

குடித்து விட்டு போலீஸ் ஜீப்பினை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியதால், இடைக்கால பணி நீக்கத்தில் உள்ளார் காவல்துறை அதிகாரியான இந்திரா. குடிப்பழக்கம் அதிகமானதால் கண் பார்வையையும் இழந்து விடுகிறார் இந்திரா. அவரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக் கொள்ளும் அவரது காதல் மனைவி கயல் பூட்டிய வீட்டிற்குள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். வேலை, கண் பார்வை, காதல் மனைவி என அனைத்தையும் இழந்து வேதனையில் வாடும் கோபக்கார இந்திரா கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி கைக்கூடியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நாயகியாகக் கயலெனும் பாத்திரத்தில் மெஹ்ரீன் பிர்சாடா நடித்துள்ளார். குடிகார கணவனிடம் பாராமுகமாக இருப்பதும், கண்பார்வை இழந்த கணவனை அக்கறையாகப் பார்த்துக் கொள்வதும் எனச் சிறப்பாக நடித்துள்ளார்.
இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ-பேக்கில், வேலைக்காரப் பெண் மதியாக அனிகா நடித்துள்ளார். பாந்தமான கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அனிகாவின் காதலராக நடித்தவர் மிரட்டியுள்ளார். படத்தில் மிரட்டியுள்ள இன்னொரு நபர், சைக்கோ கொலைகாரன் அபிமன்யுவாக நடித்துள்ள சுனிலாவார். மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வரும் கல்யாண் மாஸ்டர் ரசிக்க வைக்கிறார்.
பதற்றம், ஏமாற்றம், இயலாமை எனக் கலவையான மனநிலையில் உள்ள இந்திரன் பாத்திரத்தில் வசந்த் ரவி நடித்துள்ளார். முன்பாதியில் கோபத்துடனும், பின்பாதியில் குற்றவுணர்வுடன் வரும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் வசந்த் ரவி. படம் சீரியல் கொலைகளைச் சுற்றி நகராமல், படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு இந்திரனைச் சுற்றியே நடக்கிறது. பிரபு ராகவின் ஒளிப்பதிவும், இந்திரனையும், அவனது மனநிலையையும், அதற்கான பாவனைகளையும் நெருக்கமாகப் பிரதிபலித்துள்ளது. த்ரில்லர் படத்திற்கான கோணங்கள் மூலம் வலுவான அடித்தளத்தையும் ஒளிப்பதிவு அமைத்துக் கொடுத்துள்ளது. அதைத் தக்க வைக்கிறது அஜ்மல் தஹ்சீனின் பின்னணி இசை.
கதையாக ஒரு நிறைவை அளிக்காவிடினும், திரைக்கதையின் ஓட்டத்தால் அதைச் சாமர்த்தியமாக ஈடு செய்துவிடுகிறார் இயக்குநர் சபரீஷ் நந்தா. பிரியமானவரின் இழப்பும், குற்றவுணர்வும்தான் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை எனச் சொல்லியுள்ளார் சபரீஷ்.

