Search

கொளஞ்சி விமர்சனம்

Kolanji-movie-review

பெரியாரியவாதியான அப்பாசாமி, அவரது மூத்த மகன் கொளஞ்சி தவறு செய்யும்பொழுதெல்லாம் அடி வெளுத்து விடுகிறார். அதனால் கொளஞ்சி அவரது அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கிறான். அவர்களுக்கிடையில் பெரிதாய் ஏற்படும் விரிசல் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

கொளஞ்சியாக நடித்துள்ள பதின் பருவத்துச் சிறுவன் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். அரிவாளை அடமானம் வைத்து ஐஸ் வாங்குவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியையிடம் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்தாரெனத் தருவது என எண்ணற்ற சேட்டைகள் செய்கிறான் கொளஞ்சி. அதை அவரது தந்தை கண்டித்தால், அவருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை எனப் பிணக்கு கொள்கிறான்.

ராஜாஜ், நைனா சர்வாரின் காதல் அத்தியாயம் படத்தின் சுவாரசியத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை. தந்தை – மகன் உரசல் என்ற கருவில் பெரிதும் கவனம் செலுத்தாமல், ஆனால் அதைப் படத்தின் மையமாக வைத்துத் தைரியமாகப் படமெடுத்துள்ளார் இயக்குநர். அடிவாங்கியாக வரும் நசாத்தின் ரன்னிங் – கமென்ட்ரி மட்டும் ஆங்காங்கே பார்வையாளர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

படத்தின் தயாரிப்பாளரான மூடர் கூடம் நவீன், இயக்குநராகவே கேமியோ ரோல் செய்துள்ளார். செண்ட்ராயனைக் கொண்டு தமிழனின் மாண்பையும் வீரத்தையும் பேசும் பாடல் ஒன்றை இயக்குவதாக அவ்வத்தியாயம் தனியாக வந்து போகிறது. ‘கதைக்குத் தேவையில்லாத இந்தப் பாட்டு வேணாம்ய்யா’ என இயக்குநரிடம் சொல்லாமல், தயாரிப்பாளராய் தனது தாராளத்தை அப்பாட்டில் காட்டியுள்ளார் நவீன். சமுத்திரக்கனியின் ஜோடியாக சங்கவி நடித்துள்ளார். மகன்களோடோ, கணவனோடோ ஒரே ஒரு எமோஷனலான காட்சியோ, சீரியஸான காட்சியோ இல்லை.

கருப்புச் சட்டைக்காரராக சாதீயத் துவேஷம் கொண்டவரை விளாசித் தள்ளும் பாத்திரத்தில் சமுத்திரக்கனி வழக்கம் போல் கலக்கியுள்ளார்.
‘தாலி தான் உன்னை அடிமைப்படுத்துகிறது’ என சங்கவியிடம் சொல்லும் சமுத்திரக்கனி, மனைவியைக் கை நீட்டி அறைவதோடு மட்டுமில்லாமல் அதற்காகப் பெரிதும் வருந்திக் கொள்ளாத அக்மார்க் முற்போக்குவாதியாக உள்ளார். கருப்புக்கு எதிரி காவி என, சமுத்திரக்கனியை வம்புக்கிழுக்க வம்படியாக காவி வேட்டியணிந்த வேலப்பன் கதாபாத்திரம். இப்படியாக ஓபி அடிக்கும் திரைக்கதை, படத்தின் கருவிற்குத் தேவையான அப்பா – மகன் பிளவை அழுத்தமாகப் பதியாமல் சறுக்கியுள்ளது படம். திரைக்கதை, கொளஞ்சி மீதும் பரிவை வர வைக்கவில்லை, அப்பாசாமியான சமுத்திரக்கனி மீதும் பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை. சமூக நீதி என்பது சாதி பாகுபாடு பார்க்காதது மட்டுமல்ல, மகனிடம் அன்பாகப் பேசி அரவணைத்துச் செல்லும் ஆதிக்கமற்ற மனநிலையும் தான் என்பதை க்ளைமேக்ஸ்காக ஒதுக்கி வைத்துள்ளார் இயக்குநர் தன்ராம் சரவணன்.