
மம்மி படத்தில் டாம் க்ரூஸ் நடிக்கிறார் என்ற செய்தி, ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ரகசிய தீவிரவாத சிண்டிகேட்களை வேரறுக்கும் டாம் க்ரூஸ் எகிப்தியக் கல்லறைக்கு என்ன வேலையாகப் போயிருப்பார் என்ற ஆவலே அதற்குக் காரணம்.
ஈராக்கில் (மெசொப்பொதாமியா), எதிர்பாராத விதமாய்ப் புராதனமான கல்லறை (சிறை) ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் நிக் மோர்டன். அந்தப் பாதாளச் சிறையில் புதைக்கப்பட்டிருக்கும் எகிப்திய இளவரசி அஹமனெத்தின் கல்லறைப் பெட்டி பாதரசத்திலிருந்து எடுக்கப்பட்டதும், பாலைவனப் புயல்களைக் கட்டுப்படுத்தும் இருள் கடவுளான செத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் நிறைவேற்றிக் கொள்ள காய்களை நகர்த்தத் தொடங்கி விடுகிறார் அஹமனெத். இளவரசியால் பீடிக்கப்படும் நிக் மார்டனின் கதியென்ன ஆனது என்றும், கடவுள் செத்துடன் இளவரசி செய்து கொண்ட ஒப்பந்தம் என்னானது என்பதும் தான் படத்தின் கதை.
1999இல், ப்ரண்டன் ஃப்ரேசர் நடிப்பில் வந்த ‘தி மம்மி’ படத்தின் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கும். அந்தச் சீரிஸ் படங்களில் இழையோடிய நகைச்சுவை இதில் மிஸ் ஆகிறது. கூடவே, அந்தப் படத்தின் வில்லனான அர்னால்ட் வாஸ்லோவின் அச்சுறுத்தும் நடிப்பையும் மறந்திருக்க மாட்டார்கள். இப்படத்தின் மம்மியோ ஒரு பெண். கிங்ஸ்மேன் படத்தில் கலக்கிய சோஃபியா பெளடெல்லா, இளவரசி அஹமனெத்தாக நடித்துள்ளார். அளவிட முடியாத சக்திகள் பெறும் மம்மியை க்ளைமேக்ஸில் தான் நாயகன் பிரம்ம பிரயத்தனப்பட்டு வீழ்த்துவான். ஆனால், இங்கே அமானுஷ்ய அச்சுறுத்தல்களைக் கண்டுபிடித்துத் தடுக்கும் இங்கிலாந்தின் ப்ரொடிகியத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு உள்ளார் மம்மியான அஹமனெத். ஆக, மம்மி பாத்திரம் சோடை போய்விடுவது துரதிர்ஷ்டவசமானது.
எனினும் சோஃபியா பெளடெல்லாவின் இரட்டை விழியும், அவரது வசியப்படுத்தும் பார்வையும் நடையும் ஃப்ளாஷ்-பேக்கை வலுவாக்குகிறது. அது படம் முழுக்கத் தொடராதது குறை. மேலும், இப்படம், யுனிவர்சல் பிக்சர்ஸ் தொடங்கும் ‘டார்க் யுனிவர்ஸ்’ எனும் ஜானரில் வரும் முதற்படம். அதற்கு முத்தாய்ப்பாக, எட்வார்ட் ஹைட் எனும் மான்ஸ்டரையும் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சமாக, டாக்டர் ஹென்றி ஜெக்கில் என முக்கியமான பாத்திரத்தில் ரஸல் க்ரோ நடித்துள்ளார். ப்ரொடிகியத்தின் தலைவரான அவர் மனதளவிலோ, உடலளவிலோ பலவீனமாகும் பொழுது அவருள் கட்டுண்டிருக்கும் மான்ஸ்டரான எட்வார்ட் ஹைட் முழித்துக் கொள்ளும். துரதிர்ஷ்டவசமாகப் படத்தின் சுவாரசியத்திற்கு, இந்த மான்ஸ்ட்ரையும் டாக்டரையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர் திரைக்கதயாசிரியர்கள்.
நிக் மார்டனாக டாம் க்ரூஸ் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்தி இருந்தாலும், தனக்கே உரிய ஓர் ஆக்ஷன் ஹீரோ பாணியில் அவர் மம்மியை எதிர்கொள்வார் என்ற ரசிகர்களின் பொய்த்து விடுகிறது. ப்ரண்டன் ஃப்ரேசருக்கு அளிக்கப்பட்ட ஹீரோயிசத்தில் பாதியளவு கூட டாம் க்ரூஸ்க்கு அளிக்கப்படவில்லை. படத்தின் குறைந்தபட்ச நகைச்சுவையை உறுதி செய்வது டாம் க்ரூஸீன் நண்வராக நடித்திருக்கும் ஜேக் ஜான்சன் மட்டுமே!
ரசிக்க வைக்கும் விஷூவல்கள் இல்லாத ஃபேண்டசி படமாக மம்மி தன்னைத் தானே புதைத்துக் கொண்டுள்ளது. இவ்வகை படத்திற்குப் பொருந்தாத அற்புதமான க்ளைமேக்ஸ் ரசிக்க வைக்கிறது.

