32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

80’ஸ் பில்டப் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 25/11/2023 2 நிமிட வாசிப்பு Updated: 16/06/2025 இது புதிது
எழுத்து அளவு:

சந்தானத்தின் தாத்தா R. சுந்தர்ராஜன் இறந்து விட, அவரது 5 ஆசைகளை நிறைவேற்றிய பின்பே அவரை அழைத்துச் செல்வேன் என வரமளிக்கிறார் எமன் K.S.ரவிக்குமார். தாத்தாவின் சாவிற்கு வரும் ஒரு பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார் கமல் ரசிகரான சந்தானம். தாங்கள் திருடிய வைரங்கள், இறந்துவிடும் R. சுந்தர்ராஜனின் வயிற்றுக்குள் மாட்டிக் கொள்ள, அதை மீட்கப் பார்க்கின்றது மன்சூர் அலிகானின் குழு. இந்த மூன்று கதையும், ஒரு சாவு வீட்டில் நிகழ்கிறது. சந்தானத்தின் காதல் கை கூடியதா, R. சுந்தர்ராஜனின் ஆசைகள் நிறைவேறினவா, திருட்டுக் குழுவிற்கு வைரங்கள் கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மேலே உள்ள பத்தியிலுள்ள மூன்று கதையையும் ட்ரெய்லரியே காட்டி, ஒரு பக்காவான காமெடிப் படத்திற்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தி இருந்தார் இயக்குநர் கல்யாண். ஆனால், அண்ணனுக்கும் – தங்கைக்கும் எதற்கெடுத்தாலும் சவால் என புதுக்கதையில் படம் தொடங்கிப் பயணிக்கிறது. இதை மையமாக வைத்து, மற்ற மூன்று கதைகள் ஏனோதானோவென்று, அண்ணன் – தங்கை சவால் கதையைத் தொடர்கின்றன. காதலிக்கப்படும் நாயகியாக ராதிகா ப்ரீத்தியும், சந்தானத்தின் தங்கையாக சங்கீதாவும் நடித்துள்ளனர்.

ஒன்லைனர் காமெடிகளாகக் கூட எதுவுமே எடுபடாமல், காண்டு ஏற்றும் வகையிலேயே படம் பயணிக்கிறது. எமன் – வுமன், உயிர் – மயிர், கன்ட்ரி – நன்றி என அசுவாரசியமான விளையாட்டைக் காமெடியெனப் பேசிக் கொண்டிருக்கின்றனர் கதாபாத்திரங்கள். படம் பார்க்கும் பொழுது ஏற்படும் அயர்ச்சியைத் தணிக்க மிகவும் முயற்சி எடுக்க வேண்டியதாக உள்ளது.

மயில்சாமி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கூல் சுரேஷ் (!?), பழைய ஜோக் தங்கதுரை என ஏகத்திற்கும் நகைச்சுவை நடிகர்கள். ம்ஹூம், படம் மருந்துக்குக் கூட கிச்சுகிச்சு மூட்டவில்லை. படத்தில் மஞ்சக்கிளியாக ஆனந்த்ராஜ் பெண் வேடத்தில் வருகிறார். ஒருவழியாக சிரிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகிவிட்டது போல என ஆசுவாசம் ஏற்படும் பொழுது, ஆடுகளம் நரேன், மஞ்சக்கிளியின் மடியில் போய்ப் படுத்துக் கொள்கிறார். படுத்தவர் தான் மட்டும் படுக்காமல், கொஞ்சம்நஞ்சம் உயிரை ஊசலுடன் பிடித்துக் கொண்டிருந்த திரைக்கதையையும் சேர்த்துப் படுக்க வைத்துவிடுகிறார்.

படம் முடிந்த பிறகு, ‘பெங்களூரு 3 கி.மீ’ என்று திரையில் வரும் எல்லைக்கல் மட்டுமே புன்னகைக்க வைக்குமளவு ஒட்டுமொத்த படத்திலுள்ள ஒரே உருப்படியான சங்கதி.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.