Shadow

நெப்போலியன் விமர்சனம்

நெப்போலியனின் மொத்த வாழ்க்கையையும் மூன்று வார்த்தையில் அடக்கிவிடலாம். படம் முடியும்பொழுது, அவர் இறக்கும் முன் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைத் திரையில் காட்டுகின்றனர். அவை, ஃபிரான்ஸ், படை (Army), ஜோசஃபின் ஆகும். அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான இம்மூன்றும் தான் நெப்போலியனின் வாழ்க்கையும், இந்தப் படத்தின் திரைக்கதையும் ஆகும்.

இப்படம், நெப்போலியனை ஒரு காவிய நாயகனாகக் கொண்டாடவில்லை. மாறாக, அவரை ஒரு சக மனிதராகத் திரையில் முன்னிறுத்தி, ரிட்லி ஸ்காட் ஒரு காவிய படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபலமான ஆங்கிலக் கவிஞரான பைரான் பிரபு, நெப்போலியனை ஒரு ரொமான்ட்டிக் நாயகனாகவும், தனிமையில் சிக்கிய, இடருக்கு உள்ளான குறைப்பாடுள்ள மேதைமையாகப் பார்த்தார். கிட்டத்தட்ட ரிட்லி ஸ்காட்டின் இப்படமும் அதையே பிரதிபலிக்கிறது. போர்க்களத்தில் இருந்து, அவர் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் மிகப் பிரபலம். போர்க்களத்தில், காதல் வரிகள் ஒலிக்கின்றன. ஜோசஃபினை நேசித்தது போலவே, ஃபிரான்ஸ் நாட்டின் சார்பில் ஈடுபடும் போர்களில் எல்லாம் வென்று தனக்கென ஒரு மகத்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதும் அவருக்கு முக்கியமாக இருந்தது. ஆனால், போர்கள் அவரை ஜோசஃபினிடம் இருந்து பிரித்தது. அவரது காதலுக்கும், அவர் அடைய விரும்பிய மகத்துவத்துக்குமான நகைமுரணில்தான் அவரது எழுச்சியும் வீழ்ச்சியும் அடங்கியுள்ளது.  

மார்டின் பிப்ஸின் பின்னணி இசை, படத்திற்கு மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது. கதைக்கான இசையாக இல்லாமல், காலத்தைப் பிரதிபலிக்கும் இசையை உனயோகிக்க முடிவெடுத்துள்ளனர். போர்க்களக் காட்சிகள், பனிப்பொழிவு, நடிகர்களின் க்ளோஸ்-அப் என டாரியொஷ் வொல்ஸ்கி (Dariusz Wolski) தனது ஒளிப்பதிவில் ஓர் ஓவியத்தன்மையைப் பிரதிபலிக்கும்வண்ணம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார். எல்லாவற்றிற்கும் மகுடம் சேர்த்தாற்போல், ஹூவாகின் ஃபீனிக்ஸின் அபாரமான நடிப்பு, படத்தோடு நம்மைக் கட்டிப் போடுகிறது. ‘கிளாடியேட்டர் (2000)’ படத்தில், ரிட்லி ஸ்காட்டின் இயக்கத்தில் முன்னரே ஹுவாகின் ஃபீனிக்ஸ் நடித்துள்ளார். இருப்பினும், ‘ஜோக்கர் (2019)’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தே நெப்போலியனாக நடிக்கவைக்க முடிவெடுத்துள்ளார் ரிட்லி. சேட்டையும், குறும்பும், ஜோசஃபின் மீதான காதல் பலவீனமும், தன்னிகரில்லாத் தலைமைப்பண்பும் ஒருங்கே வாய்ந்த நெப்போலியனை மிகத் துல்லியமாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் ஹுவாகின் ஃபீனிக்ஸ்.  போப்பின் கையிலிருந்து கிரீடத்தை வாங்கி, மாமதமான கத்தோலிக்கச் சடங்குகளைப் புறக்கணித்து, தன் கைகளாலேயே ஃபிரான்ஸின் பேரரசராக முடி சூட்டிக் கொண்டு, ஜோசஃபினுக்கும் பேரரசியாக முடி சூட்டுகிறார் கலகக்காரரான நெப்போலியன். கட்டபொம்மன் என்றால் சிவாஜியின் உருவம் மனதில் தோன்றுவது போல், பேரரசர் நெப்போலியன் என்றால் ஹூவாகின் ஃபீனிக்ஸின் ஞாபகம் எழுவதை இனி தவிர்க்கமுடியாது. ஜோசஃபினாக வனேசா கிர்பி சிறப்பாக நடித்துள்ளார். ஜோசஃபினின் முழு ஆளுமையையும் படம் பிரதிபலிக்கவில்லை. நெப்போலியனுடனான அவரது உறவை மட்டுமே ரிட்லி எடுத்தாண்டுள்ளார்.

நெப்போலியனின் மனைவியும் தோழியுமான ஜோசஃபின் மீது அவர் வைத்திருந்த காதலே, படத்தின் கிளாஸிக்தன்மைக்கு வித்திடுகிறது. இதைப் புரிந்து கொள்ள, இந்திய மனங்களுக்கே உரிய பத்தாம்பசலித்தனத்தைக் கைவிட்டு, கொஞ்சமே கொஞ்சம் ஃப்ரெஞ்ச்காரர்களின் மனநிலையில் இருந்து அவதானிப்பது அவசியம். எகிப்தில், போருக்குச் சென்ற நெப்போலியனுக்கு, தனது மனைவி ஜோசஃபினின் கள்ள உறவு பற்றித் தெரிய வர, உடனே ஃபிரான்ஸ்க்குக் கிளம்புகிறார். ஜோசஃபினின் கள்ள உறவு பற்றி செய்தித்தாள்களிலும் வெளியாகிறது. அது 1798 ஆம் ஆண்டு. ஜோசஃபின் நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட பின், சமாதானமான ஒரு சூழலில்,

“உனக்கு யாரிடமாவது தொடர்பு இருந்ததா?” – ஜோசஃபின்.

“பலருடன்” – நெப்போலியன்.

“அவர்கள் அனைவரும் அழகானவர்களா?”

“சில பெண்கள் மட்டும் அழகாக இருப்பார்கள்.”

“அவர்களை நீ காதலிக்கிறாயா?”

“இல்லை.”

கதாபாத்திரங்களின் மனநிலையையும், ஃப்ரெஞ்சுக் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும்படியான வசனங்கள், படத்திற்குக் கூடுதல் ஈர்ப்பினை நல்குகிறது. ஏகாந்தமான மனநிலையில், ஒரு ரம்மியமான கவிதையை வாசிக்க நேர்ந்தால் கிடைக்கும் ஒரு திருப்தியான மனநிலைக்கு இட்டுச் செல்கிறது நெப்போலியன் திரைப்படம்.