Shadow

மைதான் விமர்சனம்

தலைப்பையொட்டிப் படத்தின் 90 சதவிகிதத்திற்கு மேலான காட்சிகள் கால்பந்து மைதானத்திலேயே நடக்கின்றன. ஃபின்லாந்தில் நடக்கும் 1952 ஹெல்ஸின்கி ஒலிம்பிக்ஸில் தொடங்கும் படம், 1962 இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசியப் போட்டிகளில் படம் முடிகிறது. இந்தப் பத்து ஆண்டுகளில், கால்பந்து பயிற்றுநர் (Football Coach) சையத் அப்துல் ரஹீமின் தலைமையில் இந்தியக் கால்பந்து அணி மேற்கொண்ட பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா.

யுகோஸ்லோவியாவுடனான படுதோல்விக்குப் பின், இந்தியக் கால்பந்து அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில், அதை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்கிறார் S.A.ரஹீம். செகந்திராபாத்தின் குடிசைப் பகுதியில் இருந்து துளசிதாஸ் பலராமனையும், கல்கட்டாவிலிருந்து பிரதீப் குமார் பேனர்ஜியையும் தேர்ந்தெடுக்கிறார். பலமான இந்திய அணியை உருவாக்கி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடக்கும் 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் 4 ஆவது இடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்கிறார். ரோமில் நடக்கும் 1960 ஒலிம்பிக்ஸில் ஃபிரான்ஸிடம் தோற்றாலும், ரசிகர்கள் இந்திய அணிக்கு எழுந்து நின்று கைதட்டுகின்றனர். அந்த ஆண்டுதான் FIFA-வின் தலைவரால், “ஆசியாவின் பிரேஸில்” என இந்திய அணி புகழப்பெற்றது. S.A.ரஹீம் பயிற்றுநராக இருந்த காலம்தான், இந்தியக் கால்பந்தின் பொற்காலமாகத் திகழ்ந்துள்ளது. ஆனால், தோல்வியைக் காரணம் காட்டி அவரைப் பயிற்றுநர் பதவியில் இருந்து நீக்கிவிடுகின்றனர். அவரது புகைப்பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

சோர்ந்த போன ரஹீம், தனக்கிருக்கும் குறுகிய காலத்திற்குள் இந்தியக் கால்பந்து அணிக்குச் சர்வதேச வெற்றியைத் தேடித் தர விழைகிறார். கால்பந்து கூட்டமைப்பின் அதிகார வட்டத்தில் கையோங்கியிருக்கும் வங்காளத்து ஷுபாங்கரின் எதிர்ப்பை மீறி, மீண்டும் பயிற்றுநராகிறார் ரஹீம். மெத்த படித்தவரான ரஹீம், ஒவ்வொரு போட்டிக்கும் தக்கவாறு ஒரு யுக்தியைக் (Strategy) கையாண்டு 1962 ஆசியப் போட்டிகளில், இந்தியாவிற்கு கால்பந்து போட்டியில் தங்கம் வாங்கித் தருகிறார்.

விறுவிறுப்பான நாடகமாகிவிட்ட ஐபிஎல் போட்டிகளை விட, ‘மைதான்’ படம் வெகுவாகக் கவர்கிறது. மிக நீளமாக 181 நிமிடங்கள் ஓடும் படமென்றாலும், படத்தின் இரண்டாம் பாதி தன்னுள் வசீகரித்துக் கொள்கிறது. இந்தியா ஜெயிக்கத்தான் போகிறதென உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தாலும், அந்த வெற்றிக்காக எப்படி இந்திய அணி போராடியது என்பதில்தான் ஸ்போர்ட்ஸ் படங்களின் வெற்றி அடங்கியுள்ளது. கால்பந்தின் விதிகள் தெரியாவிட்டாலும் சரி, ஹிந்தி மொழி தெரியாவிட்டாலும் சரி, பார்வையாளர்களை ஈர்க்கும்படியாக உள்ளது படம். அதற்கு முக்கியக் காரணமாக அமைந்து ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை. விளையாட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபியோடர் லியாஸும், படத்தொகுப்பு செய்துள்ள ஷானவாஸ் மொசானியும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். மற்ற காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ள துஷார் காந்தி ரேவும், படத்தொகுப்பு செய்துள்ள தேவ் ராவ் ஜாதவும் கூட அசத்தியுள்ளனர்.

கால்பந்தாட்டத்தில் புழக்கத்தில் உள்ள பல வியூகங்களை, அவை பிரபலமாவதற்கு முன்பே சையத் அப்துல் ரஹீம் பயன்படுத்தியுள்ளார். ஆனால், படம் அவரது வியூகங்களில் பெரிதாகக் கவனம் செலுத்தாமல், ஒரு விளையாட்டு அணியின் எமோஷ்னல் பயணமாகப் படத்தைக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர். காயம் காரணமாக எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாமல், தென் கொரியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் நேரடியாகக் கோல்கீப்பர் பீட்டர் தங்கராஜ் களமிறங்கும் போது திரையரங்கில் விசில் சத்தம் பறக்கிறது. முதல் போட்டியில் இருந்து அரையிறுதி வரை கோல்கீப்பராக இருந்த ப்ரதியுத் பர்மன், தங்கராஜிடம் தனது கையுறையை அணிந்துகொள்ளும்படி கேட்கும் எமோஷ்னலான காட்சியிலும் விசில் பறக்கிறது. தங்கராஜ் கோல்களைத் தடுக்கும் பொழுதும், இந்திய அணி கோல் அடிக்கும்பொழுதும் திரையரங்கம் ஆர்ப்பரிக்கிறது.

ஹீரோவாக அல்லாமல் S.A.ரஹீமாக அஜய் தேவ்கன் அண்டர் பிளே செய்துள்ளார். படம் முடிந்து, உண்மையான சையத் அப்துல் ரஹீமின் புகைப்படத்தைத் திரையில் காட்டும்பொழுது, பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டித் தங்கள் மரியாதையைச் செலுத்துகின்றனர். ஆனால், இயக்குநர் குசும்புக்காரர். அதன் பின் ஒரு ஸ்லைடைப் போட்டு அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவதோடு, சையத் அப்துல் ரஹீம் ஏன் லெஜண்ட் என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிடுகிறார். ஸ்போர்ட்ஸ் மூவி ரசிகர்கள் தவறவிடாமல் திரையரங்கில் காணவேண்டிய படம்.