
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி முதல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் 28ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் ஜீவா, ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் பா. விஃஜய் என்னிடம் சொல்லும் போது அவரிடம் ‘சங்கிலி புங்கிலி கதவ திற என்ற ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன்’ எனs சொன்னேன். கதையை முழுவதும் கேட்ட பிறகு, ஹாரர் என்பது கதை சொல்வதற்காகp பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற மிக்ஸ்டு ஜானரில் படங்கள் உருவாகும். வெளிநாடுகளில் ஹாரர் படம், ரொமான்டிக் படம் என ஒவ்வொன்றும் ஜானர் அடிப்படையில் இருக்கும். பா. விஜய் ‘அகத்தியா’ படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் தான் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நல்லதொரு மெசேஜும் இருக்கிறது. இந்த விஷயம் மக்களைச் சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம். அதற்காக ஹாரர், த்ரில்லர், காமெடி, ஆக்ஷன், அனிமேஷன், ஃபேன்டஸி முதலியவற்றின் கலவையாக அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாகக் குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதன்முறையாகத் தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராஃபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஒரு வருடம் காத்திருந்த பிறகு அண்மையில் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளைப் பார்த்தோம். உண்மையில் வியந்து போனோம். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.
இது போன்ற பிரம்மாண்டமான பொருட்செலவில் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களைத்தான் சந்திப்போம். அந்த வகையில் இந்தப் படத்தின் கதையை அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம். கதையை முழுவதுமாகக் கேட்டு உடனே தயாரிப்பதற்கும் ஒப்புக் கொண்டார். அந்தத் தருணத்திலேயே இந்தப் படத்திற்காக நாங்கள் படமாக்கியிருந்த காட்சிகளை அவருக்குக் காண்பித்தோம். எங்களுடைய இந்த அணுகுமுறையும் அவருக்குப் பிடித்திருந்தது. உண்மையிலேயே ஏராளமாகப் பொருட்செலவு செய்து தான் படத்தைத் தயாரித்திருக்கிறார். படத்தின் உருவாக்கத்தின் போது எந்த சமரசம் இல்லாமல் இயக்குநருக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தார். இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் இந்தப் படத்தின் விதை. அவரைச் சார்ந்து தான் இப்படத்தின் கதை நகரும். நாங்கள் தற்காலத்திலும், அவர் 1940களிலும் இருப்பார். அவர் உருவாக்கிய ஸ்கேரி ஹவுஸ் மூலமாகத்தான் கதை பயணிக்கும்.
நானும், நடிகர் ராஷி கண்ணாவும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் எனக்கு ஹிந்தித் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்து இருக்கிறார்” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், ”இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜீவா, இயக்குநர் பா. விஜயையும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரையும் அழைத்து எங்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். இப்படத்தின் கதையைச் சொன்னார்கள். எனக்குப் பிடித்திருந்தது. அப்போது கதைக்கு டைட்டில் வைக்கவில்லை. படத்தில் ஹீரோவுக்கு அகத்தியன் என பெயர். அதனால் படத்திற்கு ‘அகத்தியா’ எனப் பெயர் சூட்டினோம்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றார்கள். அதன் பிறகு இயக்குநரிடம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். கிராஃபிக்ஸ் வேலைகள் முடிந்தவுடன் பார்க்கலாம் என்றார். இந்தப் படத்தில் சிஜி மட்டுமே ஒன்றரை மணி நேரம். 14 தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டது படக்குழு. இரண்டு மாதத்திற்கு முன்புதான் அனைத்துப் பணிகளும் முடிவடைந்தது. அதன் பிறகு படத்தைப் பார்த்தோம். பார்த்தவுடன் எனக்கு முழுத் திருப்தி ஏற்பட்டது. சந்தோஷமாகவும் இருந்தது. எங்கள் நிறுவனம் இதுவரை 25 படங்களைத் தயாரித்திருக்கிறது. அதில் இந்தப் படம் தான் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு ஸ்பெஷலானது. படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் பா. விஜயிடமிருந்து இப்படி ஒரு படைப்பா என வியப்படைவீர்கள். இதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 780க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. பிவிஆர் மற்றும் சினி பொலிஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அகத்தியா’ திரைப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகி இருப்பதால் இந்தியா முழுவதும் வெளியாகிறது.
என்னுடைய திரைப்படத் தயாரிப்பு அனுபவத்தில் இந்தப் படத்தின் இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் தான் அதிக முறை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். இவர்கள் பட உருவாக்கத்தின் போது நடைபெறும் அனைத்து விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த படத்திற்கு பிறகு என்னுடைய தயாரிப்பில் உள்ள படங்களைக் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதில் வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் இடம்பெறும்.
என்னுடைய எல்லாத் திரைப்படத்தின் ஹிந்தி மொழி உரிமையை வேம் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், எனது இனிய நண்பருமான அனீஷ் அர்ஜுன் தேவ் தான் வாங்குவார். இந்தத் திரைப்படம் இந்தியிலும் வெற்றி பெறும் என்பதால் இந்தப் படத்தின் ஹிந்திப் பதிப்பு உரிமையை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தும் போது படத்தைப் பார்த்துவிட்டு, படத்திற்கு இணை தயாரிப்பாளராக வர விருப்பம் தெரிவித்தார். அவர் இணைந்த உடன் இந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமானதாக மாற்றம் பெற்றது. இந்தத் தருணத்தில் அவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.