32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காதல் ரீசெட் ரிப்பீட் – ஒரு musical story

Dinesh R சேலம் Published: 01/03/2026 4 நிமிட வாசிப்பு Updated: 06/03/2026 சினிமா
எழுத்து அளவு:

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையிசையுலகில் 25 ஆவது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ”1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனைச் சந்தித்தேன். கேமரா மேன் ஆர்.டி. ராஜசேகர் மூலமாக விளம்பரப் படத்திற்காக அவர் என்னைச் சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் ‘மின்னலே’ படத்தின் பணிகள் தொடங்கியது. அப்போது அந்தப் படத்தில் கதாநாயகன் மாதவன் புதிது. அப்போது ‘அலைபாயுதே’ படம் வெளியாகவில்லை. ரீமா சென் புது கதாநாயகி. அந்தப் படத்தில் டைரக்டர் புதுசு, கேமரா மேன் புதுசு, நானும் புதுசு. அந்தப் படத்திற்குத் தயாரிப்பாளர் முரளி மனோகர் தான் ஸ்டார். அவர் ‘ஜீன்ஸ்’ படத்தைத் தயாரித்திருந்தார்.

அந்தப் படத்தில் பணியாற்றும்போது பாடலாசிரியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்போது தாமரை என்ற புதிய பாடலாசிரியரையும் சேர்த்துக் கொண்டோம். இதன் பிறகு அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளியானது.‌ ‘மின்னலே’ திரைப்படம் தற்போது ரீ ரிலீசும் ஆனது.

இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கதைக்களம் என்று ஒன்று அமைந்து விட்டால், அதற்கு எந்த ஸ்டாரும் தேவையில்லை. அது எல்லோரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கி விடும். அது எல்லாரையும் பெரிய டெக்னீஷியன் ஆக்கிவிடும். சாதாரண நடிகர்களைப் பெரிய நடிகராகக் காண்பித்து விடும்.

‘மின்னலே’ படத்தில் புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினேன். நான் இதுவரை 64 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 65 ஆவது பாடகி தான் காயத்ரி ராஜா. அனைவரும் நன்றாக இருப்பதில் எனக்கு சந்தோஷம்.‌ 12 புதிய கதாநாயகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இது எனக்குப் பெருமையாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவர்கள் பிரபலமடைவதற்கு இசை உதவி செய்து இருக்கிறது.

ஒரு கதையும், இசையும், நல்ல வரிகளும் சேரும்போது மிகப்பெரிய அளவில் சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறது. இயக்குநர் விஜய் இசையை மனதில் வைத்து தான் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். அதற்கேற்ப மதன் கார்க்கியும் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் பல மாதங்களைச் செலவழித்திருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் விஜய், “அர்ஜுன் அசோகன், தமிழுக்குத்தான் அறிமுகமே தவிர இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்தப் படத்திற்கு அவரும் ஒரு பில்லர். அற்புதமாக நடித்திருக்கிறார். மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்தும் போது எதை உணர்ந்தேனோ, அதே போல்தான் ஜியா சங்கரை அறிமுகப்படுத்தும் போதும் இருந்தது. அவரை வைத்து முதல் காட்சியைப் படமாக்கும் போது அவரிடம் நீங்கள் தமிழ் சினிமாவில் நெடுநாள் பணியாற்றுவீர்கள் எனச் சொன்னேன்.‌ இப்போது சொல்கிறேன். அவர் இந்திய சினிமாவில் பணியாற்றி நல்ல இடத்தைத் தொடுவார். ஜியா, மராட்டியப் பெண். கடும் உழைப்பாளி. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை நான் சிங்கிள் ஷாட்டில் எடுத்தேன். அந்தக் காட்சியில் நடிப்பதற்காக ஆறு முதல் ஏழு நாட்கள் வரை பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்தப் படத்தின் கதையை என்னுடன் இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளரான ஆர். மகாதேவ் இணைந்து எழுதினார். அவர்தான் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பின், ‘இந்தக் கதை ஒரு மியூசிக்கல் கதை. இதை ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் உருவாக்க முடியாது. ஹாரிஸ் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும்’ என தயாரிப்பாளரிடம் கூறினேன். நான் அவருடைய மிகப் பெரிய ரசிகன். அவருடன் நாங்கள் பணியாற்றுவதைப் பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய பாடம்.‌

அவர் ஒவ்வொரு பாடலையும் ஒரு படமாகப் பார்க்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஒரு மாதம் எடுத்துக் கொண்டார். ஒரு மாதத்தில் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார். அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறார். இந்தப் படத்திற்கு அவரும் மிகப்பெரிய பில்லர். படத்தின் பின்னணி இசைக்காக பல மாதங்கள் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும் கவனம் செலுத்திச் செதுக்கியிருக்கிறார்.

இது ஒரு சாதாரண மனிதனின் கதை. ஹீரோ என்பது யார்? உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ. அதை நாம் முதலில் நம்ப வேண்டும். ஒருவருடைய தோற்றத்தைப் பார்த்தோ, அழகைப் பார்த்தோ ஏற்கப்படுவதில்லை. ஒருவருடைய மனதைப் பார்த்து தான் ரசிக்கிறோம். அதுதான் ஹீரோ என நினைக்கிறேன். அப்படி ஒரு நல்ல மனம் கொண்டவனின் கதை தான் இது” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.