்னை சொல்லாம, இவளை சொல்றாங்களே!’ என யோசித்து, அடிக்க டார்கெட் பண்ணியிருக்க வேண்டும். அடித்தும் விட்டார். சாக்‌ஷியும் வனிதாவும் ஷெரின் பற்றிப் பேசிட்டிருக்கும் போதே அந்த இடத்தை விட்டு விலகிப் போனார் சேரன்.

லக்சரி பட்ஜெட் டாஸ்கின் ரிசல்ட் நேரம். பெஸ்ட் பெர்ஃபாமரை விவாதித்துத் தேர்ந்தெடுத்தனர். வனிதா முதலில் தன் பேரைச் சொல்லிக் கொண்டார். ஷெரினும் தனக்குக் கேட்க ஆரம்பித்தவர், சேரன் பெயரைச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். தர்ஷன், வனிதா பெஸ்ட் பெர்ஃபாமர் எனரும், வீக்லி பெஸ்ட்க்கு லாஸ், சேரன் பெயரைச் சொல்றது என்றும் முடிவாகியது. பிறகு லாஸ் வாரத்தின் பெஸ்ட் பெர்ஃபாமராக வென்றார்.

வொர்ஸ்ட் பெர்ஃபாமரைத் தோற்றுப் போன அணியே தேர்ந்தெடுக்கச் சொல்லிவிட்டார். அதில் சேரனுக்குப் பெரிய ரிலீஃப். சண்டயைப் பார்த்தே டயர்ட் ஆகிக் கிடக்கிறார். ‘நான் ஒன்னுமே செய்யலை, உனக்குப் புரியுதா, கொஞ்சம் புரிஞ்சுக்கோ மச்சான்’ எனப் பேசி தன் பேரை சொல்ல வைத்தார் கவின். இதனால் அடுத்த வார எவிகசனுக்கு நேரடியாகப் போயாச்சு. இந்த வாரம் ஒருத்தர் வெளியே போனா, 7 பேர் தான் இருப்பார்கள். அதில் கேப்டன் + கவினை நாமினேட் செய்ய முடியாது. ஆக, மீதி இருப்பவர்கள் எல்லாருமே மாட்டுவார்கள்.

‘பெஸ்ட் பெர்ஃபாமர் செலக்ஷனில் எனக்கு விருப்பமே இல்லை’ என ஷெரின் சொன்னதைச் சேரனும் ஆமோதித்தார். ‘இன்னொரு சண்டை வேணாம்ங்கற ஒரே காரணத்துக்காகத்தான் பேசாம போக வேண்டியதாகிடுச்சு’ என இரண்டு பேரும் வருத்தப்பட்டனர்.

அடுத்ததாக விருது கொடுக்கும் விழா. விருந்தினர் தான் நடுவர்கள். முதல் விருதாக பச்சோந்தி விருதை லாஸைக் கூப்பிட்டுக் கொடுக்க, மேடையேறி வாங்கி, ‘இது எனக்குத் தேவையில்லை’ என அங்கேயே தூக்கி வீசிவிட்டு, அலட்டலா இறங்கி வந்து உட்கார்ந்துவிட்டார். ஷெரின் சொன்ன மாதிரி, அரகன்ஸ் அட்டிட்யுட் என்றால் என்னவென்று இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதுவும் அந்த பாடி லாங்வேஜ், யாராக இருந்தாலும் உச்சபட்ச எரிச்சல் வரும்.

முதல் சீசனில் இதே மாதிரி ஒரு விருது ஓவியாவிற்குக் கொடுக்கப்பட்டது. அதை வாங்கினவர், ‘இதை நான் உங்களுக்கே கொடுக்கறேன்’ எனக் கொடுத்துவிட்டு, சிரித்துக் கொண்டே இறங்கி வந்துவிட்டார். அந்த நிகழ்வுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.

போன சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி, உள்ளே வர கன்டெஸ்டன்ஸிடம் நாம ஓவியாவைத் தேடிக் கொண்டு தான் இருக்கோம். அப்படி ஒரு இம்ஃபாக்ட் ஓவியாவிடம் இருந்தது. ஓவியாவுக்கு மற்றும் லாஸ்க்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். இரண்டு பேருமே நமக்கு சப்போர்ட் இருக்கு என சரியாகப் புரிந்து கொண்டனர். பார்வையாளர்களுக்கு நாம் என்ன செய்தால் பிடிக்குமோ, அதை மட்டும் இன்னும் நல்லா செய்ய ஆரம்பித்து, தன் சப்போர்ட்டை தக்க வைத்துக் கொண்டார் ஓவியா. ஆனால் லாஸ் கதையில், தான் என்ன செய்தாலும் பார்வையாளர்கள் சப்போர்ட் செய்வாங்க என ஓவர் கான்ஃபிடன்ஸில் நடந்து கொண்டார். பார்வையாளர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்வதற்கும், தான் என்ன செய்தாலும் பார்வையாளர்களுக்குப் பிடிக்குமென நினைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. ‘இத்தனை தடவை நம்மளை எவிக்‌ஷனில் இருந்து காப்பாத்திருக்காங்க இல்ல? அப்ப நாம சரியா தான் இருக்கோம்’ என ஆழமாக நம்புகிறார். அது முழுக்க முழுக்க கவினோட இன்ஃப்ளூயன்ஸ் தான். அதே மாதிரி வெளியே போனவங்க தப்பு பண்ணிருக்காங்க; மக்களுக்குப் பிடிக்காதவங்க என நினைத்துவிட்டார் போல. கூடவே சாக்‌ஷி மேல் இருக்கற பெர்சனல் வென்ஜன்ஸ். இதெல்லாம் சேர்ந்து தான் நேத்து அப்படி ஒரு ஆக்ஷன்.

பொதுவாகப் பேசின சாக்‌ஷியிஅம் சண்டைக்கு போனது, மோகனை ஹலோ எனக் கூப்பிட்டது எல்லாமே, லாஸைப் பிடித்தவர்களுக்குக் கூட முகம் சுளிக்க வைத்திருக்கும். ‘காரணம் சொல்லாம ஏன் கொடுத்தீங்க?’ என சேரன் நடுவில் புகுந்து, பிரச்சினையின் தீவிரத்தைக் குறைத்தார்.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு விருது வழங்குவது தொடர்ந்தது. நரி விருதை சாண்டிக்குக் கொடுத்தார்கள். ‘நாங்க பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார் சாண்டி. நாம் ஏற்கெனவே கணித்தது தான்.

இந்த சீசன் கன்டஸ்டென்ட்டில் பாய்ஸ் டீம், பிக் பாஸ் டீமுக்கே சவாலாக இருப்பாங்க என நினைக்கிறேன். நேற்று சரவணன் மீனாட்சி சீரியலோட இயக்குநர் ஒருவரோட பேட்டி பார்த்தேன். காதல் என ட்ராக் மாறின கவினுக்கு விஜய் டீவில இருந்தே இரண்டு, மூன்று தடவை வார்னிங் கொடுத்துள்ளனர். ‘வந்த வேலையை பாருங்க’ என அவங்க சொன்னதை லெஃப்ட் ஹேண்டில் தள்ளி வைத்து விட்டு, தனக்குத் தோன்றிதை மட்டும் தான் செய்கிறார். கிட்டத்தட்ட அதே தான் சாண்டிக்கும் நடந்திருக்கும். க்ரூப்பா சேர்ந்து நாமினேஷன் பற்றிப் பேசக்கூடாது என விதியே இருக்கு. அதுக்கு வார்னிங்கும் வாங்கியுள்ளனர். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் அப்படியே தான் செய்கிறார்கள். இதை பிக் பாஸ் டீமால் தடுக்க முடியவில்லை. கமலும் ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்துவிட்டார். அடுத்த சீசனுக்கு வருபவர்கள் கண்டிப்பாக இதைத் தான் செய்வாங்க என நிச்சயமாகச் சொல்லலாம்.

இன்னொரு ஆபத்தான விஷயம். சோஷியல் மீடியாவில் நடக்கின்ற பிராச்சாரம். கவின் சார்பாகப் பெரிய அளவில் பிரச்சாரம் நடக்கிறதாகக் கேள்வி. இதெல்லாம் எப்படி தடுக்கப் போறாங்க எனத் தெரியவில்லை.

மகாதேவன் CM