
ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் – திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; முதல் முறை பார்த்ததுமே காதலைச் சொல்லி, அதை உறுதிபடுத்த உதட்டில் முத்தமே கொடுத்துவிடுவதால் நாயகனுக்கும் காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ..
நாயகனின் தந்தை லோகுவாக எம்.எஸ்.பாஸ்கர் செமயாக நடித்துள்ளார். கதாபாத்திரங்களின் டைமிங் டயலாக்கால், காமெடியில் ஸ்கோர் செய்யும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிப்பையும், உடற்மொழியையும் நகைச்சுவையோடு கலந்து தானேற்ற பாத்திரத்திற்கு அழகான உருவம் கொடுத்து அசத்தியுள்ளார் அனுபவமிக்க நடிகரான எம்.எஸ்.பாஸ்கர். சந்தானத்தின் அம்மாவாக நடித்த மீரா கிருஷ்ணனும் கூட தனது கவனமான வசன உச்சரிப்பால் ஈர்க்கிறார். இரண்டாம் பாதியில், எம்.எஸ்.பாஸ்கரை மிஸ் செய்யும் பொழுது, ஒரு காட்சியில் தோன்றித் தெறிக்க விட்டுவிடுகிறார்.
நாயகியின் தந்தையாகவும், நேர்மையான வட்டாச்சியராகவும் நடித்துள்ள யாட்டின் கார்யேகர் மிக நல்ல கதாபாத்திரத் தேர்வு. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டிற்குப் பிறகும், நிலைமையை அசால்ட்டாக கூலாக ஹேண்டில் செய்து அசத்துகிறார். ஆனந்தராமன் எனும் அந்தப் பாத்திற்கு அவர் மிகக் கச்சிதமான தேர்வு.
ஹீரோ அறிமுக பாடல், வில்லன்களைப் பறக்கவிடும் அதிரடி சண்டை போன்ற வழக்கமான பாணியில் இருந்து விலகி, முழு மூச்சாகக் காமெடியில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளார் சந்தானம். காமெடியும் அவரை மட்டுமே மையப்படுத்தியதாக இல்லாமல், அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் சரி சமமான ஸ்க்ரீன் ஸ்பேஸைத் தருவது சிறப்பு. அதுவும் படத்தின் நீளம் 108 நிமிடங்கள்தான் என்பது அதனினும் சிறப்பு.
‘காமெடி பஜார்’ மாறன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, கோலமாவு கோகிலாவில் டோனியாக நடித்துப் பரவலான கவனிப்பைப் பெற்ற கிங்ஸ்லி ஆகிய மூவரும் படத்தின் நகைச்சுவைக்கு முழுப் பொறுப்பேற்கின்றனர். நான் கடவுள் ராஜேந்திரனிடம் பணி புரியும் சொதப்பலான வேலையாள், சாவு வீட்டில் விசாரிப்பவரிடம் மரணத்திற்குக் காரணத்தை விளக்கிச் சொல்லும் கதாபாத்திரம், வாழைப்பழத்தை வயிற்றில் குத்திவிட்டுக் கொலை செய்ததாக நினைத்துத் தப்பியோடும் பாத்திரம் என படம் முழு நீள நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது. திரையரங்கில் சிரிப்பொலி கேட்டவண்ணமே இருக்கும். நான்-ஸ்டாப் லொள்ளு சபா காமெடி பார்த்த திருப்தி நிச்சயம்.