Search

வெந்து தணிந்தது காடு விமர்சனம்

தன்னைச் சுற்றி ஓர் அதிகார மையத்தை உருவாக்கிய எந்த ஒரு டானின் கதையை எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னால் ஒளிந்திருப்பது ஒரேயொரு விஷயம் தான். சர்வைவல் ஆப் தி பிட்டெஸ்ட். அதாவது, தக்கண தப்பிப் பிழைக்கும். அதிலேயும் நாம் கேட்டறிந்த பெரும்பாலான டானின் கதைகள் அடிமட்டத்தில் இருந்து கிளர்ந்து மேலே வந்தவனின் கதைகளாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையால் விரட்டப்பட்டு, சுற்றத்தால் கைவிடப்பட்டு, இனி ஆவதற்கு ஏதும் இல்லை என்ற கணத்தில் கத்தியைத் தூக்கியவன் எடுத்த முதல் பலியில் இருந்தே ஆரம்பமாகி இருக்கும். அப்படித்தான் ஆரம்பமாகிறது இந்தக் கதையும். எவன் ஒருவனும் விரும்பி கத்தியைத் தொடுவதில்லை. அதைத் தொடுவதற்கான சந்தர்ப்பங்களை அவனைச் சுற்றி நிகழும் தருணங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அவனும் தொடுகிறான்.

அதற்காக அப்படித் தொட்டவன் அத்தனை பேரும் டான் ஆகிவிடுவதில்லை. டான் ஆனவன் எவனும் ரத்ததைப் பார்க்காமல் அந்த இடத்திற்கு வந்து சேரவும் இல்லை. அதனால் நிச்சயமாக இது ஒருவழிப்பாதை தான். ஒவ்வொரு அடியாக முன்னால் மட்டுமே நகர்ந்து செல்ல முடியும். ‘இல்ல இல்ல நான் திருந்திட்டேன், வீட்டுக்குப் போய் நிம்மதியா படுத்துத் தூங்கப் போறேன்’ என்ற வசனங்களுக்கு எல்லாம் இங்கே வேலை இல்லை. ‘கத்திய எடுத்துட்டியா, இனி அதுதான் உனக்கான பாதுகாப்பு. அதுதான் உனக்கான அரண். அது தான் நீ’ என்பதைத்தான் சொல்கிறது இந்தப் படமும்.

அப்படி ஆயுதம் தான் தனக்குப் பாதுகாப்பு என்று நம்பும் முத்து வீரனின் மனதில், ஆயுதம் தாண்டிய ஓர் அசுரபலமும் இருக்கிறது. அதுதான் தனக்கான கடைசி வரைக்குமான பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற ஒரு தருணத்தை உருவாக்குகிறது. இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தளவில் படத்தின் கதையும், முத்து வீரனைப் பொறுத்த அளவில் அவன் வாழ்வும் முழுமை அடையும் தருணம் இதுவாகவே இருக்க முடியும். குறிப்பிட்ட அந்தத் தருணத்தில் முத்து வீரன் தன் கைகளில் இருக்கும் ஆயுதத்தைக் கீழே போட்டிருப்பான். ஆனால் அவனைத் தவிர அவனைச் சுற்றி இருக்கும் அத்தனை அடியாட்களும் ஆயுதம் ஏந்தி இருப்பார்கள். அவனுக்கான கட்டளைகளை ஏற்கத் தயாராயிருப்பார்கள். அப்படியாக ஓர் அடியாள் முழுமையான டானாக மாறும் இடம் அது.

ஆனால் வெகுஜனத்தில் இருந்து பார்க்கும் நமக்கு இந்தக் காட்சிகள் அத்தனையும் மிகப் பெரிய தோற்றப்பிழையை உருவாக்கக்கூடும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் எத்தனை நிம்மதியானது என்ற ஆசுவாசத்தைக் கலைக்கக்கூடும்.

“நமக்கெல்லாம் எஜமானன் சிவில் கோர்ட் நீதிபதிங்க தான். அவங்க மட்டும் ஒழுங்கா வேலை செஞ்சுட்டா நமக்கெல்லாம் வேலையே இல்லாம போயிருமே?” என்றொரு வசனம் உண்டு. இந்தப் படத்தின் அடிநாதமே இந்த வசனம்தான்.

நாட்டில் பெரும்பாலான நபர்கள் கட்டையைத் தூக்குவதும் கத்தியைத் தூக்குவதும் சிவில் பிரச்சனைகளில் இருந்துதான். ஒரு பிடி மண்ணைச் சம்பாதிப்பது எத்தனை கஷ்டமோ அதைவிட பெரிய கஷ்டம், அந்த ஒருபிடி மண்ணை நம்மிடம் இருந்து எவனாவது திருடிக் கொண்டால், அதன் மூலம் ஏற்படும் இழப்பை, வலியை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது. கட்டப்பஞ்சயாத்து, அதில் இருந்து அடுத்த கட்டம் அதில் இருந்து அடுத்த கட்டம் என்று சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து அடியாள் ஒருவன் எப்படி உருவாகிறான் என்பதை மிக அழுத்தமாகவே கட்டமைத்திருக்கிறார்கள் இந்தப் படத்தில். ஒருவன் அடியாளாக மாறுவது இரண்டாம் கட்டம் தான். அப்படி முதல் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு நகரும் அந்த அடியாளின் கதைதான் லேசாகத் திகிலை உண்டு பண்ணுகிறது.

எந்த ஒரு திரைப்படத்தையும், கதையையும் வெறும் கதையாக மட்டுமே கடந்து சென்றால், அது எவ்வித சிக்கல்களையும் உருவாக்கப்போவதில்லை. ஆனால் அந்தக் கதை மனதின் அடி ஆழம் வரை நுழைந்து சில தொந்தரவுகளை நிகழ்த்தும் போதுதான் பயமாய் இருக்கிறது. இந்தச் சமூகம் மீதான, இந்தச் சமூகத்தின் தவிர்க்கமுடியாத தீமைகளாக மாறியிருக்கும் அடியாட்களின் மீதான பயமாக மாறுகிறது. ஒருவேளை நாம் பார்க்கும் சமூகம் என்பது இவர்களும்தானா என்ற எண்ணம் மறைந்து, இவர்கள் மூலமாகத்தான் இந்தச் சமூகமே கட்டமைக்கப்படுகிறதா என்ற கேள்வியை நோக்கி அழைத்துச் செல்கிறது. இப்படி ஒரு திரைப்படம், திரைப்படமாக மட்டுமே கடந்து செல்லாமல், அதில் காட்டப்படும் வாழ்க்கை, நம் அகத்தையும் தொந்தரவு செய்யுமானால், சமூகம் சார்ந்த புரிதல்களைக் கேள்வி கேட்குமானால் நிச்சயம் அந்தத் திரைப்படம் பார்வையாளர்களைப் பாதித்திருக்கிறது என்றே பொருள்.

ஒரு டான் எப்படி உருவாகிறான் என்பதற்கு ஆயிரம் கதைகள் இருக்கலாம். ஆனால் ஒரு டானின் கதை நம்மை எப்படியெல்லாம் தொந்தரவு செய்யக்கூடும் என்பதற்கு வெகுசில கதைகளே இருக்கின்றன. அந்த வெகுசிலவற்றில் நிச்சயமாக இந்தக் கதைக்கும் இடம் உண்டு.

காரணம் வெகுஜன அடியாளுக்கும், வெகுஜன டானுக்கும், கொஞ்சம் மெனக்கெடலுடன் கலைநயத்தோடு கட்டமைக்கபடும் டானுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. KGFஇன் கதாநாயகனும் இப்படியான பின்னணியில் இருந்து வந்தவனே! ஆனால் அவன் எனக்குள் ஒரு ஹீரோவாகத் தான் நின்றானே தவிர, எதையும் செய்து காட்டும் சூப்பர் டானாகத்தான் நின்றானே தவிர, சமூகத்தின் பிரதிபலிப்பாய் இல்லை. அவன் காவியங்களில், கதைகளில் மட்டுமே பேசப்படும் நாயகன். ஆனால் முத்து வீரன் சமூகத்தின் கட்டமைப்பில் இருந்து உருவாகி வந்தவன். அதனால்தான் அவனைப் பார்க்கும்போதும், அவனைச் சுற்றி இருப்பவர்களைப் பார்க்கும் போதும் தொந்தரவாய் இருக்கிறது.

‘இங்க பாரு பர்ஸ்ல ஒத்த ரூவா இல்ல’ என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியைத் தூக்கும் சரவணனாகட்டும், ‘யோவ், பேசாம போயிரு சுட்டுற கிட்டுற போறேன்’ என்று சொல்லும் முத்துவீரனாகட்டும், அவர்கள் வாழும் உலகமும், அந்த உலகம் சார்ந்த காட்சிகளும் எவ்வித திடுக்கிடல்களையும் நிகழ்த்தாமல், ‘இதெல்லாம் அங்க சகஜம்தாம்ப்பா’ என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நம்மைத் தள்ளி விடுகிறது. அதாவது நம்மை நிலைகுலையவும் செய்கிறது, அவர்களுக்குள் நிகழும் மரணங்கள் மூலமாக நம்மை ஆசுவாசப்படுத்தவும் செய்கிறது. கிட்டத்தட்ட நேர் எதிர் நிலைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் எப்படியான உலகத்தைக் கட்டமைத்ததோ, எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறைவில்லாத வேறொரு வாழ்க்கையை, அல்லது நேர் எதிர் வாழ்க்கையைத் தான் இந்தப் படமும் காட்டுகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் கதை வேண்டுமானால் பழையதாக, ஒரே போன்றதாக தோற்றமளிக்கலாமே தவிர, கதை சொல்லூக்காக எடுத்துக் கொண்ட மெனக்கெடல் புதியது. சற்றே தீவிரமானது.

நாடோடி சீனு