Shadow

“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, “ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த வகையில் நான் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றால் அது இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படங்களைத்தான். அவருடைய படங்களைப் பார்க்கும்போது எல்லாத் தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரிடம் எல்லாப் படங்களையும் என்டர்டெய்ன்மென்டாக வழங்கும் மேஜிக் இருக்கிறது. அந்த மேஜிக் இந்தப் படத்தில் இன்னும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாக இத்தகைய ஜானரிலான படங்களைத் தவறவிட்டிருக்கிறோம். அதை லீடர் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம்.

நான் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். லெஜண்ட் நடிக்கும் படத்தில் பணியாற்றும்போது, என்னைச் சந்திக்கும் பலரும் சிறப்பான இசையை வழங்குங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளனர். அவருடைய படத்தைக் குடும்ப ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து பார்ப்பார்கள். அதனால் பாடலையும் பின்னணி இசையையும் சிறப்பாக உருவாக்குங்கள் என அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில் இந்தப் படத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. திங்க் மியூசிக் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இயக்குநர் R.S. துரை செந்தில்குமார், “2022 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து லெஜண்ட் சரவணன் அவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தையைத் தொடங்கினேன். 5, 6 மாதங்கள் கழித்து தான் இப்படத்திற்கான பணிகளை இறுதி செய்து தொடங்கினோம். அந்தத் தருணத்தில் அவரைச் சந்தித்துப் பேசும் போதெல்லாம் அவர் ஆசைக்காகத் தான் நடிக்க வந்திருக்கிறார் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவருடனான தொடர் சந்திப்பில் அவரின் பேச்சு மூலம் சினிமாவைப் பற்றிய அனைத்து விஷயங்களை நுணுக்கமாகப் பார்க்கக் கூடியவர் அவர் என்பது தெரிந்தது. அதன் பிறகு தான் அவர் நடிக்க வந்தது ஆசையால் அல்ல என்பது புரிந்தது.

சாதாரணமாக அவருடனான சந்திப்பின்போது ஒருமுறை அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது சில இந்தி நடிகர்களின் போட்டோக்களை வீட்டில் ஒட்டி இருந்தாராம். அது தொடர்பாக அவரது அம்மா கேட்டபோது, ‘நான் இவர்களைப் போல் எதிர்காலத்தில் வரவேண்டும், வருவேன்’ என்றாராம். அதன் பிறகு அவர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், கடமைகளுக்காகவும் கடுமையாக உழைத்து உச்சத்தை எட்டி இருக்கிறார். இருந்தாலும் அந்த சிறுவனுடைய ஆசையை, கனவை ஒரு இளைஞனாக- இளைஞர்களுக்கான உத்வேகத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்து நடித்திருக்கிறார். இது எனக்கு உண்மையிலேயே சிறந்த முன்னுதாரணமாக இருந்தது.

அவருடன் பழகிய இந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய கடும் உழைப்பை நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரிடம் உள்ள அசாத்தியமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

படப்பிடிப்புத் தளங்களில் அவருடனான அனுபவம் ஒவ்வொன்றும் மறக்க முடியாதது. ஒவ்வொரு இயக்குநருக்கும் அல்டிமேட் கோல் (goal) என்னவென்றால், அவர் நினைத்ததை நினைத்த வகையில் உருவாக்கிட வேண்டும் என்பது தான். அதற்கு முழுமையான சுதந்திரமும், அனுமதியும் வழங்கும் தயாரிப்பாளர் தான் தேவை. அந்த வகையிலான ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், நான் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே கேட்டு செய்வதற்குத் தயாராக இருக்கக்கூடிய நடிகராகவும் அவர் இருந்தார். அவரின் இந்தத் துணிச்சலை கண்டு தான் நான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு மன நிறைவை அளித்திருக்கிறது” என்றார்.