Shadow

மீண்டும் ஏலியன்கள்

Alien: Covenant in Tamil

இயக்குநர் ரிட்லீ ஸ்காட், 1979இல் தனது ஏலியன் படம் மூலம் முதல் விதையைப் போட்டார். ஏலியன்ஸ் (1986), ஏலியன் 3 (1992), ஏலியன்: ரெசரக்ஷன் (1997), ப்ரொமீத்தியஸ் (2012) என ஐந்து படங்களைத் தொடர்ந்து, ஏலியன் தொடர் படங்களில் ஆறாவதாக வரவிருக்கிறது ‘ஏலியன்: காவெனன்ட்’. Covenant என்றால் உடன்படிக்கை எனப் பொருளாகும்; ஆனால், படத்தில் அது ஒரு விண்கப்பலின் பெயர்.

முதல் படத்திற்குப் பிறகு, மீண்டும் அத்தொடரின் நான்காவது படமான ப்ரோமோத்தியஸை 33 வருடங்கள் கழித்து 2012இல் இயக்கினார் ரிட்லீ ஸ்காட். ஏலியன் சீரிஸில் அவர் இயக்கும் மூன்றாவது படம் காவெனன்ட்டாகும். இத்தொடரில் வரவுள்ள அடுத்த படமான ‘ஏலியன்: அவெக்கனிங்’கையும் அவரே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரொமீத்தியஸ், காவெனன்ட், அவெக்கனிங் ஆகிய கடைசி மூன்று படங்களும், முதல் மூன்று படங்களின் ப்ரீக்வெல் (prequel) ஆகும்.

கதிர்வீச்சுப் புயலால் செயலிழுக்கும் காவெனன்ட் விண்கப்பலை ஆளரவமற்ற ஒரு கிரகத்தில் தரையிறக்குகின்றனர். அங்கே சின்தெட்டிக் ஹ்யூமனாய்ட் ரோபோவான டேவிடைச் சந்திக்கின்றனர். அந்தப் பயங்கரமான கிரகத்தின் உண்மையான சொரூபத்தை, அந்தக் குழுவினர் பார்க்க நேரிடுகிறது. பின் என்ன நேருகிறது என்பதுதான் கதை.

அசாசின்ஸ் க்ரீட் படத்தின் நாயகனான மைக்கேல் ஃபாஸ்பென்டர் இப்படத்திலும் நடித்துள்ளார். ப்ரொமீத்தியஸின் தொடர்ச்சியாக, டேவிட் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார். பிளேட் ரன்னர் (1982), க்ளாடியேட்டர் (2000), பிளாக் ஹாக் டெளன் (2001), அமெரிக்கன் கேங்ஸ்டர் (2007), தி மார்ஷியன் (2015) போன்ற படங்களை இயக்கியவர் ரிட்லீ ஸ்காட். ஆகையினால், ‘ஏலியன்: கோவெனன்ட்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாய் உள்ளது.

மே 12 அன்று, ஆங்கிலத்திலும் தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது.