Shadow

குய்கோ விமர்சனம்

கதைக்காகத் திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நிறைய உண்டு. ஆனால் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவைக்காகவும் நையாண்டிக்காகவும், அரசியல் பகடிகளுக்காகவும், கதாபாத்திர வடிவமைப்பிற்காகவும், இயல்பான யதார்த்தமான நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அமைதிப்படை, களவாணி, தமிழ்ப்படம், ஒரு கிடாயின் கருணை மனு, ஆண்டவன் கட்டளை என வெகு சில படங்களே! அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “குய்கோ”.

அமைதிப்படை திரைப்படம் நம் நாட்டின் அரசியல் சூழலையும் அரசியல்வாதிகளையும் பகடி செய்த திரைப்படம். தமிழ்ப்படம், நம் தமிழ் சினிமாவில் இருந்த க்ரிஞ்சான விசயங்களையும், அவலங்களையும் பகடி செய்தது. அந்த வரிசையில் நாம் வாழும் வாழ்க்கையையும், நம்மிடம் இருக்கும் அறியாமையையும், பகட்டான வாழ்க்கை மீது நமக்கு இருக்கும் பரவசத்தையும், இங்கிலீஷ்க்கும் நமக்குமான தூரத்தையும், தமிழ் உணர்வையும், அரசியல் அறிவையும் கலந்து கட்டி பகடி செய்யும் படமாக குய்கோ வெளியாகி இருக்கிறது.

மொத்த கதையும் ஒரு சிறு கிராமத்தில் நடக்கிறது. இறந்த தன் தாயை அடக்கம் செய்ய செளதியில் இருந்து வருகை தருகிறார் யோகி பாபு, அந்த தாயின் உடலைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வருகிறார் விதார்த். இவர்கள் இருவரும் தான் முக்கிய கதாபாத்திரங்கள் என்றாலும் கூட, அந்த கிராமத்தில் இருக்கும் பொய் சொல்லாத புஷ்பா, பெரும் பில்டப்புடன் பேசப்படும் அட்டாக் பாண்டி, வட்டிக்குப் பணம் கொடுப்பவராக வரும் பண்பாளன், கொள்ளையடித்துக் கொண்டு திரியும் சேகர்-பாபு, ஊருக்குள் பெட்டிக்கடை நடத்தும் அப்பத்தா, கணக்கில் தோல்வியுற்று பள்ளிக்கூடம் போகாமல் திரியும் பசங்க, மாலைமுரசு பேப்பர் வாங்கி வந்து தரும் ‘ஜெய்பீம்’ அப்புக்குட்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ராஜமரியாதை கொடுக்க அழைத்து வரப்படும் குருவி சுடுபவர் மற்றும் இவர்கள் அனைவரையும் மேய்த்துக் கொண்டு திரியும் இளவரசு என அனைவருமே படம் முடியும் போது நம் மனதில் அழியாத பிம்பங்களாகத் தங்கி விடுகிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.

கதையாக மிகச் சாதாரண கதை தான். திரைக்கதை மிக இயல்பான பெரும் வித்தைகள் இல்லாத சாதாரண திரைக்கதை தான். இருப்பினும் ஒவ்வொரு காட்சியையும் ஈர்ப்புள்ளதாக மாற்றுவது, ஒவ்வொரு காட்சியிலும் வரும் எளிய மனிதர்களும் அவர்களிடம் பொதிந்திருக்கும் இயல்பான அறியாமையும், அவர்களின் சிறப்பான நடிப்பும், அவர்கள் உதிர்க்கும் ஆகச் சிறந்த நகைச்சுவை வசனங்களும் தான்.

செளதி அரேபியாவில் தமிழ் பேசும் ஒட்டகம், நல்ல நண்பனாக பாகிஸ்தானி, சேகர்-பாபு கூட்டணி செய்யும் சேஷ்டைகள், வீர வணக்கம் போஸ்டர், ‘ஆடு மேய்ப்பவர் ஆண்டவர் ஆகும் போது, மாடு மேய்ப்பவன் மாப்பிள்ளை ஆகக்கூடாதா?’, ‘அப்ப பாகிஸ்தான் கொடியை போர்த்திரலாமா?’, ‘அம்மானாலே மரியாதை தான்டா!’, ‘டைம் பாஸ் பண்றத நல்லவிதமா பாஸ் பண்ணா, லைஃப்ல ஏதாது இடத்துல பாஸ் ஆவேல’, ‘தமிழ் ஒரு நாளும் சாகாது, இப்படிச் சொல்லிச் சொல்லி நீங்க செத்துராதீங்கடா’, ‘வடிவேலு நல்லவன் தான்; ஆனா ஊருக்குள்ள நான் தான் பெரியவன்னு சொல்லிட்டுத் திரியுறானே!’ என்பதாகப் படம் நெடுகே வரும் வசனங்களால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் சிக்சராகச் சிதறடிக்கிறார் இயக்குநர்.

‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் துபாய் ரிட்டனாக வரும் வடிவேலு கதாபாத்திரத்தின் நீட்சியாக, அதே மிடுக்குடன் செளதி ரிட்டனாக வரும் மலையப்பன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊர்க்காரர்கள் மலையப்பனாக வரும் யோகிபாபுவை பிரமிப்புடன் பார்ப்பதும், அவர்களை யோகிபாபு கண்டுகொள்ளாமல் அசட்டை செய்வதும், தாயின் மரணத்தைக் கண்டு போலியாக அழும் தன் அக்காக்களை ஒற்றை அதட்டலில் அடக்குவதுமாக ஒரு கட்டம் வரை வடிவேலு கதாபாத்திரத்தின் நீட்சியாக தொடரும் மலையப்பன் கதாபாத்திரம், தன் தாயின் மறைவுக்குப் பின் அவளின் உடல் கிடத்தப்பட்ட ஐஸ் பெட்டியைக் கண்டு மனம் உருகுவதும், ஊரில் நல்லது நடப்பதற்காக சில காரியங்களை தன் சொந்த கை காசில் செய்வதும், ஊர் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக தன் சொந்த செலவில் வாத்தியாராக வரும் விதார்த்தைத் தங்க வைத்துப் பார்த்துக் கொள்வதும் என ஒரு புள்ளியில் இருந்து மலையப்பன் கதாபாத்திரம் புதுப் பரிமாணம் எடுக்கிறது.

மலையப்பனாக நடித்திருக்கும் யோகிபாபு பல காட்சிகளில் அவரின் காமெடி சரவெடிகளின் மூலம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், சில காட்சிகளில் மனதைத் தொடும்படி நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் யோகிபாபு மீது தான் திரைக்கதை பயணிக்கிறது. தன் அசால்ட்டான வசன உச்சரிப்புகள், மாடுலேஷன்கள் மற்றும் உடல்மொழியின் மூலம் காட்சிக்குக் காட்சி பார்வையாளர்களை வசீகரிக்கிறார். புறக்கணிக்கப்பட்ட வலியை மறந்துவிட்டு, புதுப் பணக்காரனாக தன் காதலியின் வீட்டிற்கு முன் வெள்ளந்தியான முகத்துடன் 48 ஃப்ரேமில் நடந்து வந்து தன் மைத்துனனிடம் கை குலுக்கும் காட்சியில் கண்களை ஈரமாக்குவதோடு, மனதையும் கனக்கச் செய்கிறார்.

படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களன் உள்ள கதைகளைத் தேடிப் பிடித்து நடிக்கும் நடிகர் விதார்த், இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் யோகிபாபுவிற்குத் தான் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும், அவருடைய கதாபாத்திரம் தன் கதாபாத்திரத்தை விட வலிமையானது என்று அறிந்திருந்திருந்தும், கதைக்கு நியாயம் சேர்ப்பது போல் கணக்கு வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்து, தான் ஒரு முதிர்ச்சியான நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். பள்ளிப்படிப்பைத் துறந்து ஊர் சுற்றும் மாணவர்களிடம் கரிசனம் காட்டும் இடத்திலும், கணக்கு படிக்க வந்த மாணவியுடன் காதலில் விழும் இடத்திலும், மலையப்பன் மனக்கொதிப்புடன் தடுமாறும் சமயங்களில் அவனை நல்வழிப்படுத்தியும், தன் இயல்பான நடிப்பால் பார்வையாளர்களைத் தன்பால் ஈர்க்கிறார். இவ்விருவரைத் தவிர்த்து வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீபிரியங்கா, துர்கா, முத்துக்குமார் போன்றோரும் மிகச்சிறப்பான நடிப்பை அளித்துள்ளனர்.

இறுதிச்சடங்கு நிகழ்வுகளை ஒருமுகப்படுத்தும் நெறியாளராக கிடைக்கும் இடத்தில் எல்லாம் கமிஷன் அடிப்பவராக நடித்திருக்கும் இளவரசு, யோகி பாபு மற்றும் விதார்த்திற்கு அடுத்த படியாக ஒட்டு மொத்த கதையை நகர்த்திச் செல்வதற்கு, தேரை நகர்த்திச் செல்லும் புல்டோசராக இருந்து உதவி புரிந்து இருக்கிறார். யோகி பாபு காமெடி செய்யாத இடங்களை எல்லாம் இவர் தன் பிரத்தியேகமான வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் இட்டு நிரப்புவதால் காட்சிக்குக் காட்சி சிரிப்புக்குப் பஞ்சமின்றி கதை நகருகிறது. அது போல் பண்பாளன் கதாபாத்திரமும் மிகச் சிறப்பாக ஒருவித அரசியல் புரிதலுடன் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரமாக திகழ்கிறது. நல்லது செய்ய நினைத்து போலீஸின் சதி வலையில் சூழலாலும் சூழ்ச்சியாலும் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரம் அது.

அந்தோணி தாசன் இசையில் யோகிபாபுவின் காதல் பாடல் ஹாலிவுட்டில் ஹிட் அடித்த ஷாருக்கான் படப்பாடலின் சாயலில் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது போல் ஒப்பாரி வகைப் பாடலில் கிழவி கட்டு பாடல் கவனம் ஈர்க்கிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு கிராமத்தின் பகல் நேர அழகையும் இரவு நேர தெரு விளக்குகளின் ஒளியையும் கலந்து கட்டி ஒருவித மாயம் செய்கிறது. ஒரு கிராமத்திற்குப் போய் வந்த உணர்வை அச்சு அசலாக ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

AST பிலிம்ஸ் LLP நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டு இயக்குநர் அருள்செழியன் கதாசிரியராக பணியாற்றிய ஆண்டவன் கட்டளை திரைப்படம் எப்படி அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்ததோ, அதே போல் இந்த ‘குய்கோ’வும் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும். இந்த வாரத்திற்கான வெற்றி விழா திரைப்படம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

– இன்பராஜா ராஜலிங்கம்