Shadow

மினியன்ஸ் கலக்கப் போகும் டெஸ்பிக்கபிள் மீ 3

Despicable Me 3 in Tamil

ஃப்ரான்ஸில் உள்ள ‘மெக் கஃப்’ என்கிற மிகப் பெரிய அனிமேஷன் ஸ்டூடியோவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்ட படம்தான், ‘டெஸ்பிக்கபிள் மீ’ திரைப்படம். 69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்படம், 543.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துக் குவித்தது. அதன் தொடர் படமாக 2013 இல் வெளிவந்த டெஸ்பிக்கபிள் மீ 2 அமெரிக்க டாலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டு 970.8 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்தது. அவ்விரு படங்களையும் பியரீ காஃபின் மற்றும் க்ரிஸ் ரெனாட் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். மூன்றாவது தொடர் சங்கிலித் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள மகத்தானதொரு முப்பரிமாணத் திரைக்காவியம் தான், ‘டெஸ்பிக்கபிள் மீ 3’. இடையே, 2015இல், ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தொடர்களின் முன்னோடியாக 74 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட படம், ‘மினியன்ஸ்’. பியரீ காஃபினோடு இம்முறை கெயில் பால்டா, அப்படத்தை இயக்கியிருந்தார். 1.159 பில்லியன் அமெரிக்க டாலர்களை அப்படம் ஈட்டிக் கொடுத்தது.

முப்பரிமாணத்தில் உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படங்களைக் குழந்தைகள் மட்டுமே கண்டு மகிழ்வர் என்பது மிகத் தவறான கற்பிதம் என்பதற்கு, இத்தொடர் படங்கள் குவித்த வசூலே சான்று. அவ்வகையான படங்களைச் சிறியவர்களை விடப் பெரியவர்கள் அதிகமாக ரசித்துப் பார்த்து மகிழ்வார்கள் என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்திய மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நம்பி, முதல்முறையாக டெஸ்பிக்கபிள் மீ 3 பாகத்தினைத் தமிழிலும் மொழிமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெறுக்கத்தக்க வில்லனாக இருந்து கதாநாயகனாக மாறிய க்ரூவிற்கு, ட்ரூ என்ற இரட்டைச் சகோதரன் இருப்பது தெரிய வருகிறது. இருவரும் இணைந்து ட்ரே பார்க்கர் எனும் சூப்பர் வில்லனை எதிர்கொள்வதே படத்தின் கதை. வழக்கம் போல், மினியன்ஸின் அதகளம் இப்படத்திலும் கண்டிப்பாக இருக்கும்.

முதல் இரு படங்களுக்குத் திரைக்கதை அமைத்திருந்த சின்கோ பால் மற்றும் கென் பொரியோ, இதன் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். ஹெய்டர் பெரீரியா படத்திற்கு இசையமைத்துள்ளார். 90 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படம் ஹன்சா பிக்சர்ஸ் வெளியீடு.