32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அம்… ஆ விமர்சனம் | Am… aa review

Dinesh R சேலம் Published: 18/04/2025 3 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 அயல் சினிமா
எழுத்து அளவு:

மலையாளப் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கவந்தா எனும் மலைக்கிராமத்திற்கு, சாலை ஒப்பந்தக்காரரான ஸ்டீஃபன் வருகிறார். அந்தக் கிராமத்தில் ஒரு அம்மிணியம்மாவும், செவிப்புலன் திறன் கம்மியாக இருக்கும் அவர் பேத்தி குயிலியும் வசிக்கின்றனர். ஸ்டீஃபன் அவர்களைப் பற்றிக் கிராமத்தாரிடம் விசாரிக்க, யாருக்கும் அவர்கள் எங்கிருந்து அந்தக் கிராமத்திற்கு வந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அந்த ஊரின் ரகசியங்களை அறிந்த கண் தெரியாத முதியவர் ஒருவர், அம்மிணியம்மாவைப் பற்றி விசாரித்தற்காக ஸ்டீஃபனைத் தாக்கவும் செய்கிறார். ஸ்டீஃபன் யார், அம்மிணியம்மா யார், குயிலி யார் என்று படத்தின் இரண்டாம பாதியில் முடிச்சவிழ்க்கின்றனர்.

குழந்தைக்காகத் தவம் கிடக்கும் அஞ்சு என்பவரின் அறிமுகத்திற்குப் பின் கவந்தாவிற்குச் செல்கிறது படம். முதல் பாதி சற்றே மர்மமான ஒரு இன்வெஸ்டிகேஷன் படம் போல் பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், அப்படியே படத்தின் நிறம் மாறுகிறது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறத் துடிக்கும் ஒருவர், அக்குழந்தையைப் பிரசவிக்கும் பதிலித்தாய் (Surrogate mother), உறவுகள் ஏதுமற்ற தாய்மை நிரம்பிய மேரி ஜோசஃப் என கதையில் மூன்று பெண்களும், இரண்டு அம்மாக்களும் வருகின்றனர். படத்தைக் கனம் மிக்கதாய் மாற்றுகிறார்கள் பதிலித்தாயாக நடித்துள்ள ஸ்ருதி ஜெயனும், அம்மிணியம்மாவாக நடித்துள்ள தேவதர்ஷினியும். குயிலியாக நடித்துள்ள பேபி நிஹாராவும், ஃப்ளாஷ்-பேக்கில் வரும் கைக்குழந்தையும் மிகவும் அழகாக உள்ளார்கள். அந்தக் கைக்குழந்தையை நோக்கி, இரண்டு தெருநாய்கள் செல்லும்போது மனம் பதைபதைத்துவிடுகிறது. ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் என்பதால் அக்குழந்தைக்கு ஒன்றுமாகாது என உள்ளங்கனி நெல்லிக்கனியாகத் தெரிந்தாலும் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். காரணம், கோபி சுந்தரின் பின்னணி இசை அத்தனை கச்சிதமாக அதனுடைய வேலையைச் செய்கிறது.

கவந்தாவின் சாலை வசதியில்லாத கரடுமுரடான அந்த குறிஞ்சி நிலப்பரப்பே ஒரு மர்மத்தையும் அமானுஷ்யத்தையும் தருகிறது. அனிஷ்லால் RS-இன் ஒளிப்பதிவு மனதோடு ஒரு கண்ணாமூச்சி ஆடுகிறது. சந்தி வேளையில், மங்கலான ஒளியில் தேவதர்ஷினி ஒரு கைக்குழந்தையோடு மலையேறும் காட்சியும், பின்னணி இசையும் ஓர் அமானுஷ்யமான பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அவ்வூரின் அமானுஷ்யத்தைக் கேட்டுணரும் கண் தெரியாத முதியவராக நடித்துள்ள ஜெயராஜன் கோழிக்கோடுவின் கதாபாத்திரம் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அப்பாத்திரத்தை அவர் அநாயாசமாக நடித்துள்ளார். படத்தில் வரும் இன்னொரு பாத்திரம், பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவ்வூரின் மிக உயரமான இடத்திலிருந்து அத்தனையையும் பார்த்துக் கொண்டிருப்பவர். காது லேசாகக் கேட்கும் அந்தப் பாத்திரத்தில் T.G.ரவி நடித்துள்ளார். ஸ்டீஃபனாக நடித்துள்ள திலீஷ் போத்தன், அஞ்சுவாக நடித்துள்ள மீரா வாசுதேவ், வார்டு மெம்பராக வரும் ஜாஃபர் இடுக்கி என அனைவரும் மிகப் பிரமாதமாக நடித்துள்ளனர். தமிழில் மொழிமாற்றம் செய்துள்ள எஸ்.ஆர்.வாசன் மிகச் சிறப்பாகத் தன் பங்கினை ஆற்றியுள்ளார்.

மலையாளப் படங்களுக்கே உரித்தான கடவுளிண்ட நிலப்பரப்பும், நடிகர்களின் இயல்பான நடிப்பும், எதார்த்தமான கதைக்களமும், இப்படத்திலும் தொடர்கிறது. அவர்களது கதைசொல்லல் பாணியில் உள்ள மெதுத்தன்மை (Slowness) இருந்தாலும், அது ஒரு குறையாக உறுத்தவில்லை. ஏனெனில் படத்தொகுப்பாளர் பிஜித் பாலாவின் கைவண்ணத்தில், 111 நிமிடங்கள்தான் படத்தின் கால அளவு உள்ளது. அதனால் தாமஸ் K. செபாஸ்டியனால், இப்படத்தைச் சிலிட்டத்துடன் (Compactness) நேர்த்தியாகக் கொண்டு வர முடிந்துள்ளது.

நல்ல (மலையாளப்) படங்களைத் திரையரங்கில் தவறவிடக்கூடாது என நினைப்பவர்கள் தவறவிடக்கூடாத படம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.