Shadow

அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்

AssassinsCreed Review

அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்

க்ரீட் என்றால் நம்பிக்கை. அசாசின்ஸ்க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விருப்பம் போல் வாழுபவர்கள். சுதந்திர உணர்வோடு திரிபவர்கள். ஆனால், டெம்ப்ளர்ஸ்களோ அதீத ஒழுக்கக் கோட்பாடுகள் உடையவர்கள். மக்களின் சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உலகையே ஒழுக்கமாக மாற்றத் துடிப்பவர்கள். அப்பேராசை சாத்தியமாக அவர்களுக்கு அசாசின்களிடமுள்ள ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை தேவைப்படுகிறது. அதிலிருந்து தான் மனிதனின் முதல் ஒழுங்கீனச் செயல் பிறந்ததாகக் கருதுகிறார்கள். அவ்விதையை மட்டும் டெம்ப்ளர்ஸ்கள் அடைந்து விட்டால், அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒழுக்கமான உலகைக் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கின்றனர்.

ஆறு நூற்றாண்டுகளாக ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’-ஐத் தேடி வருகிறார்கள் டெம்ப்ளர்ஸ். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அக்கொய்லர் (Aquilar de Nerha) என்பவர் அதை மறைத்து விடுகிறார். இந்த நூற்றாண்டினைச் சேர்ந்த அவரது வம்சாவளி கால் லின்ச்சின் (Cal Lynch) டி.என்.ஏ.வில் இருந்து, அக்கொய்லரின் ஞாபகங்களைக் கிளிர்த்தெழச் செய்து ஆப்பிள் ஆஃப் ஈடனைக் கண்டுபிடிக்க நினைக்கின்றனர். அதற்காக கால் லின்ச்சை, நினைவுகளைப் பின்னோக்கிப் பயணிக்கச் செய்யும் அனிமஸ் எனும் இயந்திரத்தோடு பொருத்துகின்றனர்.

‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை, டெம்ப்ளர்ஸ்க்குக் கிடைத்ததா அல்லது தன்னை அசாசின் என உணரத் தொடங்கும் கால் லின்ச், அதைப் பாதுகாக்கிறானா என்பதுதான் படத்தின் கதை.

முதல் காட்சியில், கழுகினோடே பறக்கும் கேமிராவின் கோணம் அலாதியான ஓர் உணர்வைத் தருகிறது. கதை சம காலத்தில் இருந்து, 15 ஆம் நூற்றாண்டு ஸ்பெயின்க்குப் போகும் பொழுதெல்லாம், மலைகளின் மேலே உயரத்தில் பறக்கும் கழுகோடு காட்சிக்குள் செல்லும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மேலே பறத்தல் என்பதைச் சுதந்திர உணர்விற்கான குறியீடாகக் கொள்ளலாம். அந்தச் சுதந்திரத்தைத் தக்க வைக்கப் போராடும் அசாசினாக நடித்திருக்கும் மைக்கேல் ஃபாஸ்பென்டர் மிகச் சரியான தேர்வு. அனிமஸோடு பொருத்தப்பட்டு, அவரது ஞாபகம் பின்னோக்கிப் போய் ஸ்பெயினில் சண்டையிடும் அதே வேளையில், அவர் ஆய்வுக் கூடத்திலும் அச்சண்டையை நிகழ்த்திக் காட்டுகிறார். அழகாக இரு வேறு காலத்தையும் பொருத்திப் புரிய வைக்கின்றனர்.

ஸ்பெயினின் புராதனக் கட்டடங்களில் நாயகன் குதித்தோடும் பொழுது, வீடியோ கேம் விளையாடுகிறோமோ என்ற மனப்பிரமையை அளிக்கிறது. இந்தப் படத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்காக டேமியன் வால்டர்ஸ் (Damien Walters) உபயோகப்படுத்தப்பட்டுள்ளார் (இவரது பெயரை யூ-ட்யூபில் கொடுத்துப் பார்க்கவும். உயரத்தில் இருந்து குதிக்கும் free fall கலையில் வித்தகர்). இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களையும் அதிக கவனத்துடன் பார்த்துப் படமாக்கியுள்ளனர். படத்தின் உண்மைத்தன்மையைத் தக்க வைப்பதில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தனது பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ஜஸ்டின் கர்ஸெல் (Justin Kurzel). அவரது சகோதரர் ஜெட் கர்ஸெல் (Jed Kurzel) இசையமைத்துள்ளார்.

படம் அதன் சாகசத்தால் கவர்ந்தாலும், கதையாக ஈர்க்கத் தவற விடுகிறது.