தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடப் பார்ட்டிக்குச் செல்லும் கேஸி, பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். இறந்த கேஸி, சொர்க்கத்திற்கும் செல்லாமல், நரகத்திற்கும் செல்லாமல் இடைப்பட்ட ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். ஐந்து நாளில், அவளது மரணத்தில் பாதிக்கப்பட்ட அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்க்கையில் கார்டியன் ஏஞ்சலாக இருந்து உதவினால், மேலே சொர்க்கத்திற்குச் செல்லலாம். இல்லையேல் கீழே நரகத்திற்குச் செல்ல வேண்டி வருமென்று கேஸிக்குச் சொல்லப்படுகிறது.
கேஸியால், எவ்விதச் சக்திகளுமற்ற கார்டியன் ஏஞ்சலாக இருந்து தன் தோழிக்கும், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் உதவ முடிந்ததா என்பதே படத்தின் கதை.
இயக்குநர் ஸ்டீஃபன் ஹெரெக், தத்துவார்த்தமாகவும் இறங்காமல், முழுநீள நகைச்சுவையாகவும் இல்லாமல், சென்ட்டிமென்ட்டையும் கூட்டாமல், அனைத்துக்கும் பொதுவானதொரு இடைவெளியில் படத்தைக் கொண்டு போயுள்ளார். சீரியஸ் பட விரும்பிகளுக்கு ஒவ்வாமையைத் தந்தாலும், குழந்தைகளுடன் கண்டு பொழுதைப் போக்க ஏற்றதொரு படம்.
நட்பையும், உறவுகளுடனான பிணைப்பையும் நகைச்சுவையுடன் சொல்லியுள்ளனர். ஏனெனினும், வாழும் போது, உறவுகளுடன் கோபத்திலோ, புரிதலற்றத்தன்மையாலோ, காலத்தின் மீது பழியைப் போட்டோ, அவர்களை விட்டு விலகி நாம் தவற விடும் தருணங்கள் எத்தகைய முக்கியமானது என்பதைப் படம் அழுத்தமாகச் சொல்கிறது. இயற்கையின் விதிகள் மிகவும் கண்டிப்பானவை. கேஸிக்குக் கிடைத்தது போல் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. வாழும் காலத்திலேயே, சக மனிதர்களுடன் அனுசரணையுடன் வாழ்தலும், அன்பைப் பரப்புதலும், வாழும் காலத்திலேயே நம்மை கார்டியன் ஏஞ்சலாக்கும்.