Shadow

உப்பு கருவாடு விமர்சனம்

uppu karuvadu vimarsanam

சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று.

மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து, அவருக்கு இறவாப் புகழ் தேடித் தந்தவர் இயக்குநர் ராதாமோகன். இப்படத்திலும், கவிஞர் நெய்தல் ஜெயராமன எனும் குணசித்திரக் கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். ஒரு காட்சியில் பாஸ்கர் நம் மனதைக் கனக்க வைக்கிறார் என்றாலும், படம் ‘நகைச்சுவை டிராமா’ வகையைச் சேர்ந்தது என்பதால் கதாபாத்திரங்களின் எமோஷ்னல்கள் சட்டென நீர்த்துப் போய் விடுகின்றன. மகாலெட்சுமி எனும் பாத்திரத்திற்கு தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் நந்திதா.

படம், சில காட்சிகளில் தரும் ‘சீரியல் பார்க்கும்’ உணர்வையும் மீறி படத்தோடு ஒன்ற வைப்பது பொன் பார்த்திபன் தான். படத்தின் வசனகர்த்தா இவர். ‘வலி இல்லாதவன் மனிதனே இல்லை’ என்ற சீரியஸ் வசனங்களாகட்டும், Impotent/important, encagement/encouragement போன்ற ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கும் வசனங்களாகட்டும், பொன் பார்த்திபன் கலக்கியுள்ளார். அதுவும் தப்பும் தவறுமாக ஆங்கில வார்த்தையை ‘டவுட்’ செந்தில் (டாடி, எனக்கொரு டவுட் நிகழ்ச்சியில் மகனாக வருபவர்) உபயோகிக்கும் காட்சிகள் பெரிதும் ரசிக்க வைக்கின்றன. ஒரு கலைஞரிடம் மாட்டிக் கொண்டு டவுட் செந்தில் படும் அவஸ்தை இன்னும் சூப்பர். அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில், செந்திலுக்கு தந்தையாக நடிக்கும் சரவணன் இப்படத்தில் சாமியாராக அசத்தியுள்ளார்.

ராதாமோகனின் ‘நான்-லீனியர்’ திரைக்கதை, ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது. ஆனால், வசனங்களின் உதவியோடு கிச்சுகிச்சு மூட்டத் தவறவில்லை. சினிமா கனவுகளோடு திரியும் எண்ணற்ற இளம் உதவி இயக்குநர்களின் அன்றாட அவஸ்த்தையை மெல்லிய நகைச்சுவை இழையோட அழுத்தமாகப் பதிந்துள்ளது படம். ‘எல்லாம் நன்மைக்கே, அனைவரும் நல்லவர்கள்’ என படம் முழுமையையும் நிறைவையும் தருகின்ற சுபத்தோடு முடிகிறது.